கரோனா நிவாரணத்திற்கு ஓய்வூதியத்தை வழங்கிய இந்திய கம்யூனிஸ்ட் முன்னாள் எம்எல்ஏ.,க்கள்

சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் ஜெயகாந்தனிடம் ஓய்வூதியப் பணத்தை முன்னாள் எம்எல்ஏ குணசேகரன் வழங்கினார்.
சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் ஜெயகாந்தனிடம் ஓய்வூதியப் பணத்தை முன்னாள் எம்எல்ஏ குணசேகரன் வழங்கினார்.
Updated on
1 min read

கரோனா நிவாரணத்திற்கு இந்திய கம்யூனிஸ்ட் முன்னாள் எம்எல்ஏக்கள் தங்களது ஒரு மாத ஓய்வூதியத்தை வழங்கினர்.

அதன்படி சிவகங்கை முன்னாள் எம்எல்ஏவும், மாநில நிர்வாக குழு உறுப்பினருமான குணசேகரன் மாவட்ட ஆட்சியர் ஜெயகாந்தனிடம் தனது ஒரு மாத ஓய்வூதியமான ரூ.20 ஆயிரத்தை வழங்கினார். தொடர்ந்து பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மனு அளித்தார்.

பிறகு அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: கரோனா வைரஸ் தொற்று தடுப்பு நடவடிக்கைளில் அரசு அதிகாரிகள் சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர்.

அதேபோல் தன்னார்வலர்களும் ஈடுபட்டு வருகின்றனர். ஊரடங்கால் பலர் உணவுப்பொருட்கள் கூட வாங்க பணம் இல்லாமல் தவிக்கின்றனர்.

இதனால் ஒவ்வொரு குடும்ப அட்டைதாரர்களுக்கும் தலா ரூ.10 ஆயிரம் வழங்க வேண்டும். அனைத்து பகுதிகளிலும் ஒரே சமயத்தில் கிருமிநாசினி தெளிக்க வேண்டும். ரேஷன்பொருட்கள் தாமதமின்றி கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

காய்கறி, பழங்கள், மளிகைபொருட்களை அரசே கொள்முதல் செய்து மக்களுக்கு நேரடியாக குறைந்த விலையில் வழங்க வேண்டும். சாலையோர வியாபாரிகள், ஆட்டோத் தொழிலாளர்களுக்கு நிவாரணம் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டபோதும், அதிகாரிகள் துணையோடு கள்ளச்சந்தையில் மதுபானம் கூடுதல் விலைக்கு விற்கப்படுகிறது. அதை தடுக்க வேண்டும்.

கிராமங்களில் இருந்து நகரங்களுக்கு செல்வதை தடுக்க ஏற்கனவே வாரச்சந்தை நடந்த ஊர்களில் காய்கறி, பழக்கடைகள் அமைக்க அனுமதிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in