

தேசிய ஊரடங்கு தொடரும் சூழலில், ஒவ்வொரு மாவட்ட நிர்வாகமும் அந்தந்தப் பகுதி மக்களுக்கு ஏற்றவாறு பல்வேறு உதவிகளைச் செய்துவருகிறது. அந்த வகையில், டயாலிசிஸ் செய்து வந்த சிறுநீரக நோயாளிகளுக்கு நீலகிரி மாவட்ட நிர்வாகம் உரிய நேரத்தில் உதவிக்கரம் நீட்டியுள்ளது.
இம்மாவட்டத்தின் கூடலூர், பந்தலூர் பகுதிகளில் வசிப்பவர்கள், மருத்துவ சிகிச்சைக்கும், தொழில் ரீதியான பல்வேறு விஷயங்களுக்கும் பக்கத்தில் உள்ள கேரளத்திற்கோ, கர்நாடகத்திற்கோதான் செல்ல வேண்டியிருக்கிறது. ஏனென்றால் இங்கிருந்து ஊட்டிக்கோ, கோவை, திருப்பூருக்கோ வரும் நேரத்திற்கு அண்டை மாநிலங்களுக்கு இரண்டு முறை சென்று வந்துவிடலாம்.
எனவே, இப்பகுதிகளில் வசிக்கும் சிறுநீரக நோயாளிகள், டயாலிசிஸ் சிகிச்சைக்காகக் கேரளத்தில் உள்ள மலப்புரம், வயநாடு, பெருந்தலமன்னா, கர்நாடகத்தின் மைசூரு ஆகிய பகுதிகளுக்குச் செல்வது வழக்கம். அதற்காக ஆயிரக்கணக்கில் செலவு செய்ய வேண்டிய சூழல் வேறு. இது ஏழை எளியவர்களுக்குக் கடும் சுமையாகவும் இருந்து வந்தது.
இதைக் கருத்தில் கொண்டு, உள்ளூரிலேயே முடிந்த வரை இலவசமாக டயாலிசிஸ் சேவையை வழங்குவதற்கான முயற்சியை இங்குள்ள ‘நன்மை’ தொண்டு அமைப்பைச் சேர்ந்தவர்கள் செய்துவருகிறார்கள். மூன்று மாதங்களுக்கு முன்னர் உள்ளூர் மற்றும் வெளியூர் நண்பர்கள் உதவியுடன் சுமார் ரூ.65 லட்சம் செலவில் ஏழு டயாலிசிஸ் யூனிட்டுகள் இந்த அமைப்பினரால் வாங்கப்பட்டன. உள்ளூரில் உள்ள மருத்துவமனை அறக்கட்டளை மற்றும் ‘தனல்’ அமைப்பு ஆகியவற்றின் உதவியுடன் இதை இவர்கள் செய்துவருகிறார்கள். மருத்துவமனை வளாகத்திலேயே இதற்கான இடம் ஒதுக்கப்பட்டு கடந்த 2 மாதங்களுக்கும் மேலாக டயாலிசிஸ் சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது.
தற்போது தேசிய ஊரடங்கு அமலில் இருக்கும் நிலையில், டயாலிசிஸ் சிகிச்சைக்காக அண்டை மாநில மருத்துவமனைகளுக்குச் செல்பவர்களும் இங்கேயே சிகிச்சை பெற வேண்டிய சூழல் ஏற்பட்டிருக்கிறது. இது குறித்து மாவட்ட நிர்வாகத்திற்கு தெரிவிக்கப்பட, அவர்களுக்கும் இதே மையத்தில் சிகிச்சை அளிக்க மாவட்ட நிர்வாகம் ஏற்பாடு செய்து கொடுத்துள்ளது. அதற்காக மூன்று வாரங்களுக்கான மருத்துவச் செலவை மாவட்ட நிர்வாகமே ஏற்றிருப்பதாக இம்மையத்தினர் மகிழ்ச்சியுடன் தெரிவிக்கிறார்கள்.
இங்கே டயாலிசிஸ் செய்வதற்கு ரூ.1,000 மட்டுமே செலவாகிறது. அதில் 50 சதவீதம் கட்டணத்தை ‘நன்மை’ தொண்டு அமைப்பு ஏற்றுக்கொள்கிறது. இப்போது மாவட்ட நிர்வாகமும் செலவை ஏற்றுக்கொண்டிருப்பதால் நோயாளிகள் மிகக் குறைந்த செலவில் டயாலிசிஸ் சிகிச்சையைப் பெற முடிகிறது. தினசரி மூன்று சுற்றுகளில் 50க்கும் மேற்பட்ட நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
“தமிழகத்துக்குள்ளேயே இப்படி ஒரு மையம் ஏற்படுத்தப்பட்டதால் இந்தக் கரோனா இடர்ப்பாட்டிலும் எங்களைக் காப்பாற்றிக்கொள்ள முடிகிறது. அதற்கேற்ப மாவட்ட நிர்வாகமும் உதவி புரிந்தது எங்களுக்கு வரப்பிரசாதம்” என்கிறார்கள் இங்கு டயாலிசிஸ் செய்துகொள்ளும் சிறுநீரக நோயாளிகள்.
மேலும், “மிகக் குறைந்த செலவில் டயாலிசிஸ் சிகிச்சை செய்துகொள்ளும் வாய்ப்பு கிடைத்திருப்பது மகிழ்ச்சி அளித்தாலும், மருந்து, ஊசி உள்ளிட்ட செலவுகளுக்கு அதிகப் பணம் செலவாகிறது. எனவே, அரசு மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் மூலம் மருத்துவச் செலவுகளை ஈடுகட்ட உதவி செய்தால் அது எங்களுக்கு மேலும் உதவியாக இருக்கும். அரசு அந்த உதவிகளையும் செய்தால் பலரும் பலன் பெறுவர்” என்றும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
அரசு இதற்கும் உதவிக்கரம் நீட்டும் என நம்பலாம்!