Published : 14 Apr 2020 06:34 AM
Last Updated : 14 Apr 2020 06:34 AM

டெல்லியிலிருந்து 444 ஆஸ்திரேலியர்கள் சிறப்பு விமானத்தில் அனுப்பி வைப்பு: இந்தியாவிலேயே தங்கியிருக்க அமெரிக்கர்கள் விருப்பம்

ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த 444 பேர் டெல்லியிலிருந்து சிறப்பு விமானம் மூலம் தாய்நாட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். ஆனால் அமெரிக்கர்கள் இந்தியாவிலேயே தங்கியிருக்க விருப்பம் தெரிவித்துள்ளனர்.

கரோனா வைரஸ் வேகமாக பரவுவதைத் தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இந்நிலையில் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ஏராளமானோர் டெல்லியில் தங்கியிருந்தனர்.

அவர்களை தங்களது நாட்டுக்கு அனுப்பி வைக்க ஏற்பாடு செய்யுமாறு மத்திய வெளியுறவுத் துறையை ஆஸ்திரேலியா கேட்டுக்கொண்டது. அதன்படி அவர்கள் சிறப்பு விமானம் மூலம் அனுப்பி வைக்கப்பட்டனர். அவர்கள் பத்திரமாக ஆஸ்திரேலியா போய்ச் சேர்ந்துள்ளனர்.

அதேநேரம் டெல்லி உள்ளிட்ட பல நகரங்களில் உள்ள அமெரிக்கர்கள் தொடர்ந்து இந்தியாவிலேயே தங்கியிருக்க முடிவு செய்துள்ளனர். தாயகம் திரும்ப விரும்பும் அமெரிக்கர்களுக்கு சிறப்பு விமானம் ஏற்பாடு செய்யப்படும் என்று டெல்லியில் உள்ள அமெரிக்கத் தூதரகம் மூலம் அதிபர் டொனால்டு ட்ரம்ப் அழைப்பு விடுத்திருந்தார்.

ஆனால் பெரும்பாலானோர் இந்தியாவிலேயே தங்கியிருக்க விருப்பம் தெரிவித்ததாக அமெரிக்க தூதரகத்தைச் சேர்ந்த அதிகாரி இயன் பிரவுலி தெரிவித்தார். அவர்மேலும் கூறும்போது, “இந்தியாவில் தங்கியிருக்கும் சுமார் 800 அமெரிக்கர்களுக்கு போன் மூலம் நாடு திரும்ப அழைப்பு விடுத்தோம். இதில் 10 பேர் மட்டுமே அமெரிக்கா திரும்ப இசைந்தனர். இதன்மூலம் பெரும்பாலானவர்கள் அமெரிக்கா திரும்ப விரும்பவில்லை என்பதை அறிந்துகொண்டோம். மேலும் இந்தியாவில் தங்கியிருக்கும் 24 ஆயிரம் அமெரிக்கர்களை தொடர்புகொள்ள முடிவு செய்துள்ளோம்” என்றார்.

கரோனா பரவியபின் இந்தியாவிலிருந்து 20,473 வெளிநாட்டவர்கள் அவர்களது தாய்நாட்டுக்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர் என்று மத்திய வெளியுறவுத் துறை அதிகாரி தாமு ரவி தெரிவித்துள்ளார்.

இதனிடையே இந்தியாவில் தங்கியிருக்கும் பிரிட்டன் நாட்டவர்களுக்காக 12 சிறப்பு விமானங்களை அந்நாடு இயக்கவுள்ளது. இந்தியாவில் 35 ஆயிரம் பிரிட்டன் நாட்டவர் தங்கியுள்ளனர். இவர்களில் சுமார் 20 ஆயிரம் பேர் நாடு திரும்ப முடிவு செய்துள்ளனர் என்று தெரியவந்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x