Published : 15 Apr 2020 06:56 AM
Last Updated : 15 Apr 2020 06:56 AM

கரோனா உயிரிழப்புக்கு காரணம் வயதா, நோயா?

டாக்டர் கு.கணேசன்

இந்தியாவில் கடந்த 2009, 2014 ஆண்டுகளில் பரவிய ஸ்வைன் ஃபுளூ தொற்றால் பெரும்பாலும் பாதிக்கப்பட்டவர்கள் இளைய வயதினர். ஆனால், இன்று உலகமெங்கும் பரவிவரும் கரோனாவால் அதிக அளவில் பாதிக்கப்படுபவர்களும், உயிரிழப்பவர்களும் வயோதிகர்கள்.

வயதானவர்களே அதிகம் பாதிக்கப்பட என்ன காரணம்? உடலில் ஒட்டிக்கொள்ளும் 3 முக்கிய துணை நோய்கள்தான் (Comorbidities) இதற்கு காரணம். அவை என்னென்ன? பார்ப்போம்…

1. இதயநோய்

50 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு பெரும்பாலும் உயர் ரத்த அழுத்தமும், இதயநோயும் ஒட்டிப் பிறந்த இரட்டையர்கள்தான். இதற்கு தொடர்ச்சியாக மாத்திரையும் சாப்பிட்டு வருவார்கள். இப்படி சரியாக சிகிச்சை எடுப்பவர்களுக்கு கரோனா அவ்வளவாக பிரச்சினை செய்வதில்லை; அரைகுறையாக சிகிச்சை எடுப்பவர்களுக்குதான் பிரச்சினை செய்யும். எப்படி? ஏற்கெனவே அவர்களது இதயத் தசைகளுக்கு போதிய அளவு ஆக்ஸிஜன் கிடைக்காமல் இருக்கும். சாதாரணமாக இது வெளியில் தெரியாது. இதயமே இதை சமாளித்து வந்திருக்கும். ஆனால், ‘துவண்டுபோன துணியில் துளைகள் விழுவது எளிது’ என்பதுபோல, கரோனா கிருமிகள் நேரடியாக இவர்களது இதயத்தை தொற்றித் தாக்கும்போது (Viral Myocarditis), அங்கு எளிதில் அழற்சி உண்டாகும். அப்போது, உயிருக்கு ஆபத்து வருவதும் சுலபமாகிவிடும்.

அடுத்து, கரோனா கிருமிகள் நுரையீரல்களையே முக்கியமாக பாதிப்பதால், அவற்றில் இருந்து இதயத்துக்கு போதிய அளவுக்கு ஆக்ஸிஜன் வந்து சேராது. ஏற்கெனவே ஆக்ஸிஜன் கிடைக்காமல் திண்டாடும் இதயத்துக்கு இது பெரிய சோதனை. இதயம் முறைப்படி துடிக்க முடியாமல் தரைக்கு தாவிய மீன்போல துள்ளித் துள்ளி துடிக்கும் (Arrhythmias). சரியான வோல்டேஜில் மின்சாரம் வராமல், ஒரு கட்டத்தில் ஒட்டுமொத்தமாகவே மின்விநியோகம் நின்றுபோவதுபோல, துள்ளித் துடிக்கும் இதயம் ‘சட்’டென்று துடிப்பதை நிறுத்திவிடும். மேலும் இவர்களுக்கு புகை, மது பழக்கங்கள் இருக்குமானால், ரத்தக் குழாய்கள் ஏற்கெனவே பழுதாகி இருக்கும். பளிங்குத் தரையில் ஈரம் இருந்தால் வழுக்கி விழுவது இயல்புதானே! அதுமாதிரிதான், பழுதான ரத்தக் குழாய்களில் கரோனா பாதிப்பும் சேர்ந்துகொண்டால் ரத்தம் உறைவது எளிதாகிவிடும். அதனால்மாரடைப்பு வந்துசேரும். இப்படித்தான் வயதானவர்களுக்கு இதயப் பிரச்சினைகளை அதிகப்படுத்தி இறப்புக்கு வழி செய்கிறது கரோனா.

2. நுரையீரல் நோய்

புகைபிடிக்கும் வழக்கமுள்ள வயதானவர்களுக்கு ‘நாட்பட்ட சுவாசத் தடை நோய்’ (COPD) ஏற்கெனவே பாதித்திருக்கும். இதன் காரணமாக இவர்கள் நடக்கும்போது இயல்பாகவே மூச்சு விட சிரமப்படுவார்கள். கரோனா பாதிப்பு உள்ளவர்களுக்கும் மூச்சுத் திணறல்தான் பிரச்சினை.

