தொற்று நோயாளியின் தாதியாக 45 நாட்கள்: மருத்துவர் ராமதாஸின் பள்ளிக்கால அனுபவங்கள்

தொற்று நோயாளியின் தாதியாக 45 நாட்கள்: மருத்துவர் ராமதாஸின் பள்ளிக்கால அனுபவங்கள்
Updated on
2 min read

மருத்துவர்கள் அரசியலில் ஈடுபடுவது ஒன்றும் அபூர்வமல்ல. ஆனால், கரோனா தொற்று காலத்தில் தினம் தினம் அரசுக்கு ஆக்கபூர்வமான யோசனைகளையும், ஊடரங்கால் பாதிக்கப்பட்டுள்ள மக்களின் வாழ்வாதாரம் குறித்த கோரிக்கைகளையும் அறிக்கை வாயிலாகத் தொடர்ந்து வலியுறுத்திக் கொண்டிருப்பவர் மருத்துவர் ராமதாஸ்.

தமிழ்நாடு அரசு ஊரடங்குக் காலத்தை நீட்டிக்க வேண்டும் என்று ஒரு வாரத்துக்கு முன்பே வற்புறுத்தியவரும் அவரே. அவரது இந்த அக்கறைக்கு வெறுமனே அரசியல்வாதி, மருத்துவர் என்பதையும் தாண்டிய காரணம் உண்டு.

தொற்று நோயின் கொடுமையை மிக அருகில் பார்த்தவர் அவர். இளமைக்காலத்தில் சென்னையில் தனது அக்கா வீட்டில் தங்கிப் படித்துக் கொண்டிருந்தார். அப்போது ஒரு சமயம் தனது அக்கா கணவர் (மாமா) பெரியம்மைக்கு ஆளாகி தொற்றுநோய்க்கு சிறப்பு மருத்துவமனையில் தங்கிச் சிகிச்சை பெற்றபோது 45 நாட்கள் உடன் தங்கித் தாதியைப் போல சேவை செய்தவர் அவர். அந்த அனுபவம் பற்றித் தன் வரலாற்று நூலான "பாட்டாளிச் சொந்தங்களே" எனும் புத்தகத்தில் இப்படி எழுதியிருக்கிறார் ராமதாஸ்.

"அப்போது வருடம் 1958. பள்ளி இறுதியாண்டு படித்துக்கொண்டிருந்த சமயத்தில், என் படிப்புக்கு ஒரு சோதனை வந்தது. 11-ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கு இரண்டு மாதமே இருந்த நிலையில், மாமாவுக்கு திடீரென பெரியம்மை கண்டுவிட்டது. சென்னை தண்டையார்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்ந்திருந்தோம். அப்போது அதற்கு காலரா ஆஸ்பத்திரி என்று பெயர். மாமாவின் உடலில் ஒரு இடம் பாக்கியில்லாமல் அம்மை கண்டிருந்தது.

மருத்துவமனைக் கூடத்தில், மாமாவையும் சேர்த்து சுமார் 100 பேர். அனைவரும் அம்மைநோய் கண்டவர்கள். தரையில்தான் படுக்க வைக்கப்பட்டிருந்தனர். தொடர்ந்து மாமாவின் உடல்நிலை கவலைக்கிடமானது. ஒரு கட்டத்தில் நினைவிழந்து, பிழைப்பதே கடினம் என்று மருத்துவர்கள் கைவிரித்துவிட்டனர். பெரியம்மை நோயின் கடுமை அது.

அந்நோயை 'வைசூரி' என்றும் அப்போதெல்லாம் சொல்வார்கள். பெரியம்மை வைரஸ் கிருமி மனிதனை மட்டும் தாக்கும் ஒரு கடுமையான தொற்றுநோய். பெரியம்மை நோயை உலகின் எல்லா நாடுகளில் இருந்தும் அறவே ஒழிக்க வேண்டும் என உலக சுகாதார அமைப்பு 1966-ம் ஆண்டு தீர்மானம் நிறைவேற்றியது. அதன் பிறகே இந்நோய் ஒழிப்பு குறித்த செயல்பாடுகளில் வேகம் சேர்ந்தது. இன்னொரு முக்கியமான செய்தி, பெரியம்மை நோய் ஒழிப்பில் முக்கியமான திருப்பத்தை மருத்துவ உலகத்தில் நிகழ்த்தியவர் நம் சென்னையைச் சேர்ந்த மருத்துவர் ஏ.ராமச்சந்திர ராவ்.

மருத்துவமனையிலேயே தங்கி இரவும், பகலும் மாமாவுக்கு வேண்டிய உதவிகளைச் செய்துவந்தேன். அப்போதெல்லாம் மருத்துவமனை வளாகத்துக்குள் இருக்கும் மரத்தடியில் சில மணிநேரம் மட்டுமே எனக்குத் தூக்கம். மற்ற நேரங்களில் ஒரு தாதியைவிடவும் அதிகமாகவே மாமாவுக்குப் பணிவிடைகள் செய்தேன்.

அத்தனை நோயாளிகளுக்கும் சேர்த்து ஒன்றிரண்டு செவிலியர்களே இருந்தனர். ஆத்திரம் - அவசரம் என்று தொண்டை கிழியக் கூப்பிட்டாலும் உதவிக்கு வர மாட்டார்கள். அதனால் மலம், சிறுநீர் கழித்தாலும் நான்தான் அதைச் சுத்தம் செய்ய வேண்டும்.

சுமார் 45 நாட்கள் மருத்துவமனையிலேயே தவம் கிடந்தேன். வீட்டுக்குப் போகாமல் மாமாவைக் கவனித்து வந்தேன். நரகம் என்று ஒன்று இருந்தால் - அது எப்படி இருக்கும் - நரக வேதனை என்று சொல்வார்களே- அது எந்த அளவுக்கு இருக்கும் என்பதை அந்த மருத்துவமனைக் கூடத்தில்தான் கண்கூடாகப் பார்த்தேன். அங்கே இருந்த நோயாளிகளின் நிலையும், அவர்கள் அனுபவித்த வேதனைகளும் இப்போதும் என் நினைவில் பதைபதைப்போடு இருக்கின்றன. என் அக்காவின் மாங்கல்யம் நிலைக்கவும், என் படிப்பு தொடரவும் மாமா நிச்சயம் உயிர் பிழைத்தே ஆக வேண்டும். கண்ணும் கருத்துமாக அவரைப் பார்த்துக் கொண்டேன்.

ஒரு வழியாக மாமாவின் உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டது. பாம்புக்குத் தோல் உரிவது போல உரிந்து, உடல் முழுக்க புதுத் தோல் தோன்றியது. 'உங்க மாமா பிழைத்துக் கொண்டார்' என்று மருத்துவர்கள் சொன்னதைக் கேட்டு மனம் மகிழ்ச்சியில் துள்ளியது. அச்செய்தியை அக்காவிடம் சொல்ல ஓடினேன். சரியாகச் சாப்பிடாமல், எந்நேரமும் அழுது புலம்பிக் கொண்டிருந்த அக்காவுக்கு அந்த வார்த்தைகள் மிகப்பெரிய ஆறுதலாக இருந்தன."

இவ்வாறு தன் வரலாற்று நூலில் எழுதியிருக்கிறார் ராமதாஸ்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in