

விழுப்புரம் மாவட்டத்தில் மூச்சுத்திணறலால் நேற்று உயிரிழந்தவருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
விழுப்புரம் மாவட்டத்தில் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட.23 பேரில் ஒருவர் கடந்த சில நாட்களுக்கு முன் உயிரிழந்தார்.
விழுப்புரம் மாவட்டத்தை மத்திய அரசு 'ஹாட் ஸ்பாட்' பகுதியாக அறிவித்துள்ள நிலையில், விழுப்புரம் நகரின் விரிவாக்கப் பகுதியில் வசிக்கும் 57 வயதுடைய ஒருவர் நேற்று (ஏப்.15) காய்ச்சல் மற்றும் மூச்சுத்திணறல் பாதிப்பால் தனியார் மருத்துவமனைக்கு வந்துள்ளார்.
அவரை பரிசோதித்த மருத்துவர்கள் மேல் சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரிக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு சந்தேகத்தின் பேரில் கரோனா வார்டில் அவரை அனுமதித்து மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வந்தனர்.
இந்நிலையில், அவர் சிகிச்சை பலனின்றி நேற்று இரவு உயிரிழந்தார். அவருக்கு மேற்கொண்ட சோதனையில் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு இருப்பதாக சுகாதாரத்துறையினர் தெரிவித்தனர்.
ஊரடங்கு அமல்படுத்திய பின்பு தன் உறவினரின் துக்க நிகழ்வில் கலந்துகொண்டதாகவும், அப்போது அவருக்கு கரோனா தொற்று ஏற்பட்டு இருக்கலாம் என்றும் போலீஸாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இது குறித்து விழுப்புரம்.மாவட்ட நிர்வாகம் இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை என்பது குறிப்பிடதக்கது.