

டெல்லி மாநாட்டில் கலந்து கொண்டவர்களைப் போல், அதே காலகட்டத்தில் நடைபெற்ற மற்ற கூட்டங்களில் பங்கேற்றவர்களுக்கு கரோனா பரிசோதனை செய்யப்படாதது ஏன் என்று காயிதே மில்லத் கல்வி மற்றும் சமூக அறக்கட்டளையின் பொதுச்செயலாளரும், காயிதே மில்லத் கல்லூரியின் தாளாளருமான எம்.ஜி.தாவூத் மியாகான் கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுதொடர்பாக நேற்று வெளியிட்ட அறிக்கையில் அவர் கூறிஇருப்பதாவது:
சமீபத்தில் டெல்லியில் நடைபெற்ற ஒரு சமய மாநாட்டில் பங்கேற்ற சுமார் 4,500 நபர்களால் நாட்டின் பல பகுதிகளில் கரோனா தொற்று ஏற்பட்டிருப்பதும், போக்குவரத்துத் தடையால் அங்கு தங்கிவிட்ட 1,000-க்கும் அதிகமானவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு மருத்துவப் பரிசோதனைக்கு உள்ளாக்கப்பட்டதும் அனைத்து ஊடகங்களிலும் தலைப்புச் செய்திகளாக பல நாட்கள் வந்தன.
வரவேற்கத்தக்கது
மாநாட்டில் கலந்து கொண்டு ஊர் திரும்பியவர்கள் மட்டுமல்லாது அவர்களோடு தொடர்பு கொண்டவர்கள் பல ஆயிரம் பேர்கள் தனிமைப்படுத்தப்பட்டு பரிசோதனை செய்யப்பட்டனர். இது வரவேற்கத்தக்கது என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. இவர்களைப் பரிசோதிக்க அரசுகள் மேற்கொண்ட நடவடிக்கைகளில் விமர்சனங்கள், ஆதங்கங்கள் இருந்த போதிலும் மக்கள் நலன் கருதி இதை ஏற்றுக் கொள்வது அவசியமாகும்.
ஆனால், டெல்லி மாநாடு நடைபெற்ற அதே காலகட்டத்துக்கு சிறிது முன்பும், பிறகும் மக்கள் கூட்டமாக பங்கேற்ற பல்வேறு நிகழ்வுகள் நடைபெற்றன. ஆனால், தப்லீக் மாநாட்டில் கலந்து கொண்டவர்களை பரிசோதித்ததைப்போல் மற்ற கூட்டங்களில் பங்கேற்றவர்கள் பரிசோதிக்கப்படவில்லை. இதுதான் நிதர்சனமான உண்மை.
முன்னேறிய நாடுகளில் 10 லட்சம் பேரில் 13,000 பேருக்குகரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. ஆனால், நம் நாட்டில்10 லட்சம் பேரில் வெறும் 102 பேருக்கு மட்டுமே பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதுவரை பரிசோதனை செய்யப்பட்டவர்களில் மாநாட்டில் கலந்து கொள்ளாதவர்களின் சதவீதம் எவ்வளவு என்பதை யாரும் வெளியிடவில்லை.
காலத்தின் கட்டாயம்
வளைகுடா நாடுகள், சிங்கப்பூர், மலேசியா நாடுகளில் பணிபுரிந்து இந்தியா திரும்பியவர்களும் அவர்களோடு தொடர்பில் இருந்தவர்களும் பரிசோதிக்கப்பட்டு பலருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. ஆனால் அமெரிக்கா, கனடா, இங்கிலாந்து, ஜெர்மனி, பிரான்ஸ் போன்ற மேலை நாடுகளிலிருந்து திரும்பிய உயர் பணி, பதவியில் இருப்பவர்கள், தொழில்ரீதியாக பயணம் மேற்கொண்டவர்கள், அவர்களோடு தொடர்பு உடையவர்கள் பெரிய அளவில் பரிசோதனைக்கு உள்ளாக்கப்படவில்லை. அவர்களையும் பரிசோதனை செய்வது காலத்தின் கட்டாயமாகும்.
மக்கள் ஒத்துழைப்பு அவசியம்
இந்த விவரங்களின் அடிப்படையிலேயே தமிழகம் கரோனா தொற்றில் 3-ம் நிலையை எட்டலாம் என்று முதல்வர் பழனிசாமி அறிவித்திருப்பதாகத் தோன்றுகிறது. அரசின் அறிவிப்புகள், செயல்பாடுகள், கட்டுப்பாடுகள் அனைத்துக்கும் மக்கள் முழுமையாக ஒத்துழைக்க வேண்டியது அவசியமாகும்.
இவ்வாறு தாவூத் மியாகான் கூறியுள்ளார்.