

கரோனாவால் ஊரடங்கு உத்தரவு நீடிக்கும் நிலையில் வரும் 24-ம் தேதி ரமலான் நோன்பு தொடங்குவதால் நோன்பு நாட்களில் பள்ளி வாசலில் கஞ்சி வைத்து அதனை வீடு வீடாக விநியோகிக்க அரசு அனுமதி வழங்க வேண்டும் என குமரி மாவட்ட முஸ்லிம் ஜமாஅத் கூட்டமைப்பு கோரிக்கை வைத்துள்ளது.
இதுகுறித்து முஸ்லிம் ஜமாஅத் கூட்டமைப்பு குமரி மாவட்ட பொதுச்செயலாளர் இமாம் பாதுஷா செய்தியாளர்களிடம் கூறியதாவது:
கரோனா வைரஸ் தடை உத்தரவு காரணமாக ஏழை மற்றும் நடுத்தர குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதால் ஒவ்வொரு குடும்பத்திற்கும் மாதம் ஒன்றுக்கு 7000 ரூபாய் வீதம் வழங்க வேண்டும். இலவசமாக கேஸ் சிலிண்டர் வழங்க வேண்டும்.
மேலும் வரும் 24ம் தேதி ரமலான் நோன்பு துவங்க உள்ளதால் பள்ளி வாசலிலே நோன்பு கஞ்சியை வைத்து அதனை வாகனங்கள் மூலம் ஒவ்வொரு வீடுகளுக்கும் வழங்க அந்த அந்த ஜமாஅத் அமைப்புகளுக்கு அனுமதி வழங்க வேண்டும்.
அதேபோல நோன்பு நாட்களில் தமிழகம் முழுவதும் தராவீஹ் என்னும் இரவு சிறப்பு தொழுகைக்கு ஐந்து பேர் தொழ அனுமதிக்க வேண்டும்.
அந்த வாங்கு ஒலி கேட்டு அப்பகுதியில் வீடுகளில் உள்ளவர்கள் வீடுகளில் இருந்தே தொழ வேண்டும். இதற்கு அரசு தமிழகம் முழுவதும் அனுமதிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
குமரி மாவட்ட ஜமாஅத் கூட்டமைப்பு பொதுச்செயலாளர் இமாம் பாதுஷா செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.