

டாஸ்மாக் கடைகளை, ஏப்ரல்30-ம் தேதி வரை மூட உத்தரவிடப்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் 5,000-க்கும்மேற்பட்ட டாஸ்மாக் கடைகள் செயல்பட்டு வந்தன. இக்கடைகளில் தினமும் ரூ.90 கோடி மதிப்பிலான மதுபானங்கள் விற்பனை செய்யப்பட்டு வந்தன. இந்நிலையில், கரோனா வைரஸ்பரவலைத் தடுக்க தமிழகத்தில் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டதால் நேற்று வரை டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவிடப்பட்டிருந்தது.
ஊரடங்கு உத்தரவை, தமிழகத்தில் ஏப்ரல் 30-ம் தேதி வரைநீட்டித்து முதல்வர் பழனிசாமி அறிவித்ததைத் தொடர்ந்து, தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளையும் ஏப்ரல் 30-ம் தேதி வரைமூட அத்துறையின் மேலாண்மைஇயக்குநர் ஆர்.கிர்லோஷ்குமார் உத்தரவிட்டுள்ளார்.
இதுதொடர்பாக, அனைத்து மாவட்ட மேலாளர்களுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் அவர் கூறியிருப்பதாவது:
ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டதைத் தொடர்ந்து டாஸ்மாக் சில்லரை விற்பனை கடைகளை ஏப்ரல் 30-ம் தேதி வரை மூட வேண்டும் என்று அனைத்து மண்டல மேலாளர்கள் மற்றும் மாவட்ட மேலாளர்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது.
இந்த காலக்கட்டத்தில் சட்டவிரோதமாக மதுபானங்கள் விற்பனை நடைபெறாமல் இருப்பதை அனைத்து மாவட்ட மேலாளர்களும் விழிப்புடன் இருந்து உறுதிப்படுத்த வேண்டும்.
இவ்வாறு அந்த சுற்றறிக்கையில் மேலாண்மை இயக்குநர் கிர்லோஷ் குமார் கூறியுள்ளார்.