

முல்லைப் பெரியாறு அணை யில் பராமரிப்புப் பணிகள் தொடங்கிவிட்டன என்று கருணா நிதிக்கு முதல்வர் ஜெயலலிதா பதிலளித்துள்ளார்.
இதுகுறித்து வெள்ளிக்கிழமை அவர் வெளியிட்டுள்ள அறிக்கை யில் கூறியிருப்பதாவது:
முல்லைப் பெரியாறு அணை குறித்த உச்ச நீதிமன்றத் தீர்ப்பை விரைந்து நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எனக்கு கருணாநிதி அறிவுரை கூறியுள்ளது நகைப்புக்குரியது. பெரியாறு அணை தொடர்பாக தமிழகம் மற்றும் கேரள நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள வழக்குகளை உச்ச நீதிமன்றம் விசாரித்து உத்தரவு பிறப்பிக்கக் கோரி மாற்றல் மனுக்களை 1998-ம் ஆண்டு தமிழக அரசு தாக்கல் செய்தது. அதற்குப் பின்னர் 3 ஆண்டுகள் திமுக ஆட்சியில் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பதுதான் உண்மை.
2001-ல் ஆட்சிக்கு வந்த நான் எடுத்த முயற்சியின் விளைவாக பெரியாறு குறித்த அனைத்து வழக்குகளையும் உச்ச நீதிமன்றத்துக்கு மாற்ற வேண்டும் என்று 8.4.2002-ல் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. எனது தலைமையிலான தமிழக அரசின் வலுவான வாதங்களின் அடிப்படையில்தான் 27.2.2006-ல் தமிழகத்துக்கு சாதகமாக தீர்ப்பு கிடைத்தது என்பதை கருணாநிதிக்கு நினைவூட்ட விரும்புகிறேன்.
இந்தத் தீர்ப்புக்கு முரணாக கேரள அரசு செயல்பட்டதால், 2006-ம் ஆண்டு மார்ச்சில் எனது அரசு உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது. அந்த வழக்கை விசாரித்து கடந்த 7-ம் தேதி தமிழகத்தின் உரிமையினை நிலைநாட்டக்கூடிய வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பு கிடைத்துள்ளது. இதை நடைமுறைப்படுத்துவதற்கான பணிகள் தற்போது நடந்து வருகின்றன. அணையின் பராமரிப்புப் பணிகளும் தொடங்கியுள்ளன.
கடந்த 8-ம் தேதியே உச்ச நீதிமன்றம் நியமித்துள்ள மேற்பார்வைக் குழுவில் தமிழகத்தின் பிரதிநிதியாக காவேரி தொழில்நுட்பக் குழுவின் தலைவரான இரா.சுப்ரமணியன் நியமிக்கப்பட்டுள்ளார். மேலும், மத்திய நீர்வளக் குழுமம் ஒரு பிரதிநிதியையும் கேரள அரசு அதன் பிரதிநிதியையும் நியமிக்க வேண்டி தமிழக அரசின் தலைமைச் செயலாளரிடமிருந்து 8-ம் தேதியே மத்திய நீராதார அமைச்சக செயலருக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. இவை அனைத்தும் என்னுடைய உத்தரவின் பேரில் நடந்து வருகின்றன.
தமிழக அரசின் கடிதத்தின் மீது தற்போதுள்ள மத்திய காங்கிரஸ் கூட்டணி அரசு விரைந்து நடவடிக்கை எடுக்குமா என்பது தெரியவில்லை. இருப்பினும் மே 16-க்குப் பிறகு மத்தியில் ஆட்சி மாற்றம் ஏற்படுவது உறுதி. அந்த ஆட்சியின் கொள்கைகளை நிர்ணயிக்கும் சக்தியாக அதிமுக விளங்கும். அப்போது உடனடியாக மேற்பார்வைக் குழு அமைக்கப்பட்டு பணிகள் துரிதமாக நடக்கும்.
மத்தியிலும், மாநிலத்திலும் அதிகாரத்தில் இருந்தபோது நதிநீர்ப் பிரச்சினையில் எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் கோட்டை விட்டுவிட்டு, இப்போது மக்களைக் குழப்புகிறார் கருணாநிதி. தென் தமிழக விவசாயி களின் வாழ்வாதாரப் பிரச்சினை யான முல்லைப் பெரியாறு பிரச்சினையை இனிமேலும் அரசியலாக்கி ஆதாயம் காண முயற்சிக்க வேண்டாம்.
இவ்வாறு அறிக்கையில் ஜெயலலிதா கூறியுள்ளார்.