பட்டம் விடுவதால் மின் விநியோகத்திற்கு ஆபத்து: மின்வாரிய அதிகாரிகள் எச்சரிக்கை; குழந்தைகளிடம் விளக்க பெற்றோருக்கு கோரிக்கை

படவிளக்கம்: மதுரை துணைமின் நிலையத்தில் உள்ள மின்கம்பிகளில் சிக்கியுள்ள பட்டம்
படவிளக்கம்: மதுரை துணைமின் நிலையத்தில் உள்ள மின்கம்பிகளில் சிக்கியுள்ள பட்டம்
Updated on
1 min read

குழந்தைகள் பட்டம்விட்டு விளையாடுவது அதிகரித்துள்ளதால் மின் விநியோகத்தில் பாதிப்பு ஏற்படுவதால் அதை தவிர்க்க வேண்டும் என மின்வாரியம் கோரிக்கை விடுத்துள்ளது.

இது குறித்து மதுரை மாநகர் மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் சி.வெண்ணிலா வெளியிட்டுள்ள அறிவிப்பில்:

கரோனா பரவலைத் தடுப்பதற்காக ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் வீட்டில் உள்ள மக்களுக்கு தடையற்ற மின்சாரம் வழங்கும் பணியில் மின்வாரியம் ஈடுபட்டுள்ளது.

இந்நிலையில், வீட்டில் இருக்கும் சிறுவர்கள், குழந்தைகள் பொழுதுபோக்கிற்காக பட்டம் விட்டு விளையாடுகின்றனர். வீட்டு மாடிகளில் இருந்தபடி பட்டம் விடுவது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

சிறுவர்கள் விடும் பட்டத்தின் நூல் அறுந்து விடுகிறது. அப்போது நூலுடன் பட்டமும் சேர்ந்து மின்பாதை, மின்கம்பம், மின்மாற்றி, துணைமின்நிலைய சாதனங்களில் சிக்கிக்கொள்கிறது.

இதனால் மின்தடை ஏற்படுவதுடன், விபத்திற்கும் வழிவகுக்கும். இதனால் ஏற்படும் மின்தடையை சரி செய்ய தாமதம் ஏற்படுகிறது. தடையற்ற மின்சாரம் வழங்குவதிலும் சிக்கல் ஏற்படுகிறது.

பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளிடம் பட்டம்விட்டு விளையாடுவது ஆபத்தை விளைவிக்கும் என்பதை எடுத்துரைத்து தடுக்க வேண்டும்.

தடையில்லா மின்சாரம் வழங்க மின்வாரியத்திற்கு ஒத்துழைக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in