

கரோனாவால் பாதிக்கப்பட்டு, தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற 2 பேர் குணமடைந்ததை அடுத்து வீடுகளுக்கு அனுப்பிவைக்கப்பட்டனர்.
தூத்துக்குடி மாவட்டத்தில் 26 பேருக்கு கரோனா உறுதிசெய்யப்பட்டது. அவர்களில், தூத்துக்குடி போல்டன்புரத்தை சேர்ந்த 72 வயது மூதாட்டி இறந்தார்.
திருநெல்வேலி அரசு மருத்துவனையில் 5 பேரும், தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் 20 பேரும் அனுமதிக்கப்பட்டிருந்தனர். அவர்களில், செய்துங்கநல்லூரைச் சேர்ந்த ஒருவர் குணமடைந்ததால் திருநெல்வேலி அரசு மருத்துவமனையிலிருந்து கடந்த இரு தினங்கருக்கு முன்பு வீடு திரும்பினார்.
இந்நிலையில், தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கரோனா பிரிவில் சிகிச்சை பெற்றுவந்த காயல்பட்டினத்தைச் சோ்ந்த அரசு மருத்துவர் மற்றும் அதே பகுதியைச் சோ்ந்த மற்றொருவர் குணமடைந்ததையடுத்து நேற்று வீடுகளுக்கு அனுப்பப்பட்டனர்.
இவர்கள் கரோனா அறிகுறியுடன் கடந்த மார்ச் 30-ல் அனுமதிக்கப்பட்ட நிலையில், தொடர் சிகிச்சைக்குப் பிறகு இருமுறை நடத்தப்பட்ட ரத்தப் பரிசோதனையில் குணமானது தெரியவந்ததால் வீடுகளுக்கு அனுப்பிவைக்கப்படுவதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இதையடுத்து, ஆட்சியர் சந்தீப் நந்தூரி தலைமையில், இருவருக்கும் பழங்கள் கொடுத்து வழியனுப்பி வைக்கப்பட்டனர். நிகழ்ச்சியில், மருத்துவமனை டீன் திருவாசகமணி, உறைவிட மருத்துவ அலுவலர் சைலஸ் ஜெயமணி, மருத்துவர்கள் பங்கேற்றனர்.
பிறகு, செய்தியாளர்களிடம் ஆட்சியர் கூறியது: மாவட்டத்தில் கடந்த 3 நாள்களாக யாருக்கும் கரோனா தொற்று இல்லை. எனினும், தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
அதன்படி, நாள்தோறும் 150 பேருக்கு ரத்த மாதிரி சேகரிக்கப்பட்டு சோதனை நடத்தப்படுகிறது. சிகிச்சை முடிந்து வீடுதிரும்பிய 2 பேரும் தொடர்ந்து 14 நாள்கள் வீட்டில் தனிமைப்படுத்திக்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளன் என்றார்.