

கரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் வகையில் ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளதால், மக்கள் வெளியில் செல்ல முடியாமல் தங்களுக்குத் தேவையான பொருட்களை வீட்டுக்கு அருகிலுள்ள கடைகளிலேயே வாங்குவதால், இந்த கடைகளுக்கு தற்போது மக்களிடையே மவுசு அதிகரித்துள்ளது.
கரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் வகையில் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவை மே 3-ம் தேதி வரை நீட்டித்து பிரதமர் உத்தரவிட்டுள்ளார்.
இந்நிலையில், கடந்த 22 நாட்க ளுக்கு மேலாக ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், பொதுப்போக்குவரத்துகளான பேருந்து, ரயில் மட்டுமல்லாது மற்ற வாகனங்களின் இயக்கங்களும் தடை செய்யப்பட்டுள்ளன. மளிகை, பால், காய்கறி உள்ளிட்ட அத்தி யாவசியக் கடைகள் தவிர மற்ற அனைத்து வர்த்தக நிறுவனங்களும் மூடப்பட்டுள்ளன.
இதனால், தங்களுக்கு அன்றாடம் தேவைப்படும் அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் காய்கறிகளை வீட்டுக்கு அருகில் உள்ள சிறு கடை களிலேயே பொதுமக்கள் வாங்கி வருகின்றனர். பெருநகரங்கள் மட்டுமின்றி, மாவட்ட தலைநகர், வட்டார அளவிலும் ஆன்லைன் வர்த்தகம் பரந்து விரிந்துள்ள நிலையில் எலெக்ட்ரானிக்ஸ், வீட்டு உபயோகப் பொருட்கள், ஆடைகள் மட்டுமின்றி அரிசி, பருப்பு, சோப்பு வரை அனைத்தையும் ஆன்லைனில் அல்லது பெரிய மால் களில் வாங்குவோர் எண்ணிக்கை அதிகரித்து வந்தது.
இந்நிலையில், கரோனாவால் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையில் சிறு மளிகைக் கடைகள் மீண்டும் வாழ்வு பெறத் தொடங்கியுள்ளன. இக்கடைகளில் மக்கள் தினமும் பொருட்களை வாங்குவதைக் காணமுடிகிறது.
இதுகுறித்து, திருச்சி மாவட்டம் கல்லணை சாலையில் சிறிய மளிகைக் கடைக்கு பொருட்களை வாங்க வந்த சண்முகவேல் என்பவர், ‘இந்து தமிழ்’ நாளிதழிடம் கூறியது: வழக்கமாக சூப்பர் மார்க் கெட்டுக்கு சென்றுதான் மளிகைப் பொருட்களை வாங்கி வருவேன்.
தற்போது செல்ல அனுமதி யில்லாததால், வீட்டுக்கு அருகி லுள்ள கடையிலேயே தேவையான பொருட்களை வாங்கி வருகிறேன். விலை சற்று கூடுதலாகத்தான் உள் ளது. மேலும், நாம் கேட்கும் நிறுவனத்தின் பொருட்களும் கிடைப்பதில்லை. இருப்பினும், அரசின் அறிவுறுத்தலின்பேரில் வெளியில் அதிக தூரம் செல்லாமல் வீட்டுக்கு அருகிலேயே கிடைக்கும் பொருட்களை வாங்கிக்கொள்கிறேன் என்றார்.
திருவெறும்பூரைச் சேர்ந்த சிறு மளிகைக் கடை உரிமையாளர் குமார் கூறியது: ஏற்கெனவே கூலித் தொழிலா ளர்கள், ஏழை, எளிய மக்கள் மட்டுமே சிறுகடைகளில் அன்றாடம் தங்களுக்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்களை வாங்குவார்கள்.
தற்போது ஊரடங்கு அமலில் உள்ளதால், வழக்கமாக சூப்பர் மார்க்கெட்டுகள், நகரில் உள்ள பெரிய மளிகைக் கடைகளில் பொருட்கள் வாங்குபவர்கள் கூட சிறுகடைகளுக்கு வருகின்றனர். இதனால், வியாபாரம் அதிகரித் துள்ளது.
ஊரடங்கு உத்தரவால் சிறு கடைகளுக்கு மவுசு அதிகரித் திருந்தாலும், சமூக விலகல் குறித்த விழிப்புணர்வு இல்லாமல் மக்கள் கூட்டமாக நிற்கின்றனர். அரசும், காவல் துறையும் எத்தனை தான் கூறினாலும் மக்களிடம் விழிப்புணர்வு இல்லை. சற்று விலகி நின்று, காத்திருந்து பொருட்களை வாங்கிச் செல்ல முன்வர வேண்டும். இல்லா விட்டால் அது, ஊரடங்கு உத்தரவின் நோக்கத்தையே சிதைப்பதாகிவிடும் என்றார்.