

“கரோனாவை எதிர்க்கும் விவகாரத்தில் தமிழக அரசும் தமிழகத்தின் ஏனைய அரசியல் கட்சிகளும் ஒருமித்துக் குரல் எழுப்ப வேண்டிய நேரம் இது” என்று மீத்தேன் திட்ட எதிர்ப்புக் கூட்டமைப்பின் தலைமை ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் ஜெயராமன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
"கரோனா பாதிப்பில் இந்திய அளவில் தமிழகம் இரண்டாம் இடத்தில் இருக்கிறது. கரோனா பரவலில் இரண்டாம் நிலையிலிருந்து மூன்றாம் நிலை நோக்கி தமிழகம் நகர்ந்து கொண்டிருக்கிறது. ஆனால், உயிர் காப்பு உபகரணங்கள் இல்லாததாலும், நிதிப்பற்றாக் குறையாலும் தமிழகம் தவிக்கிறது.
தமிழகத்தில் 38 மாவட்டங்களில் 19 கரோனா பரிசோதனைக் கூடங்கள் மட்டுமே உள்ளன. ஒரு நாளைக்கு 600 பேர் வீதம் இதுவரை 8,320 பேர் மட்டுமே பரிசோதனைக்கு உட்படுத்தப் பட்டிருக்கிறார்கள். அதாவது, 10 லட்சம் பேருக்கு 121 பேர் மட்டுமே பரிசோதனைக்கு உள்ளாக்கப்படுகிறார்கள். உலக அளவில் 10 லட்சம் பேருக்கு 16,792 பேருக்கு சோதனைகள் நடத்தப்பட்டுள்ளன. அமெரிக்காவில் 22 லட்சம் பேருக்கு சோதனை முடிந்து இருக்கிறது. ஆனால், தமிழகம் பரிதாபகரமான நிலையில் இருக்கிறது. ஆனாலும் தமிழக அரசின் செயல்பாடுகளைக் குறைகூறிவிட முடியாது. தமிழக அரசு தன்னால் இயன்ற அளவில் மக்களைப் பாதுகாக்கக்கூடிய அளவில் செயல்படுவது பாராட்டுக்குரியது.
இந்நிலையில், அரை மணிநேரத்தில் பரிசோதனையைச் செய்து விடக்கூடிய ரேபிட் டெஸ்ட் கிட் கருவிகளை மாநிலங்கள் நேரடியாக வாங்குவதற்கு திடீரென மத்திய அரசு தடை விதித்துள்ளது. எதிர்காலத்தில் 10 லட்சம் கருவிகள் வாங்கி, அதில் அனைத்து மாநிலங்களுக்கும் பங்கு தரப்போவதாக இந்திய அரசு கூறுகிறது.
உயிர்காக்கும் கருவிகளைக்கூட தமிழகம் வாங்க அதிகாரமற்ற நிலையை இந்திய அரசு திணித்து, அடாவடி செய்கிறது. மக்கள் நல்வாழ்வுத் துறை என்பது மாநில அரசின் அதிகாரத்துக்கு உட்பட்டது. ஆனால், அதிலும் இந்திய அரசு தலையிடுகிறது. கேரள, கர்நாடக மாநிலங்கள் சீனாவிலிருந்து ரேபிட் டெஸ்ட் கருவிகளை வாங்கிவிட்டன.
ஆனால், தமிழகம் அந்தக் கருவிகளை வாங்கிவிடாதபடி இந்திய அரசு பார்த்துக் கொள்கிறது. இந்திய அரசைப் பொறுத்தவரை மாநிலங்களுக்கு உடனடியாக நிதி வழங்குவதுதான் முக்கியமானது. ஆனால், அந்த நிதியைக்கூட அளிக்காமல் தாமதப்படுத்துகிறது. கடந்த மார்ச் மாதத்திலிருந்தே பாதிப்பை உணர்ந்து மாநிலங்கள் பதற்றத்துடன் பெரும் பங்காற்றி வருகின்றன. இந்நிலையில் கரோனா பாதிப்புக்கான சிறப்பு நிதியை இன்னமும் இந்திய அரசு வழங்கவில்லை.
