

தமிழகத்தில் விவசாய பணிகளுக்கும், வெளிமாநிலத்தில் இருந்து மளிகை உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் போக்குவரத்துக்கும் எவ்வித தடையும் இல்லை என்று உணவுத்துறை செயலர் தயானந்த் கட்டாரியா, வேளாண்துறை செயலர் ககன்தீப்சிங் பேடி ஆகியோர் தெரிவித்தனர்.
தமிழகத்தில் கரோனா தடுப்புநடவடிக்கையாக அமல்படுத்தப்பட்ட ஊரடங்கால் அத்தியாவசிய பொருட்கள் தட்டுப்பாடு ஏற்பட்டு விலை உயர்வதாகவும், வேளாண் விளைபொருட்களை விற்பனை செய்ய முடியாமல் விவசாயிகள் தவிப்பதாகவும் செய்திகள் வெளியாகி வருகின்றன.
இது தெடர்பாக நேற்று உணவுத்துறை செயலர் தயானந்த் கட்டாரியா, வேளாண் துறை செயலர் ககன்தீப்சிங் பேடி ஆகியோர் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது தயானந்த் கட்டாரியா கூறியதாவது:
கரோனா நிவாரணமாக முதல்வரால் அறிவிக்கப்பட்ட ரூ.1000 தமிழகத்தில் உள்ள 2 கோடியே 1 லட்சம் அரிசி குடும்ப அட்டைதாரர்களில் 97.54 சதவீதம் வழங்கப்பட்டுள்ளது. தமிழகத்தில், 746 நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில், ரூ.240 கோடியே 35 லட்சம் மதிப்புள்ள 1 லட்சத்து 26 ஆயிரத்து 972 மெட்ரிக் டன் நெல், 17 ஆயிரத்து 620 விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.
பருப்பு, மசாலா பொருட்கள், எண்ணெய், அரிசி, பிஸ்கட், சானிடைசர்கள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் பொதுமக்களுக்கு கிடைப்பது கண்காணிக்கப்பட்டு வருகிறது. அதிகவிலை, பதுக்கல்உள்ளிட்டவை மாவட்ட ஆட்சியர்களால் கண்காணிக்கப்படுகின்றன. கூட்டுறவுத் துறை மூலம் 19 அத்தியாவசிய பொருட்கள் சேர்ந்ததொகுப்பு நகரும் கடைகள், அங்காடிகள் மூலம் ஓரிரு தினங்களில் விற்பனை தொடங்கப்படும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
தொடர்ந்து வேளாண் துறை செயலர் ககன்தீப்சிங் பேடி கூறியதாவது:
விவசாயம் தொடர்பான பணிகளுக்கு எந்த தடையும் இல்லை. அறுவடை இயந்திரங்கள் போக்குவரத்து, இயந்திர பழுது பார்க்கும் மையங்களின் பணிகளும்நடைபெற அனுமதிக்கப்பட்டுள்ளன. அறுவடை இயந்திர போக்குவரத்துக்கு தடை செய்யப்பட்டால் எங்களிடம் தெரிவிக்கலாம். ஒன்றரை மாதத்துக்கான உரம் இருப்பு உள்ளது. தனியார் உரக்கடைகள் திறக்க தடையில்லை.
விவசாயிகள் தங்கள் விவசாய பணிகளை எவ்வித தடையும் இன்றி மேற்கொள்ளலாம். தோட்டக்கலை விவசாயிகள் விளைபொருட்கள் தமிழகத்தில் 5ஆயிரத்து 421 நகரும் கடைகள் மூலம் விற்பனைசெய்யப்படுகின்றன. தோட்டக்கலைத் துறை, சென்னை மாநகராட்சி, சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் மற்றும் நகராட்சி, பேரூராட்சி நிர்வாகங்கள் விவசாயிகளிடம் இருந்து நேரடியாக பொருட்களை கொள்முதல் செய்து குறைந்த விலையில் பொதுமக்களுக்கு விற்பனை செய்து வருகின்றன. 20 குடும்பங்கள் அடங்கிய குடியிருப்புகளுக்கு இணையதளம் வழியாக பதிவு செய்தால் வீடுகளுக்கே சென்று காய்கறி வழங்கப்படுகிறது.
வாழை, பலா மற்றும் தர்பூசணி போன்ற பழவகைகளை சாகுபடி செய்வோர் உடனடியாக விற்பனை செய்ய முடியாவிட்டால் குளிர்பதன கிடங்குகளில் ஏப்ரல் 30-ம் தேதி வரை எவ்வித கட்டணமும் இன்றி வைத்து, அதன்பின் விற்பனை செய்யலாம். இதுதவிர, மொத்த விற்பனையாளர்களை ஒழுங்கு முறை விற்பனைகளுக்கே வரவழைத்து, பழவகைகளை வாங்குவதற்கு ஏற்பாடு செய்துள்ளோம். பூக்கள் அழிக்கப்படுவதை தடுக்க, நறுமண திரவியங்கள் தயாரிக்கும் நிறுவனங்களுக்கு அளிக்க ஏற்பாடு செய்துள்ளோம்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.