கரோனாதொற்று: 2 நாட்களில் 3-ம் இடம் எட்டிய திருப்பூர் மாவட்டம் 

பிரதிநிதித்துவப் படம்
பிரதிநிதித்துவப் படம்
Updated on
1 min read

இரண்டே நாட்களில் கரோனா வைரஸ் தொற்றுக்கு ஆளானவர்களின் எண்ணிக்கை அதிகரித்ததால், தமிழகத்தில் 3-ம் இடத்தை திருப்பூர் மாவட்டம் எட்டியுள்ளது.

திருப்பூர் மாவட்டத்தில் இருந்து டெல்லி மாநாடு சென்றவர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தை சேர்ந்த 1 வயது குழந்தை உட்பட கரோனா வைரஸ் தொற்றுக்கு 61 பேர் பாதிக்கப்பட்டிருந்தனர். இந்நிலையில் இன்று மாலை வெளியான பட்டியலில், மேலும் 18 பேருக்கு உறுதி செய்யப்பட்டது. மொத்த எண்ணிக்கை 79 ஆனது.

இதில் ஒருவர் மட்டும் முழுமையாக குணமடைந்துள்ளனர். மற்றவர்கள் கோவை சிங்காநல்லூர் இ.எஸ்.ஐ.மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். தற்போது தமிழகத்தில் கரோனா பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் திருப்பூர் 3-ம் இடத்தை எட்டி உள்ளது. நாளுக்கு நாள் கரோனா வைரஸ் தொற்று திருப்பூர் மாநகர் மற்றும் மாவட்டத்தில் அதிகரித்திருப்பதால், பொதுமக்களிடையே பயம் கலந்த பீதி ஏற்பட்டுள்ளது.

புதிய 18 பேர் யார்?

திருப்பூர் மாவட்ட பொதுசுகாதாரத்துறையினர் கூறியதாவது: திருப்பூர் மாநகரப் பகுதியில் 3 பேர், திருப்பூர் முதலிபாளையம் உள்ளிட்ட ஊரகப் பகுதியில் 7, பல்லடம் 2, தாராபுரம் 1, உடுமலை 2, அவிநாசி 3 ஆகும். 15 பெண்கள், 3 ஆண்கள் என மொத்தம் 18 பேரும் தனிமைப்படுத்தப்பட்டு, கோவை இ.எஸ்.ஐ மருத்துவமனையில் கொண்டு சென்று தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இவர்கள், அனைவரும் டெல்லி சென்று திரும்பியவர்களின் குடும்பத்தை சேர்ந்தவர்களின் மனைவி, குழந்தை மற்றும் பெற்றோர் என அனைவரும் உறவினர்கள் ஆவர். இதில், 18 வயதிற்கு கீழ் 4 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், பாதிக்கப்பட்டவர்களில் அவிநாசி அரசு ஆரம்ப சுகாதார நிலைய செவிலியர் ஒருவர் பாதிக்கப்பட்டுள்ளார்.

அவிநாசி சுற்றுவட்டாரத்தில் சாலைகளுக்கு சீல்:

அவிநாசி- மங்கலம் சாலையைச் சுற்றிலும் 5 கிலோ மீட்டர் தொலைவு கரோனா கட்டுப்பாட்டு மண்டலமாக அறிவிக்கப்பட்டு, அவிநாசி புதிய, பழைய பேருந்து நிலையங்கள், சாலையப்பாளையம், சேவூர்சாலை, மடத்துப்பாளையம், ஆட்டையாம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் சாலை தடுப்புகளால் தடுக்கப்பட்டு சீல் வைக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக பொதுமக்கள் அப்பகுதியை விட்டு வெளியிடங்களுக்கு சென்று வரக் கூடாது என்றும் வெளிப் பகுதியில் வசிக்கும் மக்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ள பகுதிகளுக்குள் செல்லக் கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அத்தியாவசியப் பொருள்கள் வீடுகளுக்கு விநியோகம் ஒருவருக்கு கரோனா தொற்று உறுதி செய்யபட்டதையடுத்து, அவிநாசி புதிய பேருந்து நிலையத்தில் செயல்பட்டு வந்த தினசரி சந்தை, காய்கறி, பால் விற்பனை செய்யும் கடைகளையும் மூடுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அத்தியாவசியத் தேவைகளுக்கான காய்கறி, மளிகைப் பொருள்கள் வண்டிகளில் விற்பனை செய்ய ஏற்பாடு நடைபெற்று வருவதாக பேரூராட்சி நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in