

ஊரடங்கால் ஹோட்டல்கள், தள்ளுவண்டி கடைகள் செயல்படாததோடு மனிதர்களும் வீட்டை விட்டு வெளியே வராததால்உணவு, தண்ணீர் கிடைக்காமல் தெருநாய்கள், தன்னோட இனத்தை தானே அடித்துச் சாப்பிடும் ஆக்ரோஷ மனநிலைக்கு மாறுவதாக கால்நடை பராமரிப்புத் துறை மருத்துவர்கள் அதிர்ச்சித் தகவலை தெரிவித்துள்ளனர்.
நாய்கள், மனிதனைச் சார்ந்து வாழக்கூடிய ஓர் உயிரினம். ஆரம்பக்காலக்கட்டத்தில் தோட்டங்கள் மற்றும் வீட்டுக்காவலுக்கும், வேட்டைக்காகவும் மனிதர்கள் நாட்டு நாய்களை வளர்த்தனர். காலப்போக்கில், வீட்டுக் காவலுக்கும், தோட்டக் காவலுக்கும் மனிதர்கள் நியமிக்கப்பட்டனர்.
அதனால்,நாட்டுநாய்கள் பயன்பாடு குறைய ஆரம்பித்தன. மனிதர்கள், வீடுகளில் தங்கள் பொழுதுப்போக்கிற்காகவும், நடைப்பயிற்சி செல்லும்போது துணைக்கு அழைத்து செல்வதற்காகவும் வெளிநாட்டு நாய்களை வாங்கி செல்லப்பிராணிகளாக வளர்க்க ஆரம்பித்துவிட்டனர்.
நாட்டு நாய்கள் கைவிடப்பட்டு தெரு நாய்களாகி சாலையோரங்களில் வசிக்கின்றன. இந்த நாய்கள், வீடுகளில் மனிதர்கள் போடும் மீத உணவுகள், ஹோட்டல்களில் வீணாகும் உணவுக் கழிவுகளை சாப்பிட்டு உயிர் வாழ்ந்து வந்தன.
2015-ம் ஆண்டு கணக்கெடுப்புபடி மதுரையில் மட்டுமே 47 ஆயிரம் தெருநாய்கள் உள்ளன. தற்போது தமிழக அளவில் 2 கோடிக்கும் மேலான தெருநாய்கள் உள்ளதாகக் கூறப்படுகிறது.
தற்போது ‘கரோனா’ ஊரடங்கால் மனிதர்கள் வீடுகளை விட்டு வெளியே வருவதில்லை. ஹோட்டல்கள், தள்ளுவண்டி கடைகள்,பழக்கடைகள் உள்ளிட்ட அனைத்து உணவுக் கடைகளும் அடைக்கப்பட்டுவிட்டன.
அதனால், தெருநாய்கள் உணவு, தண்ணீர் கிடைக்காமல் சாலைகளில், தெருக்களில் பட்டினியால் ஆக்ரோஷ மனநிலையை அடைந்துள்ளன. மனிதர்களை தெருக்களில், சாலைகளில் கண்டாலே துரத்த ஆரம்பித்துவிட்டன. அதுபோல், தெருநாய்கள், அவைளுக்குள்ளாகவே சண்டைப்போடுவதும் அதிகரித்துள்ளன.
இதுகுறித்து மதுரை அரசு கால்நடை நோய் புலனாய்வு பிரிவு உதவி இயக்குனர் டாக்டர் சரவணன் கூறுகையில், ‘‘பட்டினியால் தெருநாய்கள் ஆக்ரோஷ மனநிலையை அடைய வாய்ப்புள்ளது.
ஒரு கட்டத்தில் அதன் குட்டிகளையும் அடித்து சாப்பிடும். மற்ற நாய்களையும் தாக்கி அடித்து சாப்பிடத் தொடங்கிவிடும். இப்படிப் பசியால் தெருநாய்கள் தன் இனத்தையே அடித்து சாப்பிடும் மனநிலைக்கு மாறும். மனிதர்களைக் கண்டாலே துரத்தும்.
தற்போது அதை தடுக்க மாவட்ட கால்நடை பராமரிப்புத் துறை, தெருநாய்களை பராமரிக்க விலங்குகள் நல ஆர்வலர்களை நியமித்து அவர்கள் தெருநாய்களுக்கு உணவு வழங்க தேவையானஅரிசிகளை வழங்கி வருகிறது’’ என்றார்.
மாவட்ட கால்நடை பராமரிப்பு துறை இணை இயக்குனர் கிறிஸ்டோபர் கூறுகையில், ‘‘தெருநாய்களை பராமரிக்க தனி நிதி ஒதுக்கீடு இல்லை. மதுரை மாவட்டத்தில் விருப்பமுள்ளவர்களிடம் நன்கொடை பெற்று அரிசி மூட்டைகளை வாங்கி, தெருநாய்களுக்கு உணவு சமைத்து வழங்குவதற்காக அந்தந்த பகுதியில்தெருநாய்களை பராமரிக்கும் தன்னார்வலர்களை அடையாளம் கண்டு அவர்களிடம் ஒப்படைக்கிறோம், ’’ என்றார்.
இதுகுறித்து தெருநாய்களை பராமரிக்கும் நன்றி மறவேல் அமைப்பின் மாரிக்குமார் கூறுகையில், ‘‘சாதாரண காலத்திலே மனிதர்கள் தெருநாய்களை வெறுத்து ஒதுக்குவார்கள்.
இந்த நெருக்கடியான காலத்தில் அவர்களுக்கு தேவையான உணவுகளை அவர்களே வாங்கி பதுக்குகிறார்கள். அவர்கள் எப்படிதெருநாய்களுக்கு உணவு வழங்குவார்கள்.
பசி மட்டுமில்லாது தெருநாய்களுக்கு தற்போது சுட்டெரிக்கும் வெயிலும் ஒரு சவாலாக உள்ளது. தெருநாய்களை பொறுத்தவரையில் ஒரு வாரம் வரை பசியோடு தண்ணீரை குடித்துக் கொண்டு உயிர் வாழக்கூடியவை.
ஆனாலும் தண்ணீரும் கிடைக்காமல் தெருநாய்கள் மிகுந்த சிரமப்படுகின்றன. நாய்களுக்கு நுகர்வு சக்தி அதிகம் என்பதால் வீடுகளில் சமைக்கும் உணவின் மனத்தை கண்டும் அவை உணவுக்காக குரைக்கும். பலர் அதை தொந்தரவாக நினைத்து தற்போது ஆங்காங்கே தெருநாய்களை விஷம் வைத்து கொல்லவும் செய்கின்றன.
வறண்ட பூமி மழைக்கு எதிர்பார்த்து காத்து இருப்பதுபோல் தெருநாய்களும் உணவிற்காகவே மனிதர்களை துரத்துகின்றன. அதனால், மக்கள் தாங்கள் சாப்பிடும் உணவில் ஒரு பகுதியை தங்கள் பகுதியில் சுற்றும் தெருநாய்களுக்கு வழங்கி அவற்றை நேசிக்க வேண்டும், ’’ என்றார்.