நிவாரணப் பொருட்கள் வழங்குவது குறித்து உயர் நீதிமன்றம் உத்தரவு: ஆளும் கட்சியின் சர்வாதிகாரப் போக்கைத் தடுத்து நிறுத்தியுள்ளது; கே.எஸ்.அழகிரி

கே.எஸ்.அழகிரி: கோப்புப்படம்
கே.எஸ்.அழகிரி: கோப்புப்படம்
Updated on
1 min read

அரசியல் கட்சிகள் மக்கள் நலன் சார்ந்த நிவாரணப் பணிகளை வழங்க சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி வழங்கியிருப்பதை முழு மனதோடு வரவேற்கிறேன் என, தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக, கே.எஸ்.அழகிரி இன்று (ஏப்.16) வெளியிட்ட அறிக்கையில், "தமிழகத்தில் கரோனா நோயினாலும் மக்கள் ஊரடங்கினாலும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தன்னார்வத் தொண்டு நிறுவனங்களோ, அரசியல் கட்சிகளோ நேரடியாக நிவாரண உதவிகளையோ, உணவோ வழங்குவதற்கு தடை விதித்து தமிழக அரசு ஆணை பிறப்பித்திருந்தது.

அப்படி வழங்க விரும்புவர்கள் 48 மணிநேரத்துக்கு முன்னதாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் எழுத்துப்பூர்வமாக முன் அனுமதி பெற வேண்டும் என்றும் அந்த ஆணையில் கூறப்பட்டிருந்தது. இதை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் திமுக தொடர்ந்த வழக்கில் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் அதில் இணைத்துக் கொண்டன.

இந்த வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் வழங்கியுள்ள அற்புதமான தீர்ப்பை தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி சார்பாக மனதார வரவேற்கிறேன். நீதிமன்றத்தையும் பாராட்டுகிறேன்.

சென்னை உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில், பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகள் வழங்குவதற்கு 48 மணி நேரத்துக்கு முன்பாக தகவல் தெரிவித்தால் போதும். அனுமதி தேவையில்லை. உணவு வழங்க எந்த அனுமதியும் பெறத் தேவையில்லை என்று மிகத் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.

கரோனா நோயினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆளும் கட்சியின் அதிகார வர்க்கத்தின் மூலமாகத்தான் நிவாரண உதவிகள் வழங்கப்படும் என்ற பிடிவாதத்தை இந்த தீர்ப்பு தகர்த்திருக்கிறது. அதைத்தவிர, தன்னார்வத் தொண்டு நிறுவனங்களும், அரசியல் கட்சிகளும் வழங்கும் எத்தகைய நிவாரண உதவிகளையும் தடுக்க வேண்டும் என்ற அரசியல் காழ்ப்புணர்ச்சியோடு பிறப்பிக்கப்பட்ட மக்கள் நலனுக்கு விரோதமான தமிழக அரசின் ஆணையையும் நீதிமன்றம் ரத்து செய்திருக்கிறது.

இதன் மூலம் நீதிமன்றம் பிறப்பித்த வழிகாட்டு நெறிமுறைகளின்படி, நிவாரண உதவிகளை 3 பேர் மற்றும் ஒரு ஓட்டுநர் உள்ளிட்ட 4 பேர் வழங்குவதற்கான அனுமதியை நீதிமன்றம் வழங்கியிருக்கிறது.

அரசியல் கட்சிகளுக்கும், தன்னார்வத் தொண்டு நிறுவனங்களுக்கும் ஜனநாயக நெறிமுறைப்படியும், சட்டத்தின்படியும் வழங்கப்பட்டு இருக்கிற உரிமையை அதிமுக அரசு பறிக்க முயன்றது. ஆனால், ஆளும் கட்சியின் சர்வாதிகாரப் போக்கை தடுத்து நிறுத்தி ஜனநாயகத்தின் அடிப்படையில் அரசியல் கட்சிகள் மக்கள் நலன் சார்ந்த நிவாரண பணிகளை வழங்க சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி வழங்கியிருப்பதை முழு மனதோடு வரவேற்கிறேன்" என கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in