பாகுபாடு இல்லாமல் எல்லோரையும் பாதுகாக்க வேண்டிய கடமை எனக்கு உள்ளது: முன்னாள் அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் விளக்க அறிக்கை

பாகுபாடு இல்லாமல் எல்லோரையும் பாதுகாக்க வேண்டிய கடமை எனக்கு உள்ளது: முன்னாள் அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் விளக்க அறிக்கை
Updated on
2 min read

மக்களை இந்து, முஸ்லிம், கிறிஸ்தவர் என்ற பாகுபாடு இல்லாமல் எல்லோரையும் பாதுகாக்க வேண்டிய கடமை தனக்கு உள்ளதாக முன்னாள் அமைச்சரும் திமுக தெற்கு மாவட்டச் செயலருமான சாத்தூர் ராமச்சந்திரன் எம்எல்ஏ தெரிவித்துள்ளார்.

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் நடந்த நிகழ்ச்சியில் இஸ்லாமியர்கள் சிலரிடம் முக கவசம் அணிய வேண்டியதன் அவசியம் குறித்து சாத்தூர் ராமச்சந்திரன் எம்எல்ஏ கடிந்து பேசியதாக சமூக வலைதளங்களில் ஆடியோ வெளியானது.

இது தொடர்பாக சாத்தூர் ராமச்சந்திரன் எம்எல்ஏ வெளியிட்டுள்ள அறிக்கையில்,

"நான் அருப்புக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் என்ற முறையிலும், விருதுநகர் தெற்கு மாவட்ட தி.மு.க செயலாளர் என்ற முறையிலும் மக்களை இந்து, முஸ்லீம், கிறித்துவர் என்ற பாகுபாடு இல்லாமல் எல்லோரையும் பாதுகாக்க வேண்டிய கடமை எனக்கு உள்ளது.

அதுவும் இன்றுள்ள கரோனா நோய் தாக்கம் அதிகமாக உள்ள நிலையில், பொதுமக்களுக்கான பல்வேறு நிவாரணப் பொருட்களை அன்று நான் வழங்கும்போது என்னுடன் எல்லா மதத்தினரும் கலந்து கொண்டனர்.

அதே நிகழ்ச்சியில் என்னருகில் எங்கள் கட்சி மாவட்ட பொருளாளர் சாகுல் ஹமீது முகக்கவசம் அணிந்து எனது அடுத்த இருக்கையில் அமர்ந்திருந்தார்.

நான் எனது வாகனத்தில் இருந்து இறங்கி வரும்போது வெளியில் இருந்த பொதுமக்களையும், கட்சி தோழர்களையும் முகக் கவசம் அணியாமல் இருந்த அனைவரையுமே கண்டித்ததோடு மட்டுமல்லாமல் என் காரில் கொண்டு வந்திருந்த முகக்கவசங்களை அனைவரிடமும் கொடுத்து அணியச் செய்தேன்.

நான், யாராக இருந்தாலும் என் குடும்ப உறுப்பினராக இருந்தாலும்கூட பொது வெளியில் முகக்கவசம் அணியாமல் இருந்தால் நிச்சயம் கண்டித்திருப்பேன். எங்கள் கட்சி தலைவர் தினமும் எங்களிடம் தொலைபேசியில் பேசும்போது, நீங்களும் பாதுகாப்பாக இருக்க வேண்டும், பொதுமக்களுக்கும் தேவையானதை செய்து தரவேண்டும் என அறிவுறுத்தியுள்ளார்.

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள எல்லா ஊர்களிலும் மொத்த காய்கறி கடைகள், பலசரக்கு கடைகள், இறைச்சி கடைகள் 3,4 இடங்களில் பொதுமக்கள் வசதிக்காகவும், சமூக இடைவெளி கடைபிடிக்க ஏதுவாகவும் பகுதி வாரியாக பிரித்து வைக்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் என் சட்டமன்ற தொகுதியான அருப்புக்கோட்டையிலும் 3 பகுதிகளாக பிரித்து வைக்கப்பட்டுள்ளன.

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள நாங்கள் 4 தி.மு.க சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர்கள் அரசு அதிகாரிகளோடு இணைந்து, அரசு சொல்லும் கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கைகளுக்கு உதவியாக பொதுமக்களுக்கு சேவை செய்வது மட்டுமில்லாமல் எங்களால் ஆன உதவிகளை எங்கள் சொந்த செலவில் தொடர்ந்து செய்து வருகிறோம்.

என்னுடைய 50 ஆண்டுகால பொது வாழ்க்கையில் சமுதாயத்தில் எந்த ஒரு பிரிவினரையும் வேறுபடுத்தி பாகுபாடு ஏதும் பார்க்காமல் அனைவரோடும் நல்லிணக்கத்தோடு பழகி பொது சேவையில் ஈடுபட்டு வருகிறேன். இதனை அனைவரும் அறிவார்கள்" என தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in