

கரோனாவைக் காரணம் காட்டி பல்வேறு சிகிச்சை மறுப்பால் புதுச்சேரியில் நோயாளிகள் தவிக்கும் சூழல் உருவாகியுள்ளது. இச்சூழலில் முதல்வரிடம் கேட்டதற்கு, அரசுத் தரப்பில் சிகிச்சை மறுத்தால் நடவடிக்கையும், தனியாராக இருந்தால் உரிமமும் ரத்தாகும் என்று எச்சரித்தார்.
கரோனா அச்சுறுத்தல் ஏற்பட்டதைத் தொடர்ந்து புதுச்சேரி அரசு கதிர்காமம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை 700 படுக்கை வசதிகளுடன் கரோனா சிகிச்சைப் பிரிவு மருத்துவமனையாகச் செயல்பட்டு வருகிறது.
அதேநேரத்தில், கடந்த மாதம் 23-ம் தேதி முதல் ஜிப்மர் மருத்துவமனையில் தோல், எலும்பு முறிவு, கண், உடற்பயிற்சி சிகிச்சை, உளவியல், மற்றும் பல் மருத்துவத் துறைகளின் வெளிப்புற சிகிச்சைகள் நிறுத்தப்பட்டுள்ளன. இச்சூழலில் இப்பிரிவுகளில் பாதிக்கப்பட்டோருக்கு சிகிச்சை தர ஜிப்மரில் மறுப்பதாகப் புகார்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.
தற்போது ஏழ்மை நிலையில் பாதிக்கப்பட்டு தனியாரில் சிகிச்சை பெறும் ஒருவர் கூறுகையில், "கரோனா சிகிச்சை தராத ஜிப்மரில் இதர பிரிவுகளில் பாதிக்கப்பட்டு வரும் உரிய நபர்களுக்கு சிகிச்சை தர வேண்டும். ஏழ்மையில் உள்ள நாங்கள் எப்படி தனியாரில் சிகிச்சை பெற முடியும்?" என்று கேள்வி எழுப்புகின்றனர்.
அதேபோல் கர்ப்பிணிகள் தரப்பில் கூறுகையில், "சிகிச்சைக்காக புதுச்சேரி அரசு ராஜீவ் காந்தி மகளிர் மற்றும் குழந்தைகள் மருத்துவனைக்குச் செல்கின்றனர். அவ்வாறு வரும் கர்ப்பிணிகளை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் உள்ள மருத்துவர்கள் உடனடியாகச் சேர்த்துக்கொள்வது இல்லை.
கரோனா சிறப்பு மருத்துவமனைக்குச் சென்று கரோனா பாதிப்பு இல்லை என்று சான்று வாங்கி வந்தால் மட்டுமே சேர்த்து சிகிச்சை அளிப்போம் என்று கூறுகின்றனர். இதனால் கர்ப்பிணிகள் ராஜீவ் காந்தி மருத்துவமனைக்கும், கரோனா சிறப்பு மருத்துவமனைக்கும் அலையும் சூழல் உள்ளது" என்று தெரிவிக்கின்றனர்.
ஏஐயூடியூசி மாநில செயலர் சிவக்குமார் கூறுகையில், "புதுச்சேரியில் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் தினமும் அவசர சிகிச்சைக்காகவும், வெளிப்புற, தற்காலிக மற்றும் தொடர் சிகிச்சைக்காகவும், உள்ளிருப்பு நோயாளிகளாகவும் ஆயிரக்கணக்கானோர் சிகிச்சை பெற்று வந்தனர்.
ஊரடங்கால் தனியார் மருத்துவமனைகளில் மட்டுமல்ல அரசு மருத்துவமனைகளிலும் சிகிச்சை பெற முடியாத கொடுமை ஏற்பட்டுள்ளது. அனைத்து மருத்துவமனைகளிலும் கரோனாவைக் காரணம் காட்டி சிகிச்சை தர மறுக்கின்றனர். ஆட்சியாளர்கள் நோயாளிகளைப் பற்றிக் கவலைப்படுவதில்லை" என்று தெரிவித்தார்.
இப்புகார்கள் தொடர்பாக முதல்வரிடம் பலரும் தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து முதல்வர் நாராயணசாமி கூறுகையில், " மருத்துவமனைகளில் மருத்துவம் பார்க்க முடியாமல் இருப்பதாக நோயாளிகள் தெரிவித்தனர். இந்திரா காந்தி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையை மட்டும் கரோனா மருத்துவமனையாக அங்கீகரித்துள்ளோம்.
இதர மருத்துவமனைகளில் சென்று மருத்துவம் பார்க்க தடையில்லை. மருத்துவர்கள் கண்டிப்பாக மருத்துவம் பார்க்க வேண்டும். இல்லாவிட்டால் நடவடிக்கை எடுக்கப்படும். தனியார் மருத்துவக் கல்லூரிகளிலும் மருத்துவம் பார்க்க வேண்டும். தனியார் மருத்துவமனைகளும் திறந்திருக்க வேண்டும். தனியாரில் மருத்துவம் செய்யாவிட்டால் உரிமம் ரத்து செய்யப்படும்" என்று தெரிவித்தார்.