

மதுரை மாவட்டத்தில் முந்நூறுக்கும் அதிகமான பிராய்லர் கோழிப் பண்ணைகள் இருக்கின்றன. பண்ணையிலேயே தங்கிப் பணிபுரியும் தொழிலாளர்கள் இருந்தாலும்கூட, கோழிகளின் அன்றாட வளர்ச்சி மற்றும் நோய்த்தொற்று குறித்துக் கவனித்து அதற்கேற்ப மருந்து மற்றும் உணவும் அளிப்பதை உறுதி செய்வது களப் பணியாளர்களின் வேலை.
பிராய்லர் கோழிகள் வெறும் 35 நாட்களில் ஒன்றரை கிலோ எடையுள்ளதாக வளரும் தன்மையுடையவை என்பதால், ஒருநாள் கவனிக்கத் தவறினாலும் கொத்துக்கொத்தாய் மாண்டுவிடும்.
ஊரடங்கு காரணமாக 119 கோழிப்பண்ணைகளுக்கு களப்பணியாளர்கள் வேலைக்குச் செல்ல முடியாமல் போனது. இதனால், அந்தப் பண்ணைகளில் இருந்த 1.75 லட்சம் கோழிகளும் சுகாதாரக் குறைபாடு, தீவனப் பற்றாக்குறை போன்ற பிரச்சினையில் சிக்கின. இதுகுறித்து பண்ணை உரிமையாளர்கள் கால்நடைத் துறையினரைத் தொடர்பு கொண்டு முறையிட்டனர். ஒருவேளை, கோழிகள் செத்துப்போனால், புதைப்பதற்குக்கூட ஆளில்லாமல் மனிதர்களுக்கும் மிகப்பெரிய சுகாதாரப் பிரச்சினையாக மாறும் என்றும் கூறினர்.
கால்நடை பராமரிப்புத் துறை இணை இயக்குநர் சுரேஷ் கிறிஸ்டோபர், உதவி இயக்குநர் சரவணன் ஆகியோரின் பரிந்துரையின்பேரில், களப்பணியாளர்கள் 17 பேருக்கும் தினசரிப் பணிக்குச் சென்று வருவதற்கான பாஸ் வழங்க மாவட்ட ஆட்சியர் டி.ஜி.வினய் உத்தரவிட்டார். அவர்களுடன் கால்நடைத்துறை மருத்துவர்களும் சென்று அந்த 119 பண்ணைகளையும் பார்வையிட்டனர். கோழிகளுக்கு உரிய உணவும், மருந்தும் கொடுத்தார்கள். இதனால் ஒன்றே முக்கால் லட்சம் கோழிகள் உயிர் தப்பின.
மதுரை ஞாயிற்றுக்கிழமை சந்தையில் வளர்ப்பு மீன்கள், காதல் பறவைகள் (லவ் பேர்ட்ஸ்), முயல், நாய், புறா உள்ளிட்ட வளர்ப்புப் பிராணிகள் விற்பனைக் கடைகள் இருபதுக்கும் மேல் இருக்கின்றன. அந்தக் கடைகள் தற்போது அடைக்கப்பட்டிருப்பதால், உள்ளே இருக்கும் செல்லப்பிராணிகளைப் பாதுகாக்க முடியாமல் திணறிக் கொண்டிருக்கும் அவற்றின் உரிமையாளர்கள், தினமும் காலையிலும், மாலையிலும் அந்தப் பிராணிகளுக்கு உணவளிக்க அனுமதி அளிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்திருக்கிறார்கள்.