Published : 13 Apr 2020 07:44 PM
Last Updated : 13 Apr 2020 07:44 PM

மேலும் 98 பேருக்கு கரோனா தொற்று: பாதிப்பு எண்ணிக்கை 1,173 ஆனது 

தமிழகத்தில் கரோனா தொற்று பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,173 ஆக அதிகரித்துள்ளது. இன்று ஒரே நாளில் 98 பேருக்கு கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கரோனா தொற்று ஏற்பட்டவர்கள் மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சையில் உள்ளனர். தொற்று சந்தேகத்தின்பேரில் சிகிச்சையில் உள்ளவர்கள் வீடுகளில், அரசுக் கண்காணிப்பில் தனிமையில் வைக்கப்பட்டுள்ளனர். பலர் குணமடைந்து சென்றுள்ளனர்.

இதுகுறித்து நாள்தோறும் தகவல் சொல்லும் பொது சுகாதாரத்துறை செயலர் பீலா ராஜேஷ் இன்றும் சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:

'' தமிழகம் முழுவதும் வீட்டுக் கண்காணிப்பில் உள்ளவர்கள் 33,850 பேர். அரசுக் கண்காணிப்பில் உள்ளவர்கள் 136 பேர். 28 நாள் கண்காணிப்பில் இருந்து விடுபட்டவர்கள் எண்ணிக்கை 63,380.

தமிழகத்தில் தற்போதுள்ள ஆய்வகங்களின் எண்ணிக்கை 34. அதில் அரசு ஆய்வகங்களின் எண்ணிக்கை 25. தனியார் ஆய்வகங்களின் எண்ணிக்கை 9.

இதுவரை ஆய்வு செய்யப்பட்ட மாதிரிகள் எண்ணிக்கை 12,746. இதில் நேற்றுவரை நோய்த்தொற்று உறுதிப்படுத்தப்பட்டவர்கள் எண்ணிக்கை 1075. இன்று நோய்த்தொற்று உறுதிப்படுத்தப்பட்டவர்கள் எண்ணிக்கை 98. இதில் 91 பேர் ஒரே தொற்று மூலம் பாதிக்கப்பட்டவர்கள். மீதி 7 பேரில் ஏற்கெனவே தொற்று இருந்தவர்களுடன் பழகியவர்கள் 4 பேர். மீதி மூன்று பேர் மருத்துவர்கள், மருத்துவப் பணியாளர்கள் ஆவர். இதன் மூலம் மொத்தம் தொற்று பாதித்தவர் எண்ணிக்கை 1,173 ஆக அதிகரித்துள்ளது. இதில் 10 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் எண்ணிக்கை 31.

நோய்த்தொற்றிலிருந்து விடுபட்டு டிஸ்சார்ஜ் ஆனவர்கள் எண்ணிக்கை 58 . தீவிர சுவாசத்தொற்று பாதிப்பு காரணமாக அனுமதிக்கப்பட்டவர்களிடம் சாரி (SARI Test) கேஸ் 62. அதில் ஒன்றுகூட பாசிட்டிவ் இல்லை. அதுதான் நமது வெற்றி. பொது சுகாதாரம் குறித்த உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை விடுத்தது. அப்போது நோய்த்தொற்று வூஹானில் மட்டுமே இருந்தது.

அப்போது இந்தியாவுக்கே வரவில்லை. அப்போதே 5 லட்சம் 3 லேயர் முகக்கவசம், என்.95 முகக்கவசம் 50 ஆயிரம், கவச உடைகள் 40 ஆயிரம், 2500 வென்டிலேட்டர் இருந்தன. அதன் பின்னர் படிப்படியாக பிப்ரவரி மாதம் மீண்டும் இன்னொரு கொள்முதல் செய்தோம். 3 லேயர் மாஸ்க் ஒன்றரை கோடி ஆர்டர் செய்துள்ளோம், என்.95 முகக்கவசம் 40 லட்சம், கவச உடைகள் 21 லட்சம் ஆர்டர் கொடுத்துள்ளோம். வென்டிலேட்டர் 560 ஆர்டர் கொடுத்துள்ளோம்.

இப்படி மாநிலம் முழுவதும் தயார் நிலையில் உள்ளது. தற்போது 3 லேயர் முகக்கவசம் மட்டும் 65 லட்சம், என்.95 முகக்கவசம் 3 லட்சம், கவச உடை 2 லட்சம், 3371 வென்டிலேட்டர் உள்ளன. பிசிஆர் கிட் மத்திய அரசு கொடுத்தது 10 ஆயிரம், நாம் வாங்கியது 14,000 என 24,000 உள்ளன.

முதல்வர், தலைமைச் செயலர் தலைமையில் டாஸ் போர்ஸ் போட்டு அது தமிழகம் முழுவதும் நோய்த்தன்மை., அது எப்படி மாறும், எத்தனை மாவட்டங்களில் வரும், என்ன வகை சிகிச்சை என்பது குறித்து கண்காணித்துக்கொண்டே இருக்கிறோம். ரேபிட் டெஸ்ட் கருவி வரவில்லை என்று சும்மா இருக்கவில்லை.

பிசிஆர் டெஸ்ட் மூலம் தொற்று உள்ளவர்கள், தொடர்பில் உள்ளவர்கள் என வேகமாக ஆய்வு செய்து வருகிறோம். அனைத்து மெடிக்கல் காலேஜிலும் பிளாஸ்மா எடுத்து ஆய்வு நடத்த உத்தரவிட்டுள்ளோம். அனுமதி கிடைத்தவுடன் செய்ய ஆரம்பிப்போம்.

என்ஐஇ ( NIE- national istitute of epidemiology) தலைமை அலுவலகம் சென்னையில்தான் உள்ளது. இவர்களிடமும் ஆய்வு செய்யச் சொல்லியிருக்கிறோம். இவர்கள் சென்னை, வேலூர், கோவை, நெல்லை ஆகிய 4 கண்காணிப்பு வளையங்களில் உள்ள மாவட்டங்கள், சென்னை, ராணிப்பேட்டை, கோவை, திருப்பூர் , ஈரோடு,கோவை, நெல்லை, தூத்துக்குடி ஆகிய தனிமைப்படுத்துதலில் உள்ளவர்களில் சென்று ஆய்வு செய்து அறிக்கை அளிப்பார்கள்.

கரூரில் 28 பேரும் சிறப்பாக குணமடைந்து டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர். தற்போது சுய தனிமை, கண்காணிப்பு, தனிமைப்படுத்துதல் போன்றவை மட்டுமே இலக்கு. 10 வயதுக்குக் கீழ் உள்ள பாதிக்கப்பட்டவர்கள் 31 பேர் உள்ளனர். ஓரிரு நாளில் ஆய்வு குறித்த முடிவு வரும். அதை வைத்துச் சொல்கிறோம்”.

இவ்வாறு பீலா ராஜேஷ் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x