

கரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக மே 3-ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளதால் சிவகாசியில் ரூ.260 கோடி அளவுக்கு உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.
ஆலைகள் தொடர்ந்து மூடப்பட்டுள்ளதால் 8 லட்சம் தொழிலாளர்கள் வேலையின்றித் தவித்து வருகின்றனர்.
குட்டி ஜப்பான் என்று அழைக்கப்படும் சிவகாசியில் 1,070 பட்டாசு ஆலைகள் இயங்கி வருகின்றன. இங்கு நேரடியாக 3 லட்சம் தொழிலாளர்களும் பட்டாசு உப தொழில்கள் மூலம் 5 லட்சம் தொழிலாளர்களும் பயனடைந்து வருகின்றனர்.
கரோனை வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக ஏற்கனவே 21 நாள்கள் தேசிய ஊரடங்கு உத்தரவு அறிவிக்கப்பட்டதால் பட்டாசு ஆலைகள் மூடப்பட்டன. தொடர்ந்து மே 3ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளதால் பட்டாசுத் தொழில் ஒட்டுமொத்தமாக முடங்கிப்போய் உள்ளது.
தொழிலாளர்களும் வேலையிழந்து தவித்து வருகின்றனர்.
இதுகுறித்து தமிழ்நாடு பட்டாசு மற்றும் கேப் வெடி உற்பத்தியாளர்கள் சங்கத் தலைவர் கணேசன் கூறுகையில், கரோனை வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த ஏற்கனவே 21 நாள் தேசிய ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது.
அதைத்தொடர்ந்து தற்போது மே 3ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது. ஒருவகையில் இது வரவேற்கத்தக்கது என்றாலும் தொழிலாளர்களின் வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. 40 நாள் அடைப்பில் சுமார் ரூ.260 கோடி அளவில் பட்டாசு உற்பத்தி தடைபட்டுள்ளது.
தமிழக அரசு பட்டாசுத் தொழிலாளர்களுக்கு நிவாரணத் தொகையாக ரூ.ஆயிரம் வழங்குவதாக முதல்வர் அறிவித்துள்ளது வரவேற்கத்தக்கது. ஆனால், பாதிக்கப்பட்ட பட்டாசு தொழிலாளர்களுக்கு மேலும் சில சலுகைகளை அரசு செய்துகொடுக்க வேண்டும்.
மத்திய அரசும், மாநில அரசும் கரோனா கட்டுப்படுத்தும் பணியில் சிறப்பாக மேற்கொண்டு வருகின்றன. இதற்காக பிரமருக்கும், தமிழக முதல்வருக்கும் நாம் நன்றி தெரிவிக்க வேண்டும். பெரிய அளவில் பாதிப்பு தடுக்கப்பட்டுள்ளது.
அதேவேளையில் 40 நாள் பட்டாசு ஆலைகள் பூட்டப்படுவதால் உற்பத்தி முடங்கிப்போய் உள்ளது. தற்போது வட மாநிலங்களிலும், தமிழகத்திலும் திருமண விழாக்களுக்கு அதிக அளவில் பட்டாசு விற்பனை இருக்கும்.
ஆனால், கரோனா பிரச்சினையில் விற்பனையும் 100 சதவிகிதம் தடைபட்டுள்ளது. 40 நாள்களுக்குப் பிறகு உற்பத்தியைத் தொடங்கினாலும் உற்பத்தி மற்றும் விற்பனை எப்படி இருக்கும் என்பதும், தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை மீட்டெடுப்பது என்பதும் சவாலானது.
எனவே, பட்டாசு ஆலைகளின் கடனுக்கு உரிய வட்டியை மத்திய, மாநில அரசுகள் தள்ளுபடி செய்ய வேண்டும். பட்டாசு ஆலைகளுக்கு மட்டுமின்றி அனைத்து தொழிற்சாலைகளுக்கும் மின்சார கட்டணத்தை குறிப்பிட்ட காலத்திற்கு ரத்து செய்ய வேண்டும்.
தொழிலாளர்களுக்கான பி.எப்., இ.எஸ்.ஐ. போன்ற தொகையை நிறுவனம் சார்பில் அரசே செலுத்துவது போன்ற சலுகைகளை வழங்க வேண்டும். இதுதொடர்பாக மத்திய, மாநில அரசுகளுக்கு கோரிக்கைக் கடிதமும் அனுப்ப உள்ளோம் என்றார்.