மதுரையில் ஒரே நாளில் 14 பேருக்கு கரோனா பாதிப்பு: மூன்று நாட்களுக்குப் பின் தொற்றுப் பட்டியலில் முன்னேறி அதிர்ச்சி

மதுரையில் ஒரே நாளில் 14 பேருக்கு கரோனா பாதிப்பு: மூன்று நாட்களுக்குப் பின் தொற்றுப் பட்டியலில் முன்னேறி அதிர்ச்சி
Updated on
1 min read

மதுரையில் கடந்த மூன்று நாளாக ஒருவருக்கு கூட ‘கரோனா’ தொற்று நோய் வராத நிலையில் இன்று (திங்கள்கிழமை) ஒரே நாளில் 14 பேருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் நேற்று வரை 1075 பேர் ‘கரோனா’ வைரஸ் தொற்று நோயால் பாதிக்கப்பட்டிருந்தனர். நோய் பாதிப்பை தொடர்ந்து தமிழகத்தில் உள்ள மாவட்டங்கள் சிவப்பு, ஆரஞ்சு, மஞ்சள் என்று தனியாக பிரிக்கப்பட்டிருந்தன.

இதில், மதுரை மாவட்டம் சிவப்பு பட்டியலில் வேகமாக ‘கரோனா’ பரவும் மாவட்டங்கள் பட்டியலில் இடம்பெற்றிருந்தது.

இருப்பினும் கடந்த 3 நாட்களாக தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் ‘கரோனா’ தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் மதுரை மாவட்டத்தில் இந்த நாட்களில் ஒரு நோயாளிக்கு கூட இந்த தொற்று நோய் உறுதி செய்யப்படவில்லை.

ஏற்கெனவே இந்த தொற்று உறுதி செய்யப்பட்ட பகுதிகள் ‘சீல்’ வைக்கப்பட்டு அங்குள்ள மக்கள் வெளியேற முடியாதப்படிக்கும், வெளியாட்கள் அந்த பகுதிக்கு வராதப்படிக்கு தடை செய்யப்பட்டது.

அதனால், மக்கள் மதுரை மாவட்டம் சிவப்பு பட்டியலில் இருந்தாலும் ஒரளவு ‘கரோனா’ கட்டுக்குள் இருப்பதாக மாவட்ட மக்கள் நம்பிக்கையுடன் இருந்தது.

இந்நிலையில் இன்று மாலை ‘கரோனா’ தொற்று நோய் கண்டறியப்பட்ட மாவட்டங்கள் பட்டியலையும் அதன் பாதிப்பு விவரத்தையும் சுகாதாரத்துறை செயலர் பீலா ராஜேஷ் வெளியிட்டார்.

அதில், மதுரையில் ஒரே நாளில் 14 பேர் பாதிக்கப்பட்டிருப்பதாக அறிவித்தார். அதனால், மதுரை மாவட்டத்தில் இந்த நோயால் பாதிக்கப்பட்டவர் எண்ணிக்கை 25 லிருந்து 39 ஆக உயர்ந்தது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in