

தமிழக விவசாயிகளின் உரத்தேவையை பூர்த்தி செய்ய 20 ஆயிரம் டன் பொட்டாஷ் உரம் இறக்குமதி செய்யப்பட்டு, கப்பல் மூலம் தூத்துக்குடி துறைமுகம் வந்து சேர்ந்துள்ளது.
இது குறித்து தூத்துக்குடி மாவட்ட வேளாண் இணை இயக்குநர் எஸ்.ஐ.முகைதீன் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பு:
தூத்துக்குடி மாவட்டத்தில் குறைந்த பரப்பில் காய்கறிகள், கோடை பருத்தி மற்றும் நிலக்கடலை சாகுபடி செய்யப்பட்டுள்ளது. மாவட்டத்தில் சாகுபடி செய்யப்பட்டுள்ள வேளாண் மற்றும் தோட்டக்கலை பயிர்களின் உரத்தேவையை பூர்த்தி செய்ய நடப்பு மாதம் யூரியா 1700 மெட்ரிக் டன், டி.ஏ.பி. 1460 மெட்ரிக் டன், பொட்டாஷ் 620 மெட்ரிக் டன் மற்றும் காம்ப்ளக்ஸ் உரங்கள் 1370 மெட்ரிக் டன் தேவைப்படுகிறது.
இதனை சமாளிக்க தனியார் உர விற்பனை நிலையங்கள் மற்றும் கூட்டுறவு சங்கங்களில் யூரியா 2048 மெட்ரிக் டன், டி.ஏ.பி. 1621 மெட்ரிக் டன், பொட்டாஷ் 1034 மெட்ரிக் டன் மற்றும் காம்ப்ளக்ஸ் 2363 மெட்ரிக் டன் என போதுமான அளவில் இருப்பு உள்ளது.
மேலும், நடப்பு மாதம் எம்.எப்.எல். உர நிறுவனம் மூலம் 342 டன் மெட்ரிக் டன் யூரியா பெறப்பட்டு தேவைப்படும் இடங்களில் இருப்பு வைக்கப்பட்டுள்ளது.
மேலும், மாநில அளவில் உரத்தேவைகளை பூர்த்தி செய்ய ஏதுவாக 20,006 மெட்ரிக் டன் பொட்டாஷ் உரம் இறக்குமதி செய்யப்பட்டுள்ளது.
ஐ.பி.எல். நிறுவனம் மூலம் இறக்குமதி செய்யப்பட்ட உரம் தூத்துக்குடி துறைமுகத்துக்கு கப்பல் மூலம் வந்தடைந்துள்ளது. உரத்தின் தரத்தை ஆய்வு செய்ய 5 மாதிரிகள் ஆய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளது.
கப்பலில் இருந்து இறக்கப்படும் உரம், மூடைகளில் பேக்கிங் செய்த பின்னர் மாநிலத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களுக்கும் தேவைக்கேற்ப அனுப்பப்படும் என, அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.