Published : 16 Apr 2020 07:48 AM
Last Updated : 16 Apr 2020 07:48 AM

பல ஆயிரம் ஏக்கர் முருங்கை சாகுபடி காப்பாற்றப்படுமா?- திருப்பூர் மாவட்ட நிர்வாகத்திடம் விவசாயிகள் எதிர்பார்ப்பு

மூலனூரில் மரத்திலிருந்து பறிக்கப்பட்ட முருங்கைக் காய்கள்.

திருப்பூர்

திருப்பூர் மாவட்டம் மூலனூர், தாராபுரம், வெள்ளக்கோவில் ஆகிய பகுதிகளில் பயிரிடப்பட்டுள்ள முருங்கைக் காய்களுக்கு போதிய விலை கிடைக்காததால் விவசாயிகளுக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து நேர்மை மக்கள் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் பழ.ரகுபதி கூறியதாவது:

தண்ணீர் வசதி குறைந்த பகுதிகளில், சொட்டு நீர் பாசனம் மூலம் முருங்கை விவசாயம் செய்யப்படுகிறது. முத்தூர், வெள்ளக்கோவில், மூலனூர், தாராபுரம், உப்பாறு ஆகிய பகுதிகளில் முருங்கைக் காய், முருங்கை இலை தற்போது அறுவடை காலம் தொடங்கியுள்ளது. கரோனா வைரஸ் தொற்று காரணமாக விற்பனை சந்தைகள் அனைத்தும் மூடப்பட்டதால், மரங்களில் காய்த்து இருக்கும் முருங்கைக் காயை பறித்து, சந்தைகளுக்கு அனுப்ப முடியாமல் விவசாயிகள் திணறி வருகின்றனர். இதனால் விவசாயிகளுக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. வாகனம் வைத்து சந்தைகளுக்கு அனுப்ப முடியாத சிரமத்தை விவசாயிகள் சந்தித்துள்ளனர் என்றார்.

வாகன வசதி தேவை

முருங்கை விவசாயி லிங்கசாமி கூறிய தாவது: திருப்பூர் மாவட்டத்தில் தினமும் 30 டன் முருங்கைக் காய் வெளி மாவட்டங்களுக்கும், கேரளா, கர்நாடகம் உள்ளிட்ட மாநிலங்களுக்கும் அனுப்பி வைக்கப்படுவது வழக்கம்.

ஊரடங்கு தொடங்கும் முன்பு, கிலோ ரூ.13-க்கு விவசாயிகளிடம் கொள்முதல் செய்யப்பட்டது. தற்போது அந்த விலைகூட கிடைப்பதில்லை. இதனால் முருங்கைக் காயை பறிக்காமல் மரத்திலேயே விட்டுவிட்டனர்.

முருங்கைக் காயை சந்தைகளுக்கு கொண்டு செல்ல, மாவட்ட நிர்வாகம் உரிய வாகன ஏற்பாடுகளை செய்து தரவேண்டும் அல்லது தற்போது பல வகையான காய்கறிகள் கொண்ட தொகுப்பு பையில் முருங்கைக் காயை பிரதானமாக சேர்க்க வேண்டும்.இதற்கு தோட்டக்கலைத் துறை மூலம், நியாயமான விலையில் மாவட்ட நிர்வாகம் கொள்முதல் செய்து, விவசாயிகளின் பெரும் நஷ்டத்தை தவிர்க்க வேண்டும், என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x