கரோனா தொற்றோடு தவறுதலாக விடுவிக்கப்பட்ட நிதின் ஷர்மா செங்கல்பட்டு அருகே கைது

கரோனா தொற்றோடு தவறுதலாக விடுவிக்கப்பட்ட நிதின் ஷர்மா செங்கல்பட்டு அருகே கைது
Updated on
1 min read

கரோனா தொற்றுடன் தவறுதலாக விடுவிக்கப்பட்ட நிதின் ஷர்மா, செங்கல்பட்டு அருகே படாளம் என்ற இடத்தில் தனிப்படை போலீஸாரால் கைது செய்யப்பட்டார்.

டெல்லி படேல் நகரைச் சேர்ந்த நிதின் ஷர்மா (30) என்ற இளைஞர் கடந்த 6-ம் தேதி விழுப்புரம் அரசு மருத்துவமனையில் உள்ள கரோனா சிறப்புப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார். கரோனா பரிசோதனை முடிந்து, 'கரோனா தொற்று இல்லை' என கடந்த 7-ம் தேதி இரவு நிதின் ஷர்மாவை சுகாதாரத்துறையினர் அனுப்பி வைத்தனர். பின்னர் நள்ளிரவில் வந்த சோதனை அறிக்கையில் நிதின் ஷர்மாவுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகத் தெரியவந்தது.

இதையடுத்து மாவட்ட சுகாதாரத்துறை துணை இயக்குனர் செந்தில்குமார் விழுப்புரம் மேற்கு போலீஸில் புகார் அளித்தார். நிதின் ஷர்மாவை பிடிக்க 7 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. இதனைத் தொடர்ந்து காவல்துறையினர் உளுந்தூர்பேட்டை முதல் சென்னை வரை புறவழிச்சாலையில் தமிழ், ஆங்கிலம் இந்தி ஆகிய மொழிகளில் தகவல் தெரிவிக்கவேண்டிய தொலைபேசி எண்ணுடன் சுவரொட்டி ஒட்டப்பட்டது.

இந்நிலையில் நேற்று வடமாநில லாரி டிரைவர் ஒருவர் போலீஸாரைத் தொடர்பு கொண்டு நிதின் ஷர்மா செங்கல்பட்டு அருகே படாளம் என்ற இடத்தில் உள்ள (Truck Bay) லாரி நிறுத்துமிடத்தில் தங்கி இருப்பதாகத் தகவல் தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து தனிப்படை போலீஸார் விரைந்து சென்று நிதின் ஷர்மாவைக் கைது செய்தனர். மேலும் அவருடன் இருந்த 4 பேரை செங்கல்பட்டு போலீஸார் பிடித்து செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் கரோனா சோதனைக்காக அனுமதித்தனர்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in