

ஊரடங்கு நீட்டிக்கப்பட்டதால் மதுரை மாவட்டத்தில் டாஸ்மாக் கடைகளில் உள்ள மது பாட்டில்கள் திருடுபோகாமல் இருக்க, கதவை உடைக்கவே முடியாத அளவிற்கு கம்பிகளை கொண்டு ‘X’ வடிவில் இரும்பு கம்பிகளை கொண்டு ‘வெல்டிங்’ அடித்து பூட்டுப்போட்டுள்ளனர்.
தமிழகத்தில் 5, 192 கடைகள் செயல்படுகின்றன. இந்த கடைகளுக்கு தமிழ்நாடு மாநில வாணிப கழகம், தனியார் மது ஆலைகளில் இருந்து மதுபாட்டில்களை கொள்முதல் செய்து, விநியோகம் செய்யப்படுகிறது.
மதுவிற்பனையால் ஆண்டுதோறும் உயிர் பலிகள் அதிகரிப்பதால் டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும் என்று பலர் போராட்டங்களில் ஈடுபட்டனர்.
ஆனால், தற்போது ‘கரோனா’ ஊரடங்கால் தற்காலிகமாக டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ளன. ஆண்டுதோறும் டாஸ்மாக் கடைகள் மூலம் ரூ.36,752 கோடிவரை வருவமானம் கிடைக்கிறது. தற்போது மூடப்பட்டதால் அரசுக்கு பெரும் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.
ஊரடங்கால் மூடப்பட்ட டாஸ்மாக் கடைகளில் ஆங்காங்கே மதுபாட்டில்கள் கொள்ளையடிக்கும் சம்பவங்கள் நடக்கிறது.
தற்போது மீண்டும் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டதால் டாஸ்மாக் கடைகளுக்கு பாதுகாப்பு இல்லாதநிலை ஏற்பட்டுள்ளது. அதனால், மதுரை மாவட்டத்தில் ‘டாஸ்மாக்’ கடைகளில் உள்ள மதுபாட்டில்கள் திருடப்படுவதை தடுக்க, அந்த கடையின் கதவுகளை திறக்கவே முடியாத அளவிற்கு எக்ஸ் வடிவில் கம்பிகளை கொண்டு வெல்டிங் அடித்து பூட்டுப்போட்டுள்ளனர்.
அதனால், டாஸ்மாக் கடைகளில் திருடுப்போடுவதற்கு வாய்ப்பே இல்லாதநிலை ஏற்பட்டுள்ளது. போலீஸார் பாதுகாப்பும் போட வேண்டிய அவசியம் இல்லை. வழக்கம்போல் ரோந்து பணியின்போது அப்பகுதியில் ‘டாஸ்மாக்’ கடைகளை கண்காணித்தால் மட்டுமே போதுமானது.
இதுகுறித்து டாஸ்மாக் அதிகாரிகள் கூறுகையில், ‘‘போலீஸார், ‘கரோனா’ கண்காணிப்பு பணிக்கே முக்கியத்துவம் கொடுக்கின்றனர். அவர்களால் ‘டாஸ்மாக்’ கடைகளுக்கு பாதுகாப்பு கொடுக்க முடியவில்லை. அதனால், கதவை திருடர்கள் திறக்க முடியாத அளவிற்கு கதவின் மேல் எக்ஸ் வடிவில் இரும்பு கம்பிகளை கொண்டு வெல்டிங் அடித்து, அதற்கு பூட்டுப்போட்டுள்ளோம், ’’ என்றார்.