

கட்டுமானப் பணிகளை மீண்டும் தொடங்க அனுமதி அளிப்பது குறித்து மத்திய அரசின் விதி முறைகளின்படி பரிசீலித்து முடிவு எடுக்கப்படும் என்று துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.
சென்னை தலைமைச் செயலகத்தில் துணை முதல்வரைகிரெடாய் அமைப்பின் நிர்வாகிகள் நேற்று சந்தித்துப்பேசினர். அப்போது, ஊரடங்குஉத்தரவால் தமிழகத்தில் கட்டுமானத் தொழில்கள் பாதிப்படைந்துள்ளது குறித்தும், அவற்றை மீண்டும் தொடங்குவது குறித்தும் கோரிக்கை மனு அளித்தனர்.
கட்டுமானப் பணிகளை வெளிமாநில தொழிலாளர்கள் மூலம்மீண்டும் தொடங்க அனுமதிஅளிக்க வேண்டும். கட்டுமானப்பணிக்கு தேவையான உபகரணங்கள் கொண்டு செல்லவும், அலுவலகப் பணியாளர்கள் வந்து செல்லவும் வாகன அனுமதி வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.
அவர்களுக்கு பதிலளித்த துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், ‘‘மத்திய அரசின் விதிமுறைகளின்படி பரிசீலித்து கட்டுமானப் பணிகளை மீண்டும் தொடங்க தமிழக அரசின் சார்பில் நடவடிக்கை எடுக்கப்படும். கட்டுமானத் தொழிலில் ஈடுபட்டுள்ளவெளிமாநில தொழிலாளர்கள்வெளியில் செல்வதைத் தவிர்க்கும் வகையில், தேவையானகாய்கறிகள், பழங்கள் உள்ளிட்டவை கோயம்பேடு சந்தையில் இருந்து வாகனங்கள் மூலம் தினமும் அவர்கள் இருக்கும் இடத்துக்கே கொண்டு சென்று வழங்கப்படும்’’ என்று தெரிவித்தார்.
இந்த சந்திப்பின்போது, வீட்டு வசதித் துறை செயலர் ராஜேஷ் லக்கானி, சென்னை பெருநகர வளர்ச்சிக் குழும உறுப்பினர் -செயலர் டி.கார்த்திகேயன், கிரெடாய் அமைப்பின் தமிழக தலைவர் எஸ்.ஸ்ரீதரன், சென்னை கிரெடாய் தலைவர் பதாம் துகார், முன்னாள் தலைவர்கள் ஹபீப், சுரேஷ்கிருஷ்ணன் மற்றும் செயலர் எம்.ஆறுமுகம் ஆகியோர் உடனிருந்தனர்.