

ராமநாதபுரம் மாவட்டத்தில் விதிமுறைகளை மீறி மதப் பிரச்சாரத்தில் ஈடுபட்ட இந்தோனேசிய தம்பதிகள் உள்ளிட்ட 9 பேர் புழல் சிறைக்கு மாற்றப்பட்டனர்.
இந்தோனேசியா நாட்டைச் சேர்ந்த ஜெய்லாணி(42), இவரது மனைவி சித்தி ரொகானா(45), ரமலன் பின் இபுராகீம்(47), இவரது மனைவி அமன் ஜகாரியா(50), முகம்மது நஷீ்ர் இபுராகீம்(50), இவரது மனைவி ஹமரியா(55), மரியோனா(42), இவரது மனைவி சுமிஷினி(43) ஆகிய 4 தம்பதிகள், கடந்த மார்ச் 8-ல் ராமநாதபுரம் மாவட்டத்திற்கு வந்தனர்.
இவர்கள் பல்வேறு பள்ளிவாசல்களில் மதப்பிரச்சாரத்தில் ஈடுபட்டுவிட்டு, மார்ச் 24-ல் ராமநாதபுரம் வந்தபோது, போலீஸார் பிடித்து சுகாதாரத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.
அதன்பின் இவர்களுக்கு நடத்தப்பட்ட கரோனா பரிசோதனையில் தொற்று இல்லை என்பது உறுதி செய்யப்பட்டு, அவர்கள் தங்கியிருந்த வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்டனர்.
இந்நிலையில் சுற்றுலா விசாவில் வந்து முறையான அனுமதி பெறாமல், ஊரடங்கை மீறி, தொற்று பரவும் வகையில் மதப்பிரச்சாரத்தில் ஈடுபட்டதாக, இந்தோனேசியாவைச் சேர்ந்த 8 பேர் மற்றும் அவர்களுக்கு உதவியதாக ஆர்.எஸ்.மங்கலத்தைச் சேர்ந்த மூமின் அலி, ராமநாதபுரம் பாரதிநகரைச் சேர்ந்த அசரப் அலி, முகம்மது காசீம் ஆகியோர் மீது கடந்த 5-ம் தேதி கேணிக்கரை போலீஸார் வழக்கு பதிவு செய்தனர்.
அதனையடுத்து இந்தோனேசியாவைச் சேர்ந்த 8 பேரும் ராமநாதபுரத்தில் உள்ள ஒரு தனியார் விடுதியில் தனிமைப்படுத்தி தங்க வைக்கப்பட்டனர்.
தொடர்ந்து கடந்த 9-ம் தேதி போலீஸார் இந்தோனேஷியாவைச் சேர்ந்த 8 பேர் மற்றும் மூமுன் அலி ஆகியோரை கைது செய்து, ராமநாதபுரம் எண்.2 நீதித்துறை நடுவர் ராதாகிருஷ்ணன் முன்னிலையில் ஆஜர்படுத்தினர்.
அவர்களை 15 நாளில் நீதிமன்றக் காவலில் பரமக்குடி கிளைச் சிறையில் அடைக்க நீதித்துறை நடுவர் உத்தரவிட்டார். பரமக்குடி கிளைச் சிறையில் போதிய வசதிகள் இல்லாததால் போலீஸார் மீண்டும் ராமநாதபுரம் தனியார் விடுதியில் சிறைப்படுத்தினர்.
இந்நிலையில் பரமக்குடி கிளைச் சிறை கண்காணிப்பாளர் உத்தரவுப்படி இந்தோனேஷிய தம்பதிகள் உள்ளிட்ட 9 பேரையும் புழல் சிறையில் அடைக்க போலீஸார் நேற்று அழைத்துச் சென்றனர்.