மற்றவர்களோடு ஒப்பிடும்போது, ‘சுவாசத் தடை நோய்’ உள்ளவர்களுக்கு இறப்பு எளிதில் நெருங்க என்ன காரணம்?

கரோனா வைரஸ் ACE2 புரதங்கள் உள்ள உடல் செல்களில்தான் நுழையும். இவை பெரும்பாலும் மூக்கு, தொண்டை,சுவாசப் பாதை, நுரையீரல்கள் ஆகியவற்றில் உள்ளன. இவற்றின் வழியாக கரோனா வைரஸ் நுழையும்போது, உடலின் தடுப்பாற்றல் மண்டலம் எதிர்க்கும். ஆனால், அதை முறியடிக்கும் விதமாக கரோனா வைரஸ் மனித செல்களின் ஓர் அங்கமாக வேஷமிட்டு, தடுப்பாற்றல் மண்டலத்தின் ‘நினைவு செல்’களை (Memory Cells) ஏமாற்றி, உடலுக்குள் நுழைந்துவிடும். இது பொதுவானது.

சுவாசத் தடை நோய் உள்ளவர்களுக்கு அவர்களது புகைப் பழக்கம் காரணமாக சுவாசப் பாதை செல்கள் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கும். அதனால் அந்த செல்களின் மேற்பரப்பு புரதங்கள் சாதுவாக இருக்கும். பூனை இல்லாத வீட்டில் பெருச்சாளிகளுக்கும் கொண்டாட்டம் கூடிவிடும்தானே!

அதேபோலதான் இவர்களது சுவாசப் பாதையில் கரோனா கிருமிகள் கூட்டம் சேர்ந்து, அதிக அளவில் பாதிப்புகளை ஏற்படுத்தும். மேலும் அங்கு எதிராளிகளை அடையாளப்படுத்தும் நினைவு செல்கள் (Memory Cells) எப்போதும் உறக்கத்திலேயே இருக்கும் என்பதால், அவற்றை ஏமாற்றி உடல் செல்களுக்குள் நுழைவது கரோனா வைரஸ்களுக்கு மிகவும் எளிதாகிவிடும். பிறகென்ன, இவை நுரையீரலுக்குள் ஒட்டுமொத்தமாக புகுந்து ரணகளமாக்கிவிடும். இதனால் இவர்கள் சுயமாக சுவாசிக்க முடியாமல் திணறுவார்கள். வென்ட்டிலேட்டர் உதவியுடன் செயற்கை சுவாசம் வேண்டுவார்கள்.

அடுத்ததாக, இவர்களது நுரையீரலை பாதிக்கிற விஷயம் இது: கரோனாவை எதிர்த்து உடலின் தடுப்பாற்றல் மண்டலம் போராடும்போது, ‘சைட்டோகைன்’ எனும் புரதம் வெளியாகும். இது கரோனாவை எதிர்த்துப் போராடும் புரதம்தான். ஆனால், இது ரத்தத்தில் அளவோடு இருக்க வேண்டும். அளவு கூடினால் ஆபத்துதான். எப்படி? வயதானவர்களுக்கு இயற்கையாகவே நோய் எதிர்ப்பு ஆற்றல் குறைவாக இருக்கும். சுவாசத் தடை பிரச்சினை உள்ளவர்களுக்கு இதைச் சொல்லவே வேண்டாம். ஆகவே, இவர்களது உடலில் நிகழும் நீடித்த வைரஸ் போராட்டத்தில், தொடர்ந்து ‘சைட்டோகைன்’ உற்பத்தி ஆகிக்கொண்டே இருக்கும். சூறாவளி வந்தால் சமாளிக்கலாம்; சுனாமி வந்தால்? அதுதான் இவர்கள் உடலில் நடக்கிறது.இந்த சுனாமிக்கு பெயர் ‘சைட்டோகைன் ஸ்டார்ம்’ (Cytokine Storm). இந்த சைட்டோகைன் பல உடல் உறுப்புகளை பாதிக்கும். முக்கியமாக, நுரையீரல் திசுக்களை காட்டுத்தீபோல அழித்துவிடும். அப்போது அங்கு ஆக்ஸிஜன் இருக்க வேண்டிய இடத்தில் நீர்கோர்த்துக் கொள்ளும். பாதிக்கப்பட்டவர் சுவாசிக்கவே முடியாமல் போய், உயிருக்கு ஆபத்தாக முடியும்.

