

சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் அருகே கருங்குளத்தைச் சேர்ந்த விவசாயி முருகேன் 300 ஏக்கரில் அல்போன்ஸா ரக மாமரங்களை நடவு செய்துள்ளார்.
நீர் வளம் இல்லாத இப்பகுதியில் கிடைக்கும் மழைநீரை சேமித்து சொட்டு நீர் பாசனம் மூலம் தண்ணீர் பாய்ச்சி வருகிறார். கடந்த 10 ஆண்டுகளாக பலன் கிடைத்து வருகிறது.
நீர் வளம் இல்லாத அல்போன்ஸா ரக மாம்பழங்களை நடவு செய்து சாதனை படைத்த விவசாயி முருகேசன் தற்போது கரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ளார்.
இது குறித்து முருகேசன் கூறியதாவது:
ஆண்டுதோறும் மார்ச் முதல் ஜூலை வரை மாம்பழங்களைப் பறித்து பேக்கிங் செய்து புதுடெல்லி, மும்பை, கொல்ல்கத்தா, சென்னை என இந்தியா முழுவதும் அனுப்பி வருகிறேன். இதுதவிர சிங்கப்பூர், மலேசியா உள்ளிட்ட பல நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்கிறார்.
ஆண்டு முழுவதும் 300 டன் வரை மாம்பழங்கள் கிடைத்து வருகின்றன. இதனால் ஆண்டுக்கு பல லட்சம் ரூபாய் வரை லாபம் கிடைத்தது. தற்போது மாம்பழம் பறிக்கும் சீசனில் கரோனா வைரஸ் தொற்றால் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
வேலையாட்கள் கிடைக்காததாலும், ஏற்றுமதி செய்ய முடியாததாலும் மாம்பழங்கள் பறிக்காமல் மரத்திலேயே விடப்பட்டுள்ளன. அவை மரத்திலேயே அழுகி வீணாகி வருவதால் பல லட்சம் ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.