

தென்காசி மாவட்டத்தில் நன்னகரத்தில் 2 பேர், புளியங்குடியில் ஒருவர் என 3 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்நிலையில், புளியங்குடியைச் சேர்ந்த 72 வயது முதியவர் ஒருவருக்கு நேற்று கரோனா தொற்று கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து, அவரும் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
ஏற்கெனவே பாதிக்கப்பட்ட 3 பேருக்கு கரோனா தொற்று எப்படி ஏற்பட்டது என்பது கண்டறியப்பட்ட நிலையில், புதிதாக பாதிக்கப்பட்ட 72 வயது முதியவருக்கு யார் மூலம் தொற்று ஏற்பட்டது என்பது இன்னும் கண்டறியப்படவில்லை.
இவர், வெளிநாடு, வெளி மாநிலத்துக்கு செல்லவில்லை என்பது தெரியவந்துள்ளது. அதனால், சமீபத்திய நாட்களில் இவர் எங்கெல்லாம் சென்றார் என்பது குறித்து சுகாதாரத் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும், அவரது குடும்பத்தினர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். அவர்களது ரத்த மாதிரி மற்றும் அவர்களுடன் சமீபத்திய நாட்களில் தொடர்பில் இருந்தவர்கள் என 44 பேருக்கு ரத்த மாதிரிகள் பரிசோதனைக்காக சேகரிக்கப்பட்டுள்ளது.
மேலும், அப்பகுதியில் வெளிநாடு சென்று வந்தவர்கள் சிலர் வீட்டுத் தனைமை கண்காணிப்பில் உள்ளனர். அவர்கள் யாருக்கும் இதுவரை கரோனா அறிகுறி கண்டறியப்படவில்லை. இருப்பினும், முன்னெச்சரிக்கையாக அவர்களது ரத்த மாதிரியும் சேகரிக்கப்பட்டுள்ளது.
புளியங்குடியில் ஏற்கெனவே ஒரு பகுதி தனிமைப்படுத்து கண்காணிக்கப்படும் நிலையில், புதிதாக தொற்று கண்டறியப்பட்டவரின் வீடு உள்ள பகுதியும் தனிமைப்படுத்தப்பட்டு சுகாதாரப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது என்று சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.