கரோனா அறிகுறி உள்ளவர்களை தனிமைப்படுத்த சென்னையில் 10 ஆயிரம் படுக்கை வசதிகள்- மாநகராட்சி ஆணையர் தகவல்

கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையம் தனி வார்டுகளாக மாற்றப்பட்டு தயார் நிலையில் உள்ளது.படம்: எம்.முத்துகணேஷ்
கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையம் தனி வார்டுகளாக மாற்றப்பட்டு தயார் நிலையில் உள்ளது.படம்: எம்.முத்துகணேஷ்
Updated on
1 min read

கரோனா அறிகுறி உள்ளவர்களை தனிமைப்படுத்த சென்னையில் 10 ஆயிரம் படுக்கை வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக மாநகராட்சி ஆணையர் கோ.பிரகாஷ் தெரிவித்துள்ளார்.

சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள வர்த்தக மையத்தில் 500 படுக்கை வசதிகள் கொண்ட கரோனா சிறப்பு சிகிச்சை மையம்அமைக்கப்பட்டுள்ளது. இதை மாநகராட்சி ஆணையர் கோ.பிரகாஷ் நேற்று பார்வையிட்டு ஆய்வுசெய்தார். பின்னர், செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:

சென்னையில் கரோனா பாதிப்பு அதிகம் உள்ள 80 பகுதிகளில் பாதுகாப்பு வளையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இப்பகுதிகளில் நாள்தோறும் 5 முறை கிருமிநாசினி தெளிக்கப்பட்டு வருகிறது. இப்பகுதிகளில் ஏப்ரல் 30-ம் தேதிக்குள் 40 ஆயிரம் பேரிடம் இருந்து மாதிரிகள் எடுக்க இலக்குநிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதற்காக அமைக்கப்பட்டுள்ள 35 மையங்களில் நேற்று வரை 600 மாதிரிகள் எடுக்கப்பட்டுள்ளன. இதன்மூலம், நோயின் தாக்கம் குறித்து அறிந்து சிகிச்சையை துரிதப்படுத்த முடியும்.

சென்னையில் கல்லூரிகள், வர்த்தக மையம் போன்ற இடங்களில் 10 ஆயிரம் படுக்கை வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. சாதாரண காய்ச்சல், இருமல் உள்ளவர்கள் பரிசோதனைக்குப் பிறகு இங்கு தனிமைப்படுத்தப்படுவர். வரும் காலங்களில் கூடுதலாக படுக்கை வசதி தேவைப்பட்டால் தனியார் இடங்கள் பயன்படுத்தப்படும்.

பொதுமக்கள் வெளியே செல்லும்போது கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என்ற உத்தரவு பல மாநிலங்களில் செயல்பாட்டில் உள்ளது. வீட்டில் தயாரிக்கப்பட்ட முகக்கவசம் அல்லது கைக்குட்டையை முகக்கவசமாக அணியலாம். கிருமி நாசினி சுரங்கப்பாதையில் தெளிக்கப்படும் மருந்துகள் மக்களின் தோல் உள்ளிட்டவற்றை பாதிக்கும்என்பதால் அதை நிறுத்தியுள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.

‘‘எதிர்க்கட்சியினர் நடத்தும் அனைத்துக் கட்சி கூட்டத்துக்கு அனுமதி வழங்கப்படுமா’’ என்று செய்தியாளர்கள் கேட்டபோது, ‘‘எதிர்க்கட்சியினர் நடத்த இருக்கும் அனைத்துக் கட்சி கூட்டத்துக்கு அனுமதி அளிப்பது குறித்து காவல் துறையினர்தான் முடிவெடுக்க வேண்டும். இதுகுறித்து மாநகர காவல் ஆணையரிடம் பேச உள்ளேன்’’ என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in