

சித்திரை முதல் நாளான இன்று எட்டயபுரம் அருகே பிதப்புரம் கிராமத்தில் உள்ள மானாவாரி நிலத்தில் விவசாயிகள் பொன்னேர் பூட்டும் நிகழ்ச்சியில் ஈடுபட்டனர்.
சித்திரையில் பொன்னேர் பூட்டி, கோடை உழவை முறையாக செய்தால் கண்டிப்பாக மகசூல் அதிகமாக கிடைக்கும் என்பது விவசாயிகளின் நம்பிக்கை. இதனடிப்படையில் தென் மாவட்டங்களில் தமிழ் புத்தாண்டின் தொடக்க நாளான சித்திரை முதல் நாளில் பொன்னேர் பூட்டுவது வழக்கம்.
தமிழ் புத்தாண்டு நாளான இன்று எட்டயபுரம் அருகே பிதப்புரம் கிராமத்தில் உள்ள விவசாயிகள் தங்களது வீடுகளில் சேமித்து வைத்திருந்து நவதானிய விதைகள், காளைகள், மாட்டு வண்டிகள் ஏர்க்கலப்பை, கடப்பாரை, மண்வெட்டி மற்றும் டிராக்டர் உள்ளிட்ட விவசாயத்துக்கு பயன்படும் கூடிய அனைத்து பொருட்களுக்கு சந்தனம், குங்குமம் வைத்து வழிபட்டனர்.
தொடர்ந்து விவசாயிகள் தங்களது வீடுகளில் இருந்து காளைகள், டிராக்டர்கள் மற்றும் நவதானிய விதைகள் எடுத்துக்கொண்டு ஊர்வலமாக ஊர் பொது நிலத்துக்கு வந்தனர். அங்கு நிலத்துக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது.
தொடர்ந்து மானாவாரி நிலத்தில் பொன்னேர் பூட்டும் நிகழ்ச்சியை விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் பி.சின்னப்பன் தொடங்கி வைத்தார். பின்னர் நிலத்தில் நவதானிய விதைகளை தூவினார்.
பின்னர் விவசாயிகளுக்கு முகக்கவசங்களை வழங்கினார். கரோனா பரவும்
விதம் குறித்தும், அதிலிருந்து விவசாயிகள் தங்களை தற்காத்து கொள்ள மேற்கொள்ள் வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் விளக்கினார். இதில், கரிசல் பூமி விவசாயிகள் சங்க தலைவர் அ.வரதராஜன் மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டனர்.
ஆண்டு முழுவதும் விவசாயி பணிகள் மேற்கொள்ளும்போது, எந்தவித இடர்பாடோ, விஷ ஜந்துகள் தீண்டுதலோ இல்லாமல் இருக்க தமிழ் புத்தாண்டின் தொடக்க நாளான சித்திரை முதல் தேதியில் பூமித்ததாயை வணங்கி உழவுப் பணியை தொடங்குவது பல தலைமுறைகளாக கடைபிடித்து வருகிறோம். அதன் தொடக்கமே தற்போது நடந்துள்ளது. இந்தாண்டு மானாவாரி விவசாயம் நன்றாக இருக்கும், என விவசாயிகள் தெரிவித்தனர்.