ஜிஎஸ்டி வரி வருவாயில் தமிழகத்திற்கு வரவேண்டிய பாக்கி ரூ.12,763 கோடியை உடனடியாக வழங்க தமிழக அரசு திரும்பத் திரும்பக் கேட்கிறது. அது தமிழகத்தின் பணம். அதைக்கூடத் தர மறுக்கிறது மத்திய அரசு. அதுமட்டுமன்றி, கரோனா எதிர்ப்புக்காக தமிழகம் கோரிய சிறப்பு நிதி எதையும் தராமல் வெறும் ரூ.510 கோடியை மட்டுமே, அதுவும், மாநிலப் பேரிடர் நிதியிலிருந்து வழங்குவதாக மத்திய அரசு அறிவித்தது.
இந்நிலையில் ஏப்ரல் 11-ம் தேதி மருத்துவ உபகரணங்கள் வாங்க ரூ.1000 கோடி உடனடியாகத் தேவை என்று மீண்டும் தமிழகம் வேண்டுகோள் விடுத்துள்ளது. இந்திய அரசு இந்த நிதியையும் தரவில்லை; உயிர் காப்புக் கருவிகளை வாங்கவும் அனுமதிக்கவில்லை.
கடந்த காலத்தில் தொடர்ச்சியான பேரிடர்களான வர்தா புயல், ஒக்கி புயல், கஜா புயல் மற்றும் கடும் வறட்சி போன்றவற்றுக்கெல்லாம் தமிழக அரசு உதவி கோரி கோரி, ஓய்ந்து போனது. அப்போதெல்லாம் மாநிலப் பேரிடர் நிதியில் மிகக்குறைவான ஒதுக்கீடு மட்டுமே தமிழகத்துக்குத் தரப்பட்டது.
இந்திய அரசு பணமும் தராது; உயிர்காக்கும் கருவிகளை வாங்கவும் விடாது என்றால், இந்திய அரசின் நோக்கம்தான் என்ன? தமிழகத்திற்கும், தமிழ் மக்களுக்கும் விரோதமாக இந்திய அரசு வெளிப்படையாக நடந்து கொள்கிறது. இந்நிலையில் இப்பிரச்சினையைத் தமிழக தலைவர்கள் எப்படிப் பார்க்கிறார்கள் என்ற கேள்வி எழுந்துள்ளது.
வேண்டுகோள் விடுப்பது; நிதியைத் தராவிட்டால் அமைதி காப்பது என்பதுதான் தமிழகத்தில் உள்ள அனைத்துக் கட்சித் தலைவர்களின் போக்காக இருந்து வந்திருக்கிறது. ஆனால், தமிழர்களுடைய உயிர்காக்கும் பிரச்சினையான கரோனா எதிர்ப்புப் பிரச்சினையில், தமிழகக் கட்சிகள் அவ்வாறு இருக்கக்கூடாது. தமிழக அரசும் ஏனைய கட்சிகளும் ஒருமித்துக் குரல் எழுப்ப வேண்டிய நேரம் இது.
இந்திய அரசிடம் மிகத் தெளிவாக, கறாராக சுட்டிக்காட்ட வேண்டும். தமிழகத்தின் உரிமைகளைப் பாதுகாக்க, ஆளுங்கட்சி, எதிர்கட்சி, பிற கட்சிகள் என, அனைத்துக் கட்சிகளும் கடமையாற்ற வேண்டும். இப்போது செயல்படாவிட்டால் மிகப்பெரும் இழப்பை தமிழகம் சந்திக்கும்.
மத்திய அரசின் அடாவடியான இப்போக்கை மீத்தேன் திட்ட எதிர்ப்புக் கூட்டமைப்பு வன்மையாகக் கண்டிக்கிறது. கரோனா பாதிப்பால், அரசின் அறிவுறுத்தலை ஏற்று, வீட்டில் மக்கள் முடங்கியிருக்கும் இக்காலக் கட்டத்திலும் கூட, போராட்டக்களம் நோக்கி மக்களை மத்திய அரசு விரட்டக்கூடாது”.
இவ்வாறு ஜெயராமன் தெரிவித்துள்ளார்.