

மக்கள் துயரங்களை பிரதிபலிக்காத பிரதமரின் வெற்று உரை வேதனைகளை தீர்க்க உதவாது என, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் இரா.முத்தரசன் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக, இரா.முத்தரசன் இன்று (ஏப்.14) வெளியிட்ட அறிக்கையில், "கோவிட்-19 வைரஸ் தொற்று நோய் பரவல் தடுப்புக்காக கடந்த 24.04.2020 ஆம் தேதி முதல் நாடு முழுவதும் முடக்கப்பட்டது. 21 நாட்கள் முடியும் நிலையில், தொலைக்காட்சியில் உரையாற்றிய பிரதமர் நாட்டின் முடக்க நிலை வருகிற மே 3 ஆம் தேதி வரை நீடிக்கும் என அறிவித்துள்ளார்.
கடந்த சில நாட்களாக முதல்வர்கள் ஏப்ரல் 30 வரை ஊரடங்கு நீடிக்கும் என்று அறிவித்து வந்தனர். இதனைத் தொடர்ந்து பேசிய பிரதமர் மே 3 வரை நீடிக்கும் என அறிவித்தன் மூலம் உலக தொழிலாளி வர்க்கத்தின் உரிமை தினமும் முடக்கப்பட்டுள்ளது.
சமூக இடைவெளி கடைபிடித்தல், தனித்திருத்தல் தவிர இந்த ஆட்கொல்லி நோய் பரவலைத் தடுக்க வேறு வழி இல்லை என்று பிரதமர் திரும்பத் திரும்ப வலியுறுத்துகிறார்.
நாட்டு மக்கள் அனைவரும் கட்டாயம் முகக்கவசம் அணிந்து கொள்ள வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். நாட்டு மக்களின் ஒவ்வொரு உயிரும் முக்கியமானது என ஆதங்கப்படும் பிரதமர் மக்கள் உணவுத் தேவையை பூர்த்தி செய்ய எந்த ஏற்பாடும் செய்யவில்லை. பட்டினி கிடக்கும் வயிறுகள் அமைதி கொள்ளாது என்பதை பிரதமர் உரை உணரவில்லை.
நாட்டின் உழைக்கும் மக்களில் 94 சதவீதம் தொழிலாளர்கள் அமைப்புசாரத் தொழிலாளர்கள். இதில் புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் எண்ணிக்கை கணிசமானது. இவர்கள் சட்ட ரீதியாகவோ, சமூக ரீதியாகவோ எந்த பாதுகாப்பும் இல்லாதவர்கள். அன்றாடம் கிடைக்கும் அரைகுறை வேலைகளில் கிடைத்த வருவாயைக் கொண்டு பட்டினி வாழ்க்கை நடத்தி வருபவர்கள். இவர்களது உணவுக்கான ஏற்பாடுகளுக்கு பிரதமர் முன்னுரிமை அளிக்க வேண்டும்.
குடும்பத்திற்கு தலா ரூபாய் 10 ஆயிரம் நிவாரண நிதி வழங்க வேண்டும். மே, ஜூன் மாதங்களுக்கான உணவு தானியங்கள், சர்க்கரை, பருப்பு, சமையல் எண்ணெய் உள்ளிட்ட அத்தியாவசிய உணவுப் பொருள்களை வழங்க வேண்டும் என்றும் இதற்கான முறையில் நாட்டின் மொத்த வருமானத்தில் 10 சதவீதம் வரை ஒதுக்கீடு செய்து சிறப்பு நிவாரணத் தொகுப்பு திட்டம் அறிவிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. ஆனால், பிரதமர் இதன் மீது ஒரு வார்த்தையும் பேசவில்லை.
வாடகை வீடுகளில் வசித்து வருபவர்களிடம் வாடகை வசூலிக்கக் கூடாது என்று அறிவிக்கப்பட்டது. தமிழ்நாட்டில் கோயில் மனைகளில் குடியிருந்து வருபவர்களிடம் இந்து சமய அறநிலையத்துறை கட்டாய வசூலில் ஈடுபட்டுள்ளது.
தொழிலகங்களில் வேலை செய்து வந்த தொழிலாளர்களுக்கும், வணிக நிறுவனங்களின் பணியாளர்களுக்கும் அந்தந்த நிறுவனங்கள் ஊதியம் வழங்க வேண்டும் என்று பிரதமர் அறிவித்தார். ஆனால் நடைமுறையில் தொழிலகங்கள், வணிக நிறுவனங்கள், உற்பத்தி மற்றும் சேவைப்பணிகளை முடக்கிவிட்ட நிலையில் ஊதியம் கொடுக்க எந்த வழியும் இல்லாமல் விழி பிதுங்கி நிற்கின்றன.
சிறு, குறு, நடுத்தரத் தொழில் முனைவோர் மாதத் தவணை கட்ட முடியாமல் தவித்து வருகின்றனர். அரசியல் கட்சிகள், தொழிற்சங்கங்கள், பொது நல அமைப்புகள், தன்னார்வலர்கள் என பலரின் உதவியில் உயிர் வாழ்ந்து வரும் தொழிலாளர்களின் பிரச்சினைகள் குறித்து கவலைப்படாத பிரதமர் நாட்டு மக்களின் சிரமங்களை புரிந்து கொண்டிருப்பாத கூறுவது அர்த்தமற்றது.
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தில் கிடைக்கும் வேலைவாய்ப்பு மட்டுமே வாழ்வாதாரம் என்றிருக்கும் விவசாயத் தொழிலாளர்கள், கிராமப்புறத் தொழிலாளர்களுக்கு இரண்டு நாள் ஊதியம் நிவரணமாக அறிவித்திருப்பது எந்த வகையிலும் நியாயம் ஆகாது.
கரோனா வைரஸ் தொற்று நோய் தடுப்பு கால நடவடிக்கைகளை குறுகி அரசியல் ஆதாயம் தேட பயன்படுத்தும் பிரதமரின் கிட்டப்பார்வையை அவரது உரை வெளிப்படுத்தியுள்ளது.
உயிர் வாழ துடிக்கும் மக்கள் துயரங்களை பிரதிபலிக்காத பிரதமரின் வெற்று உரை வேதனைகளை தீர்க்க உதவாது, முடக்க காலத்தில் மக்கள் உணவுத் தேவைகள், உடனடி மருத்துவத் தேவைகளை பூர்த்தி செய்யும் ஆக்கபூர்வமான நிவாரணத் தொகுப்புத் திட்ட அறிவிப்பதாக பிரதமரின் அடுத்த உரை அமைய வேண்டும்" என இரா.முத்தரசன் வலியுறுத்தியுள்ளார்.