3. நீரிழிவு நோய்

நாட்பட்ட நீரிழிவு உள்ளவர்களுக்கும், கட்டுப்பாட்டில் இல்லாத நீரிழிவுக்காரர்களுக்கும் உயர் ரத்த அழுத்தம், இதயநோய், சிறுநீரக நோய் என பலதரப்பட்ட நோய்கள் ஏற்கெனவே இருக்கும். இவர்களது உடலில் இருக்கிற நோய்களை சமாளிக்கவே தடுப்பாற்றல் மண்டலம் சிரமப்பட்டுக் கொண்டிருக்கும். இப்போது புதிதாக கரோனா வைரஸும் சேர்ந்து பாதிக்கும்போது, தடுப்பாற்றல் மண்டலத்தின் சுமை கூடிவிடும். அது செய்வது அறியாது திகைக்கும். காவலாளி கொஞ்சம் கண் அசந்தால் வாசல் தாண்டும் திருடனுக்கு வசதியாகிவிடுவதுபோல, நீரிழிவுக்காரர்களின் இம்மாதிரியான நிலைமையை சாதகமாக எடுத்துக்கொண்டு கரோனா அவர்கள் உடலுக்குள் எளிதாகப் புகுந்துவிடும்.

பொதுவாகவே நீரிழிவுக்காரர்களின் உடலில் நுழையும் எந்த ஒரு தொற்றும் ரத்தச் சர்க்கரையை அதிகப்படுத்திவிடும். கரோனா வைரஸ்களும் அதைத்தான் செய்கின்றன. அப்போது மற்றவர்களுக்கு சாதாரண சளிபோல் ஆரம்பிக்கும் நோய்கூட இவர்களுக்கு சட்டென்று நிமோனியாவில் கொண்டுபோய் விடும். முதலில் நுரையீரலுக்கு ஆக்ஸிஜன் கிடைப்பதில் பிரச்சினை உண்டாகும். உடனே மூச்சுத் திணறல் ஆரம்பமாகும். அடுத்ததாக, இவர்களுக்கு ஏற்கெனவே உடலில் ஓடும் ரத்தக் குழாய்கள், நரம்புகள் ஆகியவையும் பாதிக்கப்பட்டிருக்கும் என்பதால், சிறுநீரகம், மூளை, கல்லீரல் போன்ற முக்கிய உறுப்புகளுக்கும் போதுமான ஆக்ஸிஜன் கிடைக்காமல் போகும். அப்போது அந்த உறுப்புகளும் செயலிழக்க ஆரம்பிக்கும் (Multi Organ Failure). இப்படி உடலின் ஒட்டுமொத்த இயக்கமே ஒடுங்கிப்போகும். கரோனாவால் பாதிக்கப்பட்ட நபருக்கு இத்தகைய நிலைமையில் உயிருக்கு ஆபத்து ஏற்படுவதை தடுப்பது மிகவும் கடினம். ஆகவேதான் கரோனா இவர்களை சுலபமாக வீழ்த்திவிடுகிறது.

இப்படி, கரோனா ஆபத்தை தீர்மானிப்பது வயது அல்ல. நோய்தான்! எனவே, நோயின்றி வாழக் கற்போம்.

இப்போதைக்கு நோய் இருந்தாலும் இல்லாவிட்டாலும், நம் எல்லோரையும் கரோனா ஆபத்தில் இருந்து காப்பது ஊரடங்கு மட்டுமே! அதை மதித்து நடப்போம். விழித்திருப்போம்! விலகி இருப்போம்! வீட்டிலேயே இருப்போம்!

கரோனாவில் இருந்து மீண்ட மூத்த தம்பதியர்..

புள்ளிவிவரத்தோடு சொன்னால், இதுவரை 50-59 வயதினரில் பாதிக்கப்பட்டவர்களில் உயிரிழந்தவர்கள் 1.3% பேர். 60-69 வயதினர் 3.6% பேர். 70-79 வயதினர் 8% பேர். 80 வயதுக்கு மேற்பட்டவர்கள் 14.8% பேர். வயது கூடக்கூட, உயிரிழப்பு விகிதமும் கூடுகிறது. சீனா, இத்தாலி, அமெரிக்காவில் இது உறுதியாகியுள்ளது. இந்தியாவிலும் இதே நிலைமைதான். ஆனால், இந்த உயிரிழப்புகளுக்கு காரணம் வயது மூப்பு மட்டும்தானா? ‘இல்லை’ என்கிறது உலக சுகாதார நிறுவனம். இந்த கருத்தை ஆமோதிக்கிறது கேரளா. அங்கு 98 வயது முதியவரும், அவரது 88 வயது மனைவியும் கரோனா நோயில் இருந்து மீண்டது இதற்கு ஓர் உதாரணம்.

கட்டுரையாளர்: பொதுநல மருத்துவர்

தொடர்புக்கு: gganesan95@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x