

செங்கல்பட்டிலிருந்து விளாத்திகுளம் வந்த 14 பேருக்கு விளாத்திகுளம் அரசு மருத்துவமனையில் கரோனா மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டது. மேலும் அவர்கள் வந்த வேனை போலீஸார் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விளாத்திகுளம் காமராஜ் நகரை சேர்ந்தவர் ஷேக் உசேன் (75). உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ள ஷேக் உசேனைக் காண அவரது உறவினர்கள் 13 பேர் கடந்த 13-ம் தேதி இரவு செங்கல்பட்டிலிருந்து புறப்பட்டு விளாத்திகுளத்துக்கு ஒரு டெம்போ வேனில் வந்தனர்.
நேற்று முன்தினம் அதிகாலையில் விளாத்திகுளம் காவல் துணை கோட்டத்துக்கு உட்பட்ட புதூர் சென்னமரெட்டிபட்டி சோதனைச்சாவடியில் போலீஸார் டெம்போ வேனை நிறுத்தி விசாரணை நடத்தினர்.
விசாரணையில் முறையான பதில் கிடைக்காததால் உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து டெம்போ வேன் ஓட்டுநர் உட்பட 14 பேருக்கு புதூர் ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் விளாத்திகுளம் அரசு மருத்துவமனையில் கரோனா அறிகுறி மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டது.
பின்னர் அவர்கள் அனைவரும் காமராஜ் நகரில் உள்ள ஷேக் உசேன் வீட்டுக்கு அனுப்பப்பட்டனர். அந்த வீட்டில், தனிமைப்படுத்தப்பட்டதற்கான ஸ்டிக்கர் ஒட்டப்பட்டு சுகாதாரத்துறை, வருவாய்துறை அதிகாரிகள் கண்காணிப்பில் இருந்து வருகின்றனர்.
அவர்களிடம் விசாரணையில், அப்துல் காதர் என்பவர் பெயரில் அனுமதி சீட்டு வாங்கப்பட்டிருந்தது தெரியவந்தது. அதில், 5 பேர் அமரக்கூடிய காரில் செல்வதற்கு மட்டுமே என குறிப்பிடப்பட்டிருந்தது. மேலும், ஒரே அனுமதி சீட்டில் 14 பேர் எப்படி வர முடியும் என அதிகாரிகள் சந்தேகமடைந்தனர்.
செங்கல்பட்டியில் உள்ள உரிய அதிகாரியிடம் கையெழுத்து பெறாமல், முதல் நிலை அலுவலரின் கையெழுத்துடன் விண்ணப்பத்தை திரும்ப எடுத்து வந்து, அவர்களே நிரப்பி கொண்டு வேனில் வந்திருக்கலாம் என அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர்.
இதையடுத்து சந்தேகத்தின் பேரில் டெம்போ வேனைப் பறிமுதல் செய்த போலீஸார் விளாத்திகுளம் காவல்நிலையத்துக்கு கொண்டு சென்று கிருமி நாசினி தெளித்து நிறுத்தி உள்ளனர்.
விளாத்திகுளம் வருவாய்துறை அதிகாரிகளும், தூத்துக்குடி மாவட்ட நிர்வாகமும் செங்கல்பட்டு மாவட்ட நிர்வாகத்தை தொடர்பு கொண்டு அனுமதி சீட்டின் உண்மைத்தன்மை குறித்து விளக்கம் கேட்டுள்ளனர்.
உரிய பதில் கிடைத்த பின் அடுத்த கட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.