சென்னையில் முகக்கவசம் அணியாமல் வெளியே வரும் பாதசாரிகளுக்கு ரூ.100 அபராதம்; ஓட்டுநர் உரிமம் இடைநிறுத்தம்; மாநகராட்சி ஆணையர் எச்சரிக்கை

சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ்.
சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ்.
Updated on
1 min read

பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் கரோனா வைரஸ் நோய்த் தொற்றைத் தடுக்கும் நடவடிக்கையாக பொதுமக்கள் அனுமதிக்கப்பட்ட தேவைகளுக்காக வெளியே வரும்போது முகக்கவசம் அணிந்து வர வேண்டும் எனவும், மீறும் நபர்களின் வாகனம் பறிமுதல் செய்யப்படும் எனவும், மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக, சென்னை மாநகராட்சி இன்று (ஏப்.15) வெளியிட்ட செய்திக்குறிப்பில், "கரோனா வைரஸ் நோய்த்தொற்றைத் தடுக்கும் பொருட்டு தனிமைப்படுத்துதல் மற்றும் சமூக இடைவெளி ஏற்படுத்துதலை வலியுறுத்தி, தமிழ்நாடு அரசால் மாநிலம் முழுவதும் 144 தடை ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் அத்தியாவசியத் தேவைகளுக்காக மட்டுமே வெளியே வர அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கரோனா வைரஸ் நோய்த் தொற்றைத் தடுக்கும் வகையில் பெருநகர சென்னை மாநகராட்சி பல்வேறு விதமான பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக பெருநகர சென்னை மாநகராட்சி தொற்று நோய்கள் சட்டம் 1987 பிரிவு 2-ன் கீழ் பெருநகர சென்னை மாநகராட்சி அதிகார எல்லைக்குட்பட்ட அனைத்துப் பொதுமக்களும் வெளியே வரும்போது, கரோனா வைரஸ் நோய் தொற்று சமூகப் பரவலைத் தவிர்ப்பதற்காக முகக்கவசம் அணிந்து வெளியே வர வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்த உத்தரவை மீறும் நபர்கள் குற்றம் செய்ததாக கருதப்பட்டு காவல் துறையின் மூலம் அவர்களின் பயணம் செய்யும் வாகனம் பறிமுதல் செய்யப்பட்டு ஓட்டுநர் உரிமம் 6 மாதங்களுக்கு இடை நிறுத்தம் செய்யப்படும். மேலும், முகக்கவசம் அணியாமல் வெளியே வரும் பாதசாரிகளுக்கு ஒரு நாளைக்கு ரூ.100 அபராதம் விதிக்கப்படும். இந்த நடைமுறைகள் உடனடியாக அமலுக்கு வருவதாக மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார்" எனக் கூறப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in