

சென்னையில் கரோனா வைரஸ் தொற்றுள்ள ராயபுரம் உள்ளிட்ட பகுதிகளில் மாநகராட்சி அதிகாரிகள் சிறப்பு கவனம் செலுத்தி வருவதாக அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார்.
சென்னை மாநகராட்சி, 14 மாநகராட்சிகள், 121 நகராட்சிகள், 528 பேரூராட்சிகள் மற்றும் ஊரக உள்ளாட்சி அமைப்புகள் மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் கரோனா வைரஸ் நோய்த் தடுப்பு பணிகள் மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்த ஆய்வுக் கூட்டம் சென்னையில் உள்ள ரிப்பன் மாளிகையில் நேற்று நடைபெற்றது. அதில் நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பங்கேற்று ஆய்வு மேற்கொண்டார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
தமிழகத்தில் உள்ள அனைத்து உள்ளாட்சி அமைப்புகளிலும் கரோனா வைரஸ் பரவல் தடுப்பு பணிகள் சிறப்பாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. சென்னையில் உள்ள 19 லட்சம் வீடுகளில் சுமார் 90 சதவீதத்துக்கு மேல் அனைத்து வீடுகளிலும் சோதனை செய்யப்பட்டு, காய்ச்சல் மற்றும் இருமல் அறிகுறியுடன் உள்ள நபர்கள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். சென்னையில் கரோனா தொற்று உள்ள பகுதிகளில் பாதுகாப்பு வளையம் அமைத்து அப்பகுதி முடக்கப்பட்டுள்ளது. கரோனா தொற்று அதிகம் உள்ள ராயபுரம் உள்ளிட்ட பகுதிகளில் மாநகராட்சி அதிகாரிகள் சிறப்பு கவனம் செலுத்தி வருகின்றனர்.
சென்னை மாநகராட்சியில் 3,955 தள்ளு வண்டிகளில் காய்கறிகளும், 937 சிறிய மோட்டார் வாகனங்கள் மூலமாக மளிகைப் பொருட்களும் நியாயமான விலையில் வீடு வீடாக சென்று விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மேலும் 14 மாநகராட்சிகள் மற்றும் 121 நகராட்சிகளில் 1,416 நடமாடும் காய்கறி அங்காடிகளும், பேரூராட்சிகளில் 1,189 நடமாடும் காய்கறி அங்காடிகளும் இயக்கப்பட்டு வருகின்றன.
ஊரடங்கு காலம் ஆரம்பித்த நாள் முதல் இன்றுவரை மாநிலம் முழுவதும் உள்ள அம்மா உணவகங்களில் மொத்தம் ரூ.1 கோடியே 2 லட்சம் இட்லிகளும், 39 லட்சத்து 13 ஆயிரம் கலவை சாதங்களும், 31 லட்சத்து 45 ஆயிரம் சப்பாத்திகளும் வழங்கப்பட்டுள்ளன. இதுவரை மொத்தம் 64 லட்சம் பேர் பயனடைந்துள்ளனர் என்று கூறினார்.