

குமரி, கேரள எல்லைப் பகுதியான களியக்காவிளையை கேரள போலீஸார் மூடியுள்ளனர். இதனால் அத்தியாவசியத் தேவைக்காகச் செல்லும் வாகனங்களும், நோயாளிகளும் கேரள எல்லையில் தடுத்து நிறுத்தப்படுகின்றனர்..
ஆம்புலன்ஸும் களியக்காவிளையுடன் நிறுத்தப்படுவதால் மக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.
கன்னியாகுமரி, கேரள எல்லையான களியக்காவிளையில் கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக தமிழக, கேரள போலீஸார் சுகாதாரத்துறை அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
பால், காய்கறி, மருத்துவ சேவைக்கான வாகனங்கள், ஆம்புலன்ஸ்கள் போன்றவை அனுமதிக்கப்பட்டு வந்தன.
இந்நிலையில் கடந்த இரு நாட்களாக அத்தியாவசிய தேவைக்காக செல்லும் காய்கறி, பால், உணவு பொருட்களை ஏற்றி செல்லும் வாகனங்கள், ஆம்புலன்ஸ போன்ற வாகனங்களையும் கேரளாவிற்கு செல்லாமல் களியக்காவிளை, மற்றும் இஞ்சிவிளை சோதனை சாவடிகளில் கேரளா போலீஸார் தடுத்து நிறுத்தி திருப்பி அனுப்பி வருகின்றனர்.
தமிழகத்தில் வேகமாக கரோனா பரவி வருவதாக கூறி கேரளாவிற்கு செல்லும் வாகனங்களின் அனுமதி மறுக்கப்படுகிறது.
இதனால் கேரள மாநிலத்தில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெறுவதற்காக செல்லும் நோயாளிகள் பெரும் சிரமம் அடைந்துள்ளனர்.
கேரளாவில் இருந்து வரும் நோயாளிகள், மற்றும் மருத்துவமனையில் இறந்தவர்களின் உடலை ஏற்றி வரும் வாகனங்களையும் கேரள எல்லையான களியக்காவிளை, மற்றும் இஞ்சிவிளை சோதனை சாவடியுடன் நிறுத்தி, குமரி மாவட்டத்தில் இருந்து தமிழக ஆம்புலன்ஸ் சென்ற பின்பே உடலை கேரள ஆம்புலன்சில் இருந்து மாற்றி அனுப்புகின்றனர்.
இதேபோல் தமிழகத்தில் இருந்து கேரளாவிற்குச் செல்லும் ஆம்புலன்சையும் அங்கு அனுமதிப்பதில்லை. கேரளாவில் இருந்து வந்த ஆம்புலன்ஸில் மாற்றிய பின்னரே பல கெடுபிடிகளுக்கு மத்தியில் அனுமதிக்கும் நிலை உள்ளது.
இதுகுறித்து குமரி மாவட்டத்தை சேர்ந்தோர் கூறுகையில்; கேரள முதல்வர் பினராய் விஜயன் தமிழக, கேரள எல்லைகள் மூடப்படாது. மருத்துவம், அத்தியாவசிய சேவைகள் இரு மாநிலங்களுக்கும் தொர்ட்நது செயல்படும்.
சகோதரத்துவம் நிலைநாட்டப்படும் என சமூக லைத்தளங்களில் பதிவிட்டிருந்தார்.
இந்நிலையில் அத்தியாவசியத் தேவைக்கு செல்வோர்கள் மட்டுமின்றி, நோயாளிகள், இறந்தவர்கள் சடலங்களை ஏற்றி செல்லும் ஆம்புலன்ஸ் ஆகியவற்றிற்கு கூட நோய்தொற்றை காரணம் காட்டி அனுமதி மறுக்கப்படுவதால் மக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.
எனவே தமிழக, கேரள அரசுகள் பேச்சுவார்த்தை நடத்தி இதற்கு தீர்வுகாண வேண்டும் என்றனர்.