Published : 13 Apr 2020 06:27 PM
Last Updated : 13 Apr 2020 06:27 PM

கள் இறக்கும் தொழிலை முடக்கிய கரோனா: கேரளத்தில் தவிக்கும் தமிழகத் தொழிலாளர்கள்

கரோனா ஊரடங்கால் கள் இறக்கும் தொழிலாளர்கள் வேலையிழந்திருக்கும் நிலையில், அவர்களுக்குக் கேரள அரசு நிவாரணத் தொகையாக ரூ. 10 ஆயிரம் வழங்கி வருகிறது. எனினும், அம்மாநிலத்தில் கள் இறக்கும் தொழிலில் ஈடுபட்டிருந்த தமிழகத் தொழிலாளர்கள், தங்கள் சொந்த ஊருக்கும் திரும்ப முடியாமல், நிவாரணத் தொகையும் கிடைக்காமல் திண்டாடி வருகிறார்கள்.

கேரளத்தின் பாலக்காடு மாவட்டம், கள் இறக்கும் தொழிலில் முதன்மை மாவட்டமாக விளங்கி வருகிறது. அதிலும் கள் இறக்குவதில் முதன்மை தாலுகாவாக விளங்கி வருவது சித்தூர். இங்கு ஆயிரக்கணக்கில் கள் இறக்கும் தொழிலாளர்கள் இருக்கிறார்கள். இவர்களில் தமிழகத்தைச் சேர்ந்த சுமார் 3,000 தொழிலாளர்களும் அடக்கம்.

இவர்களில் பெரும்பான்மையோர் மீனாட்சிபுரம், கோபாலபுரம், உழல்பதி, கோவிந்தாபுரம், வேலந்தாவளம், நடுப்புணி, கொழிஞ்சாம்பாறை, மூங்கில்மடை, வாளையாறு பகுதிகளில் வசிக்கின்றனர். இவர்கள் எல்லோருமே 50 முதல் 60 ஆண்டுகளுக்கு முன்னர் இந்த ஊர்களுக்கு வந்தவர்கள். இரண்டு, மூன்று தலைமுறைகளாக இவர்கள் இங்கே வசித்தாலும் சுமார் 300 பேர்தான் சொந்த வீடு, வசதிகளுடன் இருக்கிறார்கள். மற்ற யாருக்கும் ரேஷன் கார்டுகூட கிடையாது.

இதனால் சுமார் 2,500 தொழிலாளர் குடும்பங்கள், தாங்கள் கள் இறக்கும் தோப்புகளிலேயே குடிசைகள் அமைத்து வசித்து வருகின்றனர். கேரளத்தைப் பொறுத்தவரை கள்ளுக் கடை வைத்திருப்பவர்களுக்கும், கள் பானைகள் கட்டும் தென்னந்தோப்பு விவசாயிகளுக்கும் இடையே ஓர் ஒப்பந்தம் உண்டு. அந்த வகையில் கடைக்காரர்களே கள் இறக்கும் தொழிலாளர்களை வைத்துக்கொண்டு கள் இறக்கி கடைக்குக் கொண்டுவருவார்கள். அல்லது கள் இறக்கும் வேலையைக் கடைக்காரர்கள் ஒரு குத்தகைதாரருக்கு ஒப்படைத்துவிடுவதும், அந்தக் குத்தகைதாரர் கள் இறக்க ஆட்களை வேலைக்கு வைத்துக்கொள்வதும் உண்டு.

பணியிடத்திலேயே தங்குதல்
ஒவ்வொரு தொழிலாளியும் ஒரு நாளைக்கு 40 லிட்டர் முதல் 75 லிட்டர் வரை சீசனுக்குத் தகுந்த மாதிரி, கள் இறக்குவதுண்டு. அதற்கு லிட்டருக்கு ரூ.10 முதல் ரூ.14 வரை கூலி கிடைக்கும். இந்தத் தொழிலாளர்கள் எந்தத் தோப்பில் கள் இறக்குகிறார்களோ அங்கேயே, குடும்பத்துடன் (கள் இறக்கும் காலம் வரை) தங்கிக்கொள்ளலாம்.

இப்படி ஒரு தொழிலாளி குடும்பம் ஆண்டுக் கணக்கில்கூட ஒரே தோப்பில் தங்கிவிடுவதுண்டு. கள் இறக்காத காலத்தில் கள்ளுக் கடை முதலாளிகள் சிலர் இவர்களுக்குச் சம்பளம் கொடுப்பது உண்டு. சம்பளம் இல்லை என்று கைவிரிப்பவர்களும் இருக்கிறார்கள்.

கைக்கு எட்டாத சேம நல நிதி

கேரள அரசைப் பொறுத்தவரை இப்படி நிரந்தரமாகக் கள் இறக்கும் தொழிலாளர்களுக்கு நல வாரியம் அமைத்து அவர்களுக்காக சேம நல நிதியை உருவாக்கியுள்ளது. இதற்காக இத்தொழிலாளிகள் ஒவ்வொரு ஆண்டும் சிறிய தொகையை அந்த வாரியத்துக்குச் செலுத்திவருகிறார்கள். அதில் உள்ளவர்கள் பணிக்காலத்தில் இறந்தால் அவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.5 லட்சம், யூனியன் மூலம் ரூ.5 ஆயிரம், நலவாரியம் மூலம் ரூ.5 ஆயிரம் என்றெல்லாம் நிதி அளிக்கப்படுகிறது. இந்த வாரியத்தில் பதிவு செய்தவர்களில் பெரும்பாலானோர் இங்கே சொந்த வீடு உள்ளவர்கள், கேரள மாநிலத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் ஆகியோர்தான். தற்காலிகமாகத் தோப்புகளில் தங்கியிருக்கும் தமிழகத் தொழிலாளர்களுக்கு இந்த நிதியுதவி எதுவும் கிடைப்பதில்லை.

கரோனா காலத்தில்…
இப்போது கரோனா வைரஸ் தொற்று, ஊரடங்கு உத்தரவைத் தொடர்ந்து, கள் இறக்கி வந்த தோப்புகளில் எல்லாம் மரத்திலிருந்து கள் பானைகள் இறக்கப்பட்டுவிட்டன. தொழிலாளர்கள் மற்றவர்களைப் போலவே வேலையற்று வீட்டில் உள்ளனர். இந்தச் சூழ்நிலையில்தான், நலவாரியத்தில் பதிவு செய்துள்ள, கள் இறக்கும் தொழிலாளர்களுக்கு உதவித்தொகையாக ரூ.10 ஆயிரம் அறிவித்துள்ளது கேரள அரசு.

அதற்காகத் தொழிலாளர்களிடம் வங்கிக் கணக்கு எண் உள்ளிட்ட விவரங்கள் எல்லாம் வாங்கியுள்ளது. ரேஷன் பொருட்களையும் அளித்துள்ளது. தோப்புகளில் வசிக்கும் தமிழகத் தொழிலாளர்களுக்கு ரேஷனும் இல்லை, நிதியும் இல்லை என்ற நிலை உருவாகியுள்ளது. இப்படி மட்டும் இங்கே 2,500 குடும்பங்கள் நிர்க்கதியாக நிற்கின்றன.

இவர்கள் எல்லாம் கோவை, மேட்டுப்பாளையம், குன்னத்தூர், கோபி, பழநி, சத்தியமங்கலம், பொள்ளாச்சி, உடுமலை, காங்கயம், சேலம் பகுதிகளிலிருந்து வந்தவர்கள். தற்போது இவர்கள் தங்கள் சொந்த ஊருக்குப் போக முடியாமலும், இருக்கும் இடத்தில் உணவுப்பொருட்கள் கிடைக்காத நிலையிலும், அரசு தரும் சலுகைகள் பெற வாய்ப்பில்லாத நிலையிலும் வாடி வருகின்றனர்.

ஆட்சியரிடம் மனு
இந்நிலையில், ‘நலவாரியத்தில் உள்ளவர்களுக்கு அளிப்பது போல் ரூ.10 ஆயிரம் நிவாரணத் தொகை அளிக்காவிட்டாலும் பரவாயில்லை. சராசரி பொது மக்களுக்கு அளிக்கப்படும் ரேஷன் பொருட்களையாவது கேரள அரசாங்கம் வழங்க வேண்டும். தமிழகத்தில் வழங்கப்படும் ரூ.1,000 மட்டுமாவது நிவாரணத் தொகையாக வழங்க வேண்டும் என்று கோரி பாலக்காடு மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்திருக்கிறார்கள் தமிழகத் தொழிலாளர்கள்.


இதற்குக் கேரளத்தைச் சேர்ந்த தமிழ் அமைப்புகள் துணை நிற்கின்றன. இவர்களின் பிரச்சினையை முன்வைத்து கோரிக்கை வைக்கும் மூங்கில்மடையைச் சேர்ந்த சரவணனிடம் பேசினோம்.

“பொதுவாக வேலையில்லாத சமயங்களில் தோப்புகளில் தொழிலாளர்களைத் தங்கவிட மாட்டார்கள் தோப்புக்காரர்கள். எனவே, வேறுவழியின்றி வேறு தோப்புகளில் தங்கி பணியாற்றும் உறவினர்கள், நண்பர்களிடம் இத்தொழிலாளர்கள் தஞ்சம் புகுவார்கள். அங்கிருந்துகொண்டே வேறு தோப்புகளில் வேலை தேடி அலைவார்கள். அப்படி ஒரு தோப்பு அகப்பட்டவுடன் அங்கே குடிபெயர்வார்கள். இப்போது கரோனா வந்த பிறகு பல தோப்புகளிலிருந்து தொழிலாளர்கள் விரட்டப்படுகிறார்கள். ஆனால், முன்பு போல இவர்கள் தங்கள் உறவினர்கள், நண்பர்கள் தங்கியிருக்கும் தோப்புகளுக்குச் செல்ல முடியவில்லை. அப்படிச் சென்றால் அந்தத் தோப்புக்காரர்கள் தொழிலாளர்களைத் துரத்திவிடுவார்கள்.

கரோனா சூழல் இவர்களை எங்கேயும் செல்ல விடாமல் முடக்கி வைத்துள்ளது. இதையெல்லாம் கவனத்தில் கொண்டு இவர்களுக்கு உதவிகளைச் செய்ய வேண்டும் என்று கேரளத் தமிழ் பாதுகாப்பு அமைப்பு மூலம் ஆட்சியரிடம் கோரிக்கை வைத்துள்ளோம். முதல்வருக்கும் மனு அனுப்பியுள்ளோம்” என்றார் சரவணன்.

சரவணன், பேச்சிமுத்து

இதுகுறித்து கேரள தமிழ்ப் பாதுகாப்பு அமைப்பின் நிறுவனத் தலைவர் பேச்சிமுத்துவிடம் பேசினோம். “இவர்களுக்குச் சொந்த ஊரில் ரேஷன் கார்டுகள் உள்ளன. அங்கே சென்றிருந்தால்கூட தமிழக அரசு கொடுக்கும் ரேஷன் பொருட்களையும், உதவித் தொகையையும் வாங்கியிருக்க முடியும். ஆனால், அதைக்கூட பெற முடியாமல் இங்கே இப்படி சிக்கித் தவிக்கிறார்கள். இவர்களுக்காக நாங்கள் மனு அளிப்பதால்கூட பெரிய பயன் வந்துவிடும் என்று தோன்றவில்லை. இதைப் பற்றித் தமிழக முதல்வர், கேரள முதல்வரிடம் பேச வேண்டும்.

'தமிழகத்திலிருந்து இங்கே வந்து உழைத்துக் கொட்டிய மக்களுக்கு உரிய நிவாரணம் வழங்குங்கள்; குறைந்தபட்சம் தமிழகத்தில் அரசு கொடுக்கும் நிவாரணத்தையாவது இவர்களுக்குக் கொடுங்கள்' என்று தமிழக முதல்வர் கேட்டுக்கொள்ள வேண்டும். கரோனா பிரச்சினை தீரும் வரை இவர்கள் தங்கியிருக்கும் தோப்புகளிலிருந்து விரட்டப்படக் கூடாது என்றும் உத்தரவாதம் பெற வேண்டும்” என்றார் பேச்சிமுத்து.

நெருக்கடியான இந்தக் காலகட்டத்தில், பிற மாநிலத் தொழிலாளர்களுக்கு உரிய உதவிகள் செய்வதில் முதன்மை மாநிலமாகத் திகழ்கிறது தமிழகம். இந்நிலையில், நம்மவர்களைப் பிற மாநிலங்களில் இப்படி தவிக்க விட்டுவிடக் கூடாது என்பதே அனைவரின் கோரிக்கையாக உள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x