

தோட்டக்கலை விவசாயிகள், பூக்கள் விவசாயம் செய்தோர் பாதிப்பு களையப்பட்டுள்ளதாக வேளாண்துறைச் செயலர் ககன்தீப்சிங் பேடி பேட்டி அளித்தார்.
தமிழகத்தில் கரோனா விவகாரம் தொடர்பான துறைச் செயலர்கள் அடங்கிய குழுவின் ஆலோசனைக் கூட்டம் தலைமைச் செயலர் சண்முகம் தலைமையில் இன்று தலைமைச் செயலகத்தில் நடந்தது. அதன் பின்னர் வேளாண்துறைச் செயலர் ககன்தீப்சிங் பேடி செய்தியாளர்களிடம் பேசியதாவது:
“தோட்டக்கலை விவசாயிகள் பாதிக்கப்பட்டதாகக் கூறப்பட்டது. 3500 ஹெக்டேரில் தோட்டக்கலை விவசாயம் நடக்கிறது. தோட்டக்கலை விவசாயிகள் விற்பனை பாதிக்கப்பட்டது. ஆனால் அதைச் சரி செய்ய அரசின் கொள்முதல் மூலம் பொதுமக்களிடம் நேரடியாக காய்கறிகளைக் கொண்டு செல்ல முயற்சி எடுக்கப்பட்டு சரி செய்யப்பட்டுள்ளது.
5421 மொபைல் யூனிட்ஸ் மூலம் காய்கறிகள் பொதுமக்களிடம் நேரடியாக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. சென்னை மாநகராட்சி, சிஎம்டிஏ, உள்ளாட்சித் துறை மூலம் நேரடிக் கொள்முதல் செய்யப்படுகிறது. 3,344 டன் மொபைல் யூனிட் மூலம் 1,100 மினி ட்ரக் மூலம் சென்னை மாநகராட்சி 4,200 தள்ளுவண்டிகள் மூலம் காய்கறிகளை விநியோகம் செய்கின்றனர்.
குளிர்பதனக் கிடங்கை விவசாயிகள் பயன்படுத்திக்கொள்ளலாம். அதற்கான கட்டணம் கிடையாது. பூக்கள் சாகுபடி பாதிக்கப்பட்டது உண்மைதான். பொதுவாக பூக்கள் திருமணம், பொது நிகழ்ச்சி, கோயில் விழாக்களில்தான் பயன்படும். தற்போது ஊரடங்கால் பூக்கள் விற்பனை கடுமையாக பாதிக்கப்பட்டிருப்பது உண்மை. இதற்கு நாங்கள் ஒரு யோசனை செய்தோம். சென்ட் தயாரிப்பு நிறுவனங்களுடன் பேசி பூக்களைக் கொள்முதல் செய்யச் சொன்னோம்.
கூடுதலாக இந்தக் காலகட்டத்தில் சென்ட் தயாரியுங்கள். ஊரடங்கு காலம் முடிந்தவுடன் உங்கள் விற்பனையை அதிகரிக்க வழி செய்கிறோம் என்று சொன்னதன் அடிப்படையில் 35 டன் பூக்களை திண்டுக்கல், திருவண்ணாமலை, மதுரை, கோவைக்கு அனுப்ப ஆரம்பித்துவிட்டோம். வாழைப்பழம், தர்பூசணியை 1,200 டன் அளவில் மற்ற மாநிலங்களுக்கு அனுப்பியுள்ளோம்.
முக்கியமான அத்தியாவசியப் பொருட்கள் தங்கு தடையின்றி வர அந்தந்த மாநிலங்களில் பேசியிருக்கிறோம். தமிழ்நாடு மாதிரி மற்ற மாநிலங்களுக்கும் கவனத்தைக் கொண்டு சென்று தடையின்றி வரப் பேசியுள்ளோம், அதேபோன்று தனியார் நிறுவனத் தயாரிப்புகளை மாவட்டந்தோறும் மளிகைக் கடைகளில் கொடுக்கவும் ஏற்பாடு செய்துள்ளோம்”.
இவ்வாறு ககன்தீப்சிங் பேடி தெரிவித்தார்.