Last Updated : 15 Apr, 2020 12:18 PM

 

Published : 15 Apr 2020 12:18 PM
Last Updated : 15 Apr 2020 12:18 PM

மின் கட்டணத்தை ரத்து செய்யுங்கள் முதல்வரே!- ஒரு சாமானியனின் கடிதம்

ஊரடங்கு காலத்தில் செலுத்த வேண்டிய மின் கட்டணத்தை ரத்துசெய்ய வேண்டும் என்று தமிழக அரசுக்கு பல தரப்பிலுமிருந்து கோரிக்கை வைக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், நாகை மாவட்டம் கருப்பம்புலத்தைச் சேர்ந்த சித்திரவேலு என்பவர் ஊரடங்கால் பொதுமக்கள் படும் வேதனையையும், மின் கட்டணம் ரத்து செய்யப்பட வேண்டியதற்கான காரணத்தையும் தனது திறந்த மடல் வழியாக நயம்பட அரசுக்கு தெரியப் படுத்தியுள்ளார்.

அந்தக் கடிதம்:

’’உலகமே இன்று கவலையில் உறைந்து போயுள்ளது. போட்டது போட்டபடி கிடக்குது. எந்த வேலையும் ஓடல. விவசாய வேலை மருந்துக்குக்கூட ஆகல. மீனவன் கடலை மறந்தான். உப்பளத்தில் உப்பு பூத்துக் கிடக்கு. மல்லிகை பூத்துக் குலுங்குகிறது. கால்நடைகள்கூட முன்பு போலில்லை. அனைத்துத் தொழிலாளிகளுக்கும் கட்டாய ஓய்வு.

உலகமே அசைவற்று வெறிச்சோடிக் கிடக்கிறது. நீங்களெல்லாம் மூச்சுக்கு முந்நூறு தடவை முழங்குவதை அப்படியே ஏற்று அனைவரும் விழித்திருக்கிறோம்; விலகியிருக்கிறோம்; வீட்டிலிருக்கிறோம்; அமைதியாயிருக்கிறோம்; சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்கிறோம், முகமூடியிலிருக்கிறோம்; கை சுத்தம் பேணுகிறோம்; அவ்வளவே.

எங்களையெல்லாம் நீங்கள் கண்ணெனப் போற்றிப் பாதுகாத்து வருகிறீர்கள்; ஆயிரம் தந்தீர்கள்; இன்னும் எத்தனையோ ஆயிரம் தர இருக்கிறீர்கள்; ஆயிரந்தான் இருந்தாலும் பூக்கொல்லையை கோலுதல், உப்பளத்தைச் சுற்றுதல், கடலுக்குள் போய்வருதல் போலாகுமா? இருபத்து நான்கு மணி நேரமும் கோழி தன் இறகுக்குள் குஞ்சுகள் பூறாவையும் அடக்குவது போல வீட்டுக்குள் மனைவி மக்களோடுதான் இருக்கிறோம்.

அங்காடி சாமான்களுடன் ஆயிரம் வந்தாலும், காலையில வந்து காலூன்றி சைக்கிள் பெல்லடித்து காசு வாங்கும் கரூர் பைனான்ஸ்காரர் வராதது, குழுக்கூட்டம் போடாத - தவணைப் பணத்துக்கு ஊக்குனரும் பிரதிநிதியும் பைப்படியில ஜாடை பண்ணாதது, பள்ளிக்கூடத்துப் புள்ள பஸ் பாஸை தேடச்சொல்லாதது, பாழாப்போன மனுஷன் டாஸ்மாக் போற அவசரத்துல ஆட்டையும் மாட்டையும் அவசரத்துல பட்டிக்குள்ள அடைக்காதது சந்தோஷமே. ஆனாலும் எதையோ பறிகொடுத்த ஏக்கம் போலவே இருக்கு. பொழுது போகமாட்டேங்குது... மல்லுக்கட்டி பொழுதே போனாலும் தூக்கமே வரமாட்டேங்குது.

எப்படி வேலை செய்தோம் என்பதெல்லாம் பழங்கனவாகிப்போனது. நடக்க மறுக்கிறது கால்கள். உண்ண மறுக்கிறது கைகள். பார்க்க மறுக்கிறது கண்கள். பழக மறுக்கிறது யதார்த்தம். ஒரு வெறுமை தோன்றுகிறது. வாழ்வாதாரத்தில் இடைவெளி போல ஒண்ணு தெரியுது. முதல்வர் சொன்ன முப்பதுக்குப் பிறகும் சரி, பிரதமர் சொன்ன மூணுக்குப் பிறகும் சரி, உழைப்போ பிழைப்போ எங்களை ஒட்டப்போவதும் இல்லை. ஊக்கமோ தூக்கமோ எங்களிடம் வரப்போவதுமில்லை. வரும், ஆனா உடனே வராது. படிப்படியாத்தான் வரும்.

இந்த சூழலில், மின்கட்டணத்தை மே 6-ல் செலுத்துங்கள் என்பது எங்கள் காதுகளில் பழுக்கக் காய்ச்சிய ஈட்டியைச் சொருகுவது போல இருக்கிறது. அது ஒரு சுமையாகவே தெரிகிறது. ஆகவே, எங்களிடம் ஒரு பிடிப்பு வரும்வரை, எங்கள் வாழ்விலும் ஒரு துடிப்பு நிகழும் வரை, வழுக்கும் நிலத்தில் கைகொடுக்கும் ஊன்றுகோல் நண்பனாக தோன்ற வேண்டுமே ஒழிய, சேர்த்து வசூலிக்கும் ஈட்டிக்காரனாக நீங்கள் தெரியக்கூடாது.

மே 2020 வரையிலான காலத்திற்கான மின் கட்டணத்தை ரத்து செய்யுங்கள் அல்லது தள்ளுபடி செய்யுங்கள். ஒருவேளை யாராவது அவசரப்பட்டு மின் கட்டணத்தைச் செலுத்தி இருந்தால் அதை வைப்புத் தொகையாகச் சேருங்கள். இனி மின் கட்டணம் செலுத்த வேண்டியவர்களைச் செலுத்தவேண்டாம் என்று சொல்லுங்கள். இப்போதுள்ள இக்கட்டான சூழலில் எங்களுக்கு மின் கட்டணம் சுமை என்பதை விட மன அழுத்தம் என்பதைப் புரிந்துகொண்டு தக்க நடவடிக்கையை எடுங்கள்.

- இப்படிக்கு,
மலையளவு நம்பிக்கையுடன் காத்திருக்கும் கருப்பம்புலம் சித்திரவேலு’’.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x