

மதுரை மாநகராட்சியில் 100 வார்டுகளில் கிருமி நாசினி தெளிக்க, 400 பிரமாண்ட சக்திமான் விசை தெளிப்பான்கள் வாங்கப்பட்டுள்ளன.
மதுரை மாநகராட்சியில் கரோனா தடுப்புப் பணியாக ரூ.36.80 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக வாங்கப்பட்டுள்ள கிருமி நாசினி தெளிக்கும் வாகனங்களை ஆணையாளர் ச.விசாகன் பார்வையிட்டார்.
மதுரையில் 49 பேர் இதுவரை ‘கரோனா’ வைரஸ் நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒருவர் இறந்துள்ளார். 3 பேர் குணமடைந்து வீடுகளுக்கு திரும்பியுள்ளனர்.
இன்னும் மதுரையில் ‘கரோனா’ வைரஸ் சமூக பரவல் நிலையை அடையாவிட்டாலும் அதற்கான வாய்ப்புகள் இருப்பதாகவே சுகாதாரத்துறை அஞ்சுகிறது.
அதனால், ரேஷன் கடைகள், முதல் மளிகை கடைகள், காய்கறிக் கடைகள் கண்காணித்து மக்கள் சமூக இடைவெளியை பின்பற்றாத கடைகளுக்கு ‘சீல்’ வைத்து அடைக்க மாநகராட்சி நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
மதுரை அரசு மருத்துவமனை, ஏடிஎம் மையங்கள், ‘கரோனா’ பாதித்த வார்டுகளில் ட்ரோன் மூலம் மாநகராட்சி கிருமி நாசினி தெளிக்கிறது.
இந்நிலையில் மாநகராட்சி முழுவதும் கிருமி நாசினி தெளிக்கும் வகையில் பிரமாண்ட கிருமி நாசினி தெளிக்கும் இயந்திரங்கள் மாநகராட்சி வாங்கியுள்ளது.
அவற்றில் சக்திமான் ரக்ஷக் என்ற 400 விசை தெளிப்பான்கள் 4 வாங்கப்பட்டு டிராக்டரில் பொருத்தப்பட்டு பயன்படுத்தப்பட்டு வருகிறது.
மினி ஜெனரேட்டர் வடிவமைப்பில் இயங்கும் 38 தெளிப்பான்கள் இலகுரக வாகனத்தின் மூலமும், பேட்டரி மின் சக்தியில் இயங்கும்.
இதுதவிர கிருமி நாசினி தெளிக்கும் 100 கைத் தெளிப்பான்கள் மூலமும் மாநகராட்சியின் அனைத்துப் பகுதிகளிலும் தினமும் கிருமிநாசினி மருந்துகள் தெளிக்கும் பணிகள் நடக்கிறது.
மொத்தம் ரூ.36.80 இலட்சம் மதிப்பீட்டில் இந்த கிருமி நாசினி தெளிக்கும் நவீன இயந்திரங்கள், அதற்கான வாகனங்கள் வாங்கப்பட்டுள்ளன. மதுரை கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து, இந்த வாகனங்கள் வாங்கப்பட்டுள்ளன.
மாநகராட்சி ஆணையாளர் விசாகன், கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் பி.மூர்த்தி, நகரப்பொறியாளர் அரசு மற்றும் பலர், இந்த கிருமி நாசினி இயந்திரங்களையும், அதற்கான வாகனங்களையும் பார்வையிட்டனர்.