

புலிகள் பாதுகாப்பை முன்னிட்டு கொண்டு வரப்பட்ட ‘கோல்டன் ஹேண்ட்ஷேக்’ என்ற மறுகுடியமர்வுத் திட்டத்தின் கீழ், இந்தாண்டு முதுமலையிலிருந்து 235 குடும்பங்கள் இடமாற்றம் செய்யப்படும் என முதுமலை புலிகள் காப்பக கள இயக்குநர் சீனிவாசரெட்டி தெரிவித்தார்.
சர்வதேச அளவில் பிரசித்தி பெற்றது முதுமலை சரணாலயம். 1972-ம் ஆண்டு உருவாக்கப்பட்ட இந்த சரணாலயத்தில், ஆசியாவின் மிகப்பெரிய வளர்ப்பு யானைகள் முகாம் உள்ளது. இங்கு 27 யானைகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. மொத்தம் 321 சதுர கி.மீ. பரப்பளவு கொண்ட இந்த சரணாலயம், கடந்த 2007-ம் ஆண்டு புலிகள் காப்பகமாக அறிவிக்கப்பட்டதால், பாதுகாப்பு பகுதியாக மாறியது.
புலிகள் பாதுகாப்பு கருதி, வனத்தில் உள்ள பழங்குடியினரை இடமாற்றும் திட்டமும் அறிவிக்கப்பட்டது. ‘கோல்டன் ஹேண்ட்ஷேக்’ என பெயிரிடப்பட்ட மறுகுடியமர்வுத் திட்டத்தின் கீழ் வனத்திலிருந்து இடமாற்றம் செய்யப்படும் ஒரு குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் நிவாரணம் அறிவிக்கப்பட்டது.
807 குடும்பங்கள்
முதுமலை புலிகள் காப்பகத்துக்கு உட்பட்டு பென்னை, நெள்ளிக்கரை, நாகம்பள்ளி, மண்டக்கரை, புலியம்பாளையம், முதுகுழி, குடித்தகன் ஆகிய 7 பழங்குடியினர் கிராமங்கள் உள்ளன. இக்கிராமங்களில் 807 குடும்பங்கள் வசித்து வருகின்றன.
மறுகுடியமர்வுத் திட்டத்தின் கீழ் இந்த கிராமத்தினரை மறுகுடியமர்த்த கடந்த 8 ஆண்டுகளாக புலிகள் காப்பக நிர்வாகம் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.
இந்நிலையில், மறுகுடிய மர்த்துவதற்காக பந்தலூர் அருகே சேரங்கோடு ஊராட்சிக்குட்பட்ட அய்யன்கொல்லி, சன்னக்கொல்லி பகுதியில் 284 ஹெக்டேர் இடம் ஒதுக்கப்பட்டு ஆயத்தப் பணி நடைபெற்று வருகிறது.
இது குறித்து முதுமலை புலிகள் காப்பக கள இயக்குநர் சீனிவாச ரெட்டி கூறியதாவது: முதுமலை புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட 7 பழங்குடியினர் கிராமங்களில் உள்ள 807 குடும்பங்களை, மூன்று கட்டமாக இடமாற்றம் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.
முதற்கட்டமாக பென்னை மற்றும் நெள்ளிக்கரையில் வசிக்கும் 235 குடும்பங்கள் இந்தாண்டுக்குள் இடமாற்றம் செய்யப்படும். இதற்காக தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையம் ரூ.23.5 கோடி ஒதுக்கியுள்ளது. இரண்டாவது கட்டமாக நாகம்பள்ளி, மண்டக்கரை மற்றும் புலியம்பாளையம் கிராமங்களைச் சேர்ந்தவர்கள் இடமாற்றம் செய்யப்படுவார்கள். இதற்காக சேரங்கோடு ஊராட்சிக்குட்பட்ட அய்யன்கொல்லி, சன்னக்கொல்லி பகுதியில் 284 ஹெக்டேர் இடம் ஒதுக்கப்பட்டு, அப்பகுதியிலிருந்த மரங்கள் வெட்டப்பட்டு, நிலம் சமன்படுத்தப்பட்டுள்ளது.
முதுகுழி மற்றும் குடித்தகன் கிராமங்களில் உள்ளவர்கள் வருவாய்த்துறைக்கு சொந்தமான நிலத்தில் குடியிருந்து வருகின்றனர். எனவே, அவர்களை இடமாற்றம் செய்யும் நடைமுறைகளை மாநில அரசு சரி செய்ய வேண்டும்.
இந்த 7 கிராம மக்கள் வெளியேற்றப்பட்டால், முதுமலை முழுவதும் வனப்பகுதியாக அரசிதழில் அறிவிக்கப்படும். இதனால் பாதுகாப்பு அதிகரிப்பதோடு, கிராமவாசிகள் போர்வையில் சமூக விரோதிகள் வனத்துக்குள் நுழைவது தடுக்கப்படும், வனத்தை பாதுகாப்பது எளிதாகும் என்றார்.