சித்திரைத் திருவிழாவை நடத்தக்கோரிய மனுவை அவசரமாக விசாரிக்க உயர் நீதிமன்றம் மறுப்பு

சித்திரைத் திருவிழாவை நடத்தக்கோரிய மனுவை அவசரமாக விசாரிக்க உயர் நீதிமன்றம் மறுப்பு
Updated on
1 min read

மதுரையில் சித்திரை திருவிழா மற்றும் அழகர் ஆற்றில் இறங்கும் வைபவங்களை நடத்த அதிகாரிகளுக்கு உத்தரவிடக்கோரி தாக்கலான மனுவை அவசரமாக விசாரிக்க உயர் நீதிமன்ற மதுரை கிளை மறுத்துவிட்டது.

மதுரை தல்லாகுளத்தைச் சேர்ந்த இ.எம்.ஜி.அருண் போத்திராஜ், உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனுவில்:

மதுரையில் சித்திரை மாதம் நடைபெறும் சித்திரை திருவிழா மிகவும் பிரபலமானது. இந்த திருவிழாவில் முக்கிய நிகழ்வான மீனாட்சியம்மன் திருக்கல்யாணம், கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபவத்தை காண பல லட்சக்கணக்கான மக்கள் கூடுவது வழக்கம்.

சித்திரை திருவிழாவின் போது வைகை ஆற்றில் இறங்குவதற்காக அழகர்கோவிலில் இருந்து புறப்படும் கள்ளழகர் மதுரைக்கு வரும் போதும், திருவிழா முடிந்து அழகர்கோவிலுக்கு திரும்பி செல்லும் போதும் வழிகளில் உள்ள அனைத்து மண்டகபடிகளிலும் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிப்பது வழக்கம். அப்போது எங்கள் அறக்கட்டளைக்கு சொந்தமான மண்டகபடியிலும் எழுந்தருளுவார்.

தற்போது கரோனா வைரஸ் பரவலை தடுக்க நாடு முழுவதும் ஊடரங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் சித்திரை திருவிழாவுக்கான எந்த ஏற்பாடுகளை அதிகாரிகள் தொடங்காமல் உள்ளனர். நூறு ஆண்டுகளுக்கு மேலாக நடைபெற்று வரும் சித்திரை திருவிழாவை தொடர்ந்து நடத்த வேண்டும்.

இதையடுத்து சித்திரை திருவிழா நடத்த நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு ஏப். 9-ல் மனு அனுப்பினேன். இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே, ஆகம விதிகளை பின்பற்றி மதுரை சித்திரை திருவிழா மற்றும் வைகை ஆற்றில் அழகர் இறங்கும் வைபவங்களை நடத்த உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.

ஊரடங்கு உத்தரவால் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் அனைத்து பணிகளும் நிறுத்தப்பட்டு அவசர வழக்குகள் மட்டுமே விசாரிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் சித்திரை திருவிழா நடத்த உத்தரவிடக்கோரிய மனுவை அவசர பொதுநல மனுவாக விசாரிக்க வேண்டும் என மனுதாரர் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. இந்த கோரிக்கையை ஏற்க மறுத்த உயர் நீதிமன்ற மதுரை கிளை மனுவை விசாரணைக்கு ஏற்காமல் திரும்ப அனுப்பியது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in