

கரோனா வைரஸ் ஒழிப்புக்காக மத்திய, மாநில அரசுகளின் தொடர் முயற்சிகள் வெற்றி பெற பாராட்டுகிறேன் என, தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக, ஜி.கே.வாசன் இன்று (ஏப்.15) வெளியிட்ட அறிக்கையில், "கரோனா ஒழிப்புக்காக ஊரடங்கு நீட்டிக்கப்பட்டிருப்பது பொதுமக்கள் அனைவருக்கும் பலன் தரும்.
இத்தருணத்தில் இந்தியாவின் விடுதலைக்காக எந்தவிதமான காலக்கெடுவும் தெரியாமல் எந்த வசதியுமின்றி சிறைவாசம் அனுபவித்த தலைவர்களை ஒப்பிட்டு பார்த்தால் இப்போது நாம் வீட்டு நலன், குடும்ப நலன், நாட்டு நலனுக்காக மருந்து இல்லாத வைரஸை ஒழிப்பதற்கு அடிப்படைத் தேவைகள் இருக்கும் போது வீட்டிலேயே தனித்திருந்து, விழித்திருப்பது மிக மிக அவசியம்.
மேலும், பிரதமர் அறிவித்த நீட்டிக்கப்பட்ட ஊரடங்குக்கான காலம் வருகின்ற மே மாதம் 3 ஆம் தேதி வரை இருப்பதால் விதிமுறைகளை 100 சதவீதம் பின்பற்றினால் ஒன்று கரோனா வைரஸ் பரவல் 3 ஆம் நிலைக்கு செல்லாமல் இருப்பதை கட்டுப்படுத்தலாம். மற்றொன்று இந்த கொடிய வைரஸில் இருந்து விடுபடுவதற்கான வாய்ப்பும் ஒரு காலக்கெடுவுக்குள் ஏற்படும்.
ஏற்கெனவே அமல்படுத்தப்பட்ட ஊரடங்குக்காக பொதுமக்கள் கொடுத்த ஒத்துழைப்பு இன்று முதல் மேலும் தொடர்ந்து நீட்டிக்கப்பட்ட ஊரடங்கு முடியும் வரை விதிமுறைகளை முழுமையாக கடைபிடித்து கரோனா வைரஸ் பரவலுக்கு முற்றுப்புள்ளி வைப்போம்.
தமிழகத்தில் ஊரடங்கை கடைபிடித்துக் கொண்டிருந்த, தொடர்ந்து கடைபிடிக்கின்ற அனைவருக்கும் தமாகா சார்பில் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.
விரைவில் நம் சுதந்திர இந்தியாவில் அனைவரும் சுதந்திரமாக நடமாடக்கூடிய நிலையை அரசுக்கு மக்களே ஏற்படுத்திக் கொடுப்போம்.
இதற்காக போராடுகின்ற மத்திய, மாநில அரசுகளின் தொடர் முயற்சிகள் வெற்றி பெற பாராட்டுகிறேன், வாழ்த்துகிறேன்" என ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.