

கரோனா அறிகுறி இருப்பவர்கள் அரசு மருத்துவமனைகள், நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களில் சளி, ரத்த மாதிரி சேகரிக்கப்படுகிறது என்று தென்காசி மாவட்ட ஆட்சியர் கூறியுள்ளார்.
இதுகுறித்து தென்காசி மாவட்ட ஆட்சியர் அருண் சுந்தர் தயாளன் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
கரோனா வைரஸ் பரவுதலைக் கட்டுப்படுத்த தென்காசி மாவட்டத்தில் பல்வேறு தடுப்புப் பணிகளை மாவட்ட நிர்வாகம் செயல்படுத்தி வருகிறது.
நோய்த்தொற்று மூன்றாம்கட்டத்துக்கு செல்லாமல் கட்டுப்படுத்த அரசு உத்தரவின்படி கரோனா பரிசோதனைக்கு அரசு மருத்துவமனைகள், நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களில் தற்போது சளி, ரத்த மாதிரி சேகரிக்கப்பட்டு வருகிறது.
இதன் காரணமாக, நோய் பாதிப்பு உள்ளவர்களை சமுதாயத்தில் இருந்து எளிதில் கண்டறிந்து, அவர்களை தனிமைப்படுத்தி தகுந்த சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
கரோனா நோயை ஆரம்ப நிலையில் கண்டறிந்து தனிமைப்படுத்துவதால், சமுதாயத்தில் ஒருவரிடம் இருந்து மற்றொருவருக்கு பரவுவது தடுக்கப்படுகிறது.
தற்போது நோயின் அறிகுறிகள் உள்ளவர்கள் மற்றும் நோயால் பாதிக்கப்பட்ட நபர்களுடன் தொடர்புடைய அனைவருக்கம் இப்பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது.
மேலும, தனிமைப்படுத்தப்பட்ட பகுதியில் உள்ள 50 வயதுக்கு மேற்பட்ட நோய் அறிகுறி உள்ளவர்களுக்கும், இன்புளுயன்சா அறிகுறிகளான காய்ச்சல், இருமல், சளி, தொண்டை வலி உள்ளவர்களுக்கும் இப்பரிசோதனை இலவசமாக அரசு சார்பில் செய்யப்பட்டு வருகிறது.
கரோனா நோயின் அறிகுறிகள் இல்லாமல்கூட நோய்த்தொற்று இருக்க வாய்ப்பு உள்ளது. மேலும், அவ்வாறு நோய்த்தொற்று உள்ளவர்கள் பிறருக்கு நோயை பரப்ப வாய்ப்பு உள்ளது.
கரோனா பரிசோதனை செய்ய வரும் நபர்கள் அனைவருக்குமே நோய்த்தொற்று இருப்பதில்லை. பரிசோதனை செய்ய வரும் நபர்களை களங்கள் கற்பிப்பது தவறான செயல்.
பரவலாக நோய் அறிகுறிகள் உடைய அல்லது நோய்த்தொற்று இருப்பவர்களுடன் தொடர்புடைய அனைவருக்கும் பரிசோதனை செய்வதே மூன்றாம்கட்ட நோய் பரவலைத் தடுக்க ஒரே வழி. எனவே, பொதுமக்கள் இந்த பரிசோதனையை பயன்படுத்திக்கொள்ள வேண்டும். கூடுதல் விவரங்களுக்கு மாவட்ட கட்டுப்பாட்டு அறையை 04633 290548 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்புகொள்ளவாம்.
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.