Published : 14 Apr 2020 03:10 PM
Last Updated : 14 Apr 2020 03:10 PM

கனி முகத்தின் விழிப்போடும் கை நீட்டத்தின் களிப்போடும் மலர்ந்த சித்திரை

சித்திரைப் பிறப்பை கூடுதல் விசேஷங்களோடு உற்சாகமாகக் கொண்டாடும் மரபு, குமரி மாவட்டத்திலும் கேரளத்திலும் இருக்கிறது. இந்தப் பகுதிகளின் மக்கள் சித்திரை முதல் நாளை சித்திரை விஷூ, கனி காணுதல் என்ற பெயரில் வெகு விமரிசையாகக் கொண்டாடுகின்றனர்.

சித்திரை முதல் நாளில் குமரி, கேரள கோயில்களில் கனி காணுதல் நிகழ்வு வெகு சிறப்பாக நடைபெறும். வழக்கமாக பக்தர்கள்தான் கோயில் உண்டியலில் காணிக்கை செலுத்துவார்கள். ஆனால், சித்திரை முதல்நாளில் கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு கோயிலில் இருந்தே பிரசாதத்தோடு காசும் கொடுக்கும் கலாச்சாரம் இங்கு உண்டு. கரோனா அச்சத்தால் இந்த ஆண்டு இங்குள்ள ஆலயங்களில் கனி காணுதல் நிகழ்வு ரத்து செய்யப்பட்டாலும், வழக்கம்போல் இல்லங்களில் காலையில் கனி முகத்தில் விழித்து குமரி மற்றும் கேரளவாசிகள் இந்த நாளைத் தொடங்கினர்.

சித்திரை முதல் நாளில் கண் விழித்ததும், பார்ப்பதற்காக சாலையோரக் கொன்றை மரங்களில் இருந்து கொன்றை மலர் சேகரிப்பும் தீவிரப்படும். சித்திரையை வரவேற்கும் விதமாக கொன்றை மலர்களும் இந்த சீசனில்தான் பூக்கும். அரும்புகள் மத்தியில் சேமிப்புப் பழக்கத்துக்கான விதையும் இன்றைய நாளில் தூவப்படுகிறது. ‘விஷூ’ என்பதற்கு சரிசமமான என்று பொருள் சொல்கிறார்கள். இன்றைய நாளில் பகலும், இரவும் ஒரே அளவைக் கொண்டிருக்குமாம். சரக்கொன்றை, சிறுகொன்றை, செங்கொன்றை, மஞ்சள் கொன்றை, மயில் கொன்றை என இங்கே விதவிதமாய் கொன்றை மலர்கள் பூத்துக் குலுங்க… உறவுசார் சொந்தங்கள், சித்திரை முதல் நாளில் குழந்தைகளுக்குப் பணம் கொடுத்து மகிழ்வார்கள். இதற்கு ‘கை நீட்டம்’ என்றுபெயர்.

விஷூக்கு முந்தைய நாள் இரவே குடும்பத் தலைவிகள் பரபரப்பாகி விடுகின்றனர். பூஜை அறையில் பெரிய தாம்பூலத்தில் வீட்டில் உள்ள விலையுயர்ந்த ஆபரணங்கள், வெற்றிலை, பாக்கு, பழம், கொன்றை மலர்கள் இத்தனையும் வைத்து, அதனை ஒரு கண்ணாடியின் முன்பாக வைப்பார்கள். பக்கத்திலேயே எண்ணெய் நிரப்பி, திரியிட்ட விளக்கும் தயார் நிலையில் இருக்கும்.

அதிகாலையில் குடும்பத்தலைவி எழுந்து, வாசலில் கோலமிட்டு, விளக்கேற்றி, கனி கண்டு தரிசித்து அங்குள்ள கண்ணாடியில் தன் முகத்தையே பார்ப்பார். இதேபோல் அடுத்தடுத்து துயில் எழும் இதர குடும்ப உறுப்பினர்களும் கனி கண்டு, கண்ணாடியில் தன்முகமே கண்டு சித்திரையின் முதல் நாளை வரவேற்பர். தமிழ் வருடப் பிறப்பின் முதல் நாளில் நல்லனவற்றையே பார்க்கவும், நடக்கவும், நினைக்கவும் வேண்டும் என்பதாலேயே கனி முகத்தில் விழிக்கும் மரபு வந்தது.

கோயில்களிலும் சித்திரை முதல் நாள் கனி காணல் நிகழ்வு வெகுவிமரிசையாக நடைபெறும். காய்கறிச் சந்தைகளுக்கு வந்துசேர வேண்டிய காய்கறி லோடுகள், ஆலயங்களை நோக்கித் திருப்பிவிட்டதைப் போல காய்கறிகள் ஆலயங்களில் குவிந்திருக்கும். பக்தர்களுக்கு காய்கறியோடு சேர்த்து காசும்கூட கொடுக்கப்படும். இதன் பெயர் தான் கை நீட்டம். பெரியவர்கள், சிறியவர்களுக்கு இன்றைய நாளில் பணம் கொடுத்து மகிழ்வர். குழந்தைகளும், பெரியவர்களிடம் காலில் விழுந்து ஆசி பெறுவர்.

சித்திரையை இத்தனை மகிழ்வோடு வரவேற்று விட்டு இம்மாதத்தில் சுபகாரியங்களை மட்டும் நடத்தாமல் விட்டுவிடுவார்களா குமரிமக்கள். அதற்கெனவே உள்ளது சித்திரை பத்து. இந்நாளில் எந்தச் செயலைச் செய்தாலும் அது துலங்கும் என்பதும் நம்பிக்கை. விவசாயப் பயன்பாட்டுக்குக் கிணறு வெட்டுவதில் தொடங்கி, திருமணம் பேசி முடிப்பது, வீட்டுக் கட்டுமானப் பணியைத் தொடங்குவது என சகல பணிகளுக்கும் சித்திரை பத்து உகந்த நாள். அதேபோல், விதைப்புக்கும், இந்நாளே பொன்னாளாய் அடையாளப்படுத்தப்படுகிறது.

‘சித்திரையில் உழவுபோட்ட நிலத்தில் பொன்னு விளையும்’ என்ற சொலவடை கூட உண்டு. சித்திரை பத்தை, நாஞ்சில் நாட்டில் ‘பத்தாம் உதயம்’ என்பார்கள். இந்த நாளில் எந்த சுபகாரியத்தையும் தொடங்கலாம். நட்சத்திரம், நல்ல நேரம் என எந்த சம்பிரதாயங்களுக்குள்ளும் சிக்காத நாள் இது. இந்நாளில் தென்னை மரங்கள் நடுவது இங்கு தொன்றுதொட்டு பழக்கத்தில் உள்ளது. அம்மன் கோயில்களிலும் சித்திரை மாதம் வரும் பௌர்ணமி மிகவும் விசேஷம்.

சித்திரை முதல் நாள் காலை சிற்றுண்டிக்கு அவல்தான் பிரதானம். நெல்லின் உபபொருளுக்கு மரியாதை கொடுக்க முன்னோர்கள் செய்து வைத்த நடைமுறை, இன்றைய ஃபாஸ்ட் ஃபுட் கலாச்சாரத்திலும் பாரம்பரியத்தை பறைசாற்றிக் கொண்டிருக்கிறது.

சித்திரை பத்தில் விதைப்பு செய்வதில் மிகப்பெரிய அறிவியலும் உள்ளது. சித்திரை பத்து விதைப்புக்கு நாஞ்சில் நாட்டில் ‘நாள் வித்து பிடித்தல்’ என்று பெயர். அதாவது வயலுக்குச் சென்று, கைப்பிடி அளவு விதையேனும் ஒருமூலையில் தூவுவது என்பது இதன் பொருள். முன்கூட்டியே இப்படி செய்வதும்கூட மிகப்பெரிய சித்தாந்தத்தை உள்ளடக்கியது. கையில் இருக்கும் விதை ஓர் ஆண்டாக விவசாயியிடம் இருப்பு இருந்தது. அந்தக் காலத்தில் எல்லாம் வீட்டுக்கு, வீடு விதை நெல்லைச் சேமித்து வைத்திருப்பார்கள். இதற்கு விதை குலுக்கையைப் பயன்படுத்துவார்கள். விதை நெல்லின் முளைப்புத்திறனை அறிந்து, எச்சரிக்கையாய் செயல்படவே நாள் வித்து பிடித்தல்.

சித்திரை மாதம் சித்திரை நட்சத்திரம் கூடிவரும் நாள் சித்திரை பெளர்ணமி. 27 நட்சத்திரங்களில், 14-வது நட்சத்திரமாக இருக்கும் சித்திரை நட்சத்திரத்திற்கு அருகில் சந்திரன் அன்று இருக்கும். அன்றைய தினம் குமரி கடற்கரையில் சூரிய அஸ்தமனத்தையும், சந்திர உதயத்தையும் ஒரே நேரத்தில் பார்க்கலாம். குமரி மாவட்டத்தில் சித்திரையானது கொண்டாட்டங்களின் தருணமாகவும் உள்ளது. அதில் முக்கியமானது கொடை விழா கழிப்பது. வயல்வேலைகள் முடிந்து, விவசாயிகள் ஓய்வாக இருக்கும் இந்த மாதமே கிராம தெய்வங்களுக்கு கொடை கழித்தும், ஊட்டு கழித்தும் மகிழ்கின்றனர்.

இப்படியான சித்திரையின் பெரும் கொண்டாட்டங்களை இந்த ஆண்டு ஊரடங்கும், கரோனாவும் களவாடியிருக்கிறது. ஆனாலும், கனி முகத்தின் விழிப்போடும், கை நீட்டத்தின் களிப்போடும் மலர்ந்திருக்கிறது இந்தச் சித்திரை.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x