

மதுரை மாவட்டத்தில் நுகர் பொருள் வாணிபக் கழகங்கள் சார்பில் விவசாயிகளிடம் இருந்து நேரடியாக நெல் கொள்முதல் செய்ய பல இடங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் செயல்படுகின்றன.
கரோனா பரவலைத் தடுக்க ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் கடந்த ஒரு மாதமாக நெல் கொள்முதல் தடைபட்டுள்ளது.
செல்லம்பட்டி ஒன்றியம் கொ.வடுகபட்டியில் நேரடி நெல் கொள்முதல் நிலையத்துக்கு கொடிக்குளம் ஊராட்சிக்குட்பட்ட கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகள் கொள்முதலுக்காக நெல் கொண்டு வருவது வழக்கம்.
திறந்தவெளியில்..
இவ்வாறு கொண்டு வந்த 12 ஆயிரம் சிப்பம் (ஒரு சிப்பம் 40 கிலோ) நெல் கொள்முதல் செய்யப்படாமல் நிலையத்தின் அருகே ஒரு மாதமாக திறந்தவெளியில் கொட்டப்பட்டுள்ளது.
கரோனா பாதிப்பு முடிவுக்கு வந்த பிறகே நெல் கொள்முதல் நடைபெறும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மீண்டும் எடுத்துச் சென்றால் நஷ்டம் அதிகமாகும் என்பதால் கொட்டி வைத்துள்ள நெல்லை கொள் முதல் செய்ய வேண்டும் என விவசாயிகள் மதுரை மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை வைத் துள்ளனர்.
இது தொடர்பாக வடுகபட்டியைச் சேர்ந்த செல்வம் கூறியதாவது:
கடந்த ஆண்டு 50 ஆயிரம் சிப்பம் நெல் நேரடியாக கொள்முதல் செய்யப்பட்டது. இந்தாண்டு இதுவரை 15 ஆயிரம் சிப்பம் மட்டுமே கொள்முதல் செய்துள்ளனர். 3 ஆயிரம் சிப்பம் கொள்முதல் செய்த நிலையில் இந்த 12 ஆயிரம் சிப்பத்தை கரோனா பாதிப்பைச் சொல்லி கொள்முதல் செய்யாமல் விட்டுள்ளனர். இதனால் மழை, வெயிலால் நெல் சேதமடைந்து வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.