

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் மேலும் 4 பேருக்கு கரோனா இருப்பதால் தடுப்பு நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்த வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது.
சிவகங்கை மாவட்டத்தில் ஏற்கனவே திருப்பத்தூரில் நான்கு பேர், இளையான்குடி, தேவகோட்டையில் தலா ஒவருக்கு கரோனா தொற்று இருந்தது. அவர்கள் சிவகங்கை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கரோனா தொற்று உள்ளோர் வசித்த பகுதிகளை சீல் வைத்து முழுமையாக கண்காணிக்க அரசு உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து திருப்பத்தூரில் அனைத்து கடைகளும் அடைக்க உத்தரவிடப்பட்டு, திடீரென விலக்கி கொள்ளப்பட்டது.
இதனால் கரோனா தொற்று பாதித்தோர் வசித்த பகுதிகளிலும் வாகனங்கள் தாராளமாக சென்று வருகின்றன.
சுகாதாரத்துறையினர் மட்டும் நோய் தொற்று உள்ளவர்களின் உறவினர்கள், நண்பர்கள் என அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களை கண்டறிந்து பரிசோதனை செய்து வருகின்றனர்.
திருப்பத்தூரில் இருதினங்களுக்கு முன்பு 40-க்கும் மேற்பட்டோரின் சளி மாதிரிகள் மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டன.
இதில் 4 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.
இதனால் அப்பகுதி மக்களிடம் ஒருவித அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. அதிகாரிகள் அலட்சியம் காட்டாமல் கரோனா தொற்று உள்ளோர் வசிக்கும் பகுதிகளில் தடுப்பு நடவடிக்கை தீவிரப்படுத்த வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது.
தடையை மீறி அனைத்து கடைகளும் திறப்பு:
சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் ஊரடங்கை மீறி அனைத்து கடைகளும் திறந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
கரோனா வைரஸ் தொற்றை தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. இதையடுத்து காய்கறி, பால், மளிகை, மருந்து கடைகள், உணவகம் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் கடைகளை தவிர, மற்ற கடைகள் திறப்பதற்கு தடை விதிக்கப்பட்டன.
இந்நிலையில் இன்று காலை சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்டது போன்று பூக்கடை, காலணி கடை , பாத்திரக்கடை போன்ற கடைகள் திறக்கப்பட்டன.
இதையடுத்து தடை உத்தரவு தளர்த்தப்பட்டதாக நகர் முழுவதும் தகவல் பரவியது. இதையடுத்து கல்லுகட்டி ,கோவிலூர் ரோடு உள்ளிட்ட பகுதிகளில் பொருட்கள் வாங்க மக்கள் குவிந்தனர்.
இதையறிந்த போலீஸார் திறந்திருந்த கடைகளை அடைக்குமாறு வியாபாரிகளை எச்சரித்தனர். வியாபாரிகள் கடைகளை அடைத்ததும் கூட்டமும் கலைந்